காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் தமிழக இளைஞர் பெங்களூருவில் தாக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியுள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாம் தமிழர் கட்சியினர், தமிழர் தேசிய முன்னையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

இதனிடையே, காவிரியில் இருந்து கடந்த 5ஆம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்தமனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்துக்கு நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கவும், 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரைத் திறக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு மற்றும் தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் காரணமாக பெங்களூருவில் கன்னட அமைப்பினர், தமிழர்களின் கடைகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. மைசூரில் தமிழக பதிவெண் கொண்ட வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. பதற்றம் காரணமாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன.

இதற்கு பெங்களூரு காவல்துறை ஆணையர், தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.