அரசியல் இந்தியா சமூகம்

பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை: வா. மணிகண்டன்

வா. மணிகண்டன்
வா. மணிகண்டன்
வா. மணிகண்டன்

இரண்டு மூன்று தினங்களாக நிறையப் பேர் விசாரித்துவிட்டார்கள். ‘உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே?’ என்று. உண்மையில் பெங்களூரில் பிரச்சினையே இல்லை. வியாழக்கிழமை இரவு எப்பொழுதும் போலத்தான் கிளம்பி ஊருக்குச் சென்றோம். TN 42 என்ற பதிவு எண் கொண்ட மகிழ்வுந்து. சற்று பயமாகத்தான் இருந்தது. யாராவது கல்லை விட்டு எறிவார்களோ என்று தயக்கத்தில்தான் ஓட்டினேன். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கர்நாடகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சில இளைஞர்கள் அத்திபள்ளியில் நின்று கொண்டிருந்தார்கள். திக்கென்றிருந்தது. அவர்கள் பாட்டுக்கு அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். நிம்மதியாக இருந்தது. திரும்ப ஊருக்கு வரும் போது ஓசூர் வரைக்கும் தமிழகப் பேருந்து. அங்கேயிருந்து பெங்களூருவுக்கு கன்னட பேருந்து. பந்த் அன்று மட்டும் கடைகளை மூடி வைத்திருந்தார்கள். சாலைகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் சென்றார்கள். தமிழ் சேனல்களை மாலை ஆறு மணி வரைக்கும் துண்டித்திருந்தார்கள். ஊடகங்களில் காட்டப்பட்ட அளவுக்கு பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை.

பெங்களூரில் தமிழர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக எந்த வீட்டிலும் புகுந்து ரகளை செய்யவில்லை. தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களையோ, தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வண்டிகளையோ குறி வைத்துத் தாக்கவில்லை. நேற்றிலிருந்து பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. சந்தோஷ் என்கிறவரை சில கன்னடர்கள் அடிக்கும் சலனப்படம் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ராமேஸ்வரத்தில் கர்நாடக எண் கொண்ட வண்டிகளைத் தாக்கியிருக்கிறார்கள். சென்னையில் கர்நாடக்காரர் நடத்தும் விடுதியொன்றில் பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார்கள். இனி மெல்ல பற்றிக் கொள்ளும் என்றுதான் நினைக்கிறேன். கையில் கட்டை கிடைத்தால் ஊரான் வீட்டு கண்ணாடிகளை எல்லாம் அடித்து உடைப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். கடன் வாங்கி வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் கன்னடத்து ஓட்டுநரா தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டாம் என்று சொன்னான்? அவன் வண்டியை உடைத்தால் என்ன பிரயோஜனம்?

மடத்தனமான இவர்களின் மொழி, இனவெறிக்கு அப்பாவிகள்தான் சிக்கிக் கொள்கிறார்கள்.

பெங்களூரில் மட்டும் நாற்பது முதல் நாற்பத்தைந்து சதவீதம் தமிழர்கள் இருப்பார்கள். மடிவாலா மார்க்கெட்டில் அத்தனை பேரும் தமிழர்கள்தான். தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்கள், கட்டிட வேலை செய்கிறவர்களில் தொண்ணூறு சதவீதம் நம்மவர்கள்தான். எலெக்ட்ரானிக் சிட்டியில் கல்லை எடுத்து வீசினால் அது குத்துமதிப்பாக விழுந்தாலும் கூட தமிழன் ஒருவன் மீதுதான் விழும். பெங்களூரில் எந்தக் குடிசைப்பகுதியிலும் தமிழர்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள். இந்தச் சூழலில் கன்னடத்தவர்கள் இறங்கி விளாசினால் என்ன ஆகும்? இங்கே அடிக்கிற வட்டாள் நாகராஜின் ஆட்களுக்கும் பிரச்சினையில்லை. அங்கே அடிக்கிற தமிழ் முட்டாள்களுக்கும் பிரச்சினையில்லை. அடி வாங்குகிற பெங்களூர் தமிழனுக்கும், ராமேஸ்வரத்தில் சிக்கித் தவிக்கிற கன்னடக் குடும்பங்களுக்கும்தான் அத்தனை அக்கப்போர்களும்.

சந்தோஷ் அடிக்கப்பட்ட பிரச்சினை குறித்து ஒரு போலீஸ் அதிகாரியிடம் விசாரித்த போது ‘இடம் பொருள் ஏவல்ன்னு ஒண்ணு இருக்குல்ல? பெங்களூரில் இருந்தபடியே ஆங்கிலத்தில் கன்னட நடிகர்களைத் திட்டி எழுதியிருக்காரு…ஷேர் ஆகியிருக்கு…கூட படிக்கிற கன்னடப்பசங்களே போட்டுக் கொடுத்திருக்காங்க…வந்து அடிச்சிருக்காங்க…இப்போத்தான் கேஸ் புக் ஆகியிருக்கு’ என்கிறார். கன்னட அரசியல்வாதிகள் அடித்தவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்களாம். ‘இங்கேயிருந்துட்டு இப்படி பேசக் கூடாதுன்னு பயம் இருக்கட்டும்’ என்று சொல்வதாகச் சொன்னார். அவரவருக்கு அவரவர் தரப்பு நியாயங்கள்.

பெங்களூரிலும் தமிழர் அமைப்புகள் இருக்கின்றனதான். ஒன்றிரண்டு அமைப்பு நிர்வாகிகளிடம் பேசினால் ‘தப்பை நம்ம பக்கம் வெச்சுட்டு எப்படி போய்க் கேட்கிறது?’ என்கிறார்கள். அது மட்டும் காரணமில்லை. இங்கேயும் தமிழர் அமைப்புகளிடம் ஒற்றுமை எதுவுமில்லை. சங்கங்களில் சாதிகள் உண்டு. முதலியார்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்கள், தலித்துகள் என்று சாதிய ரீதியில் பிரிந்து கிடக்கிறார்கள். ‘நாங்கள் செய்தோம்’ என்ற பெயர் கிடைத்தால் மட்டுமே இறங்குவார்கள். இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வார்கள். இன்னொரு சங்கத்தோடு கிஞ்சித்தும் இணையமாட்டார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப சாலமன் பாப்பையாவை அழைத்து பட்டிமன்றம் நடத்துவார்கள். தேவாவை வைத்து இன்னிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள். பொங்கல் வைப்பார்கள். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பார்கள். அவ்வளவுதான்.

பொதுவாக மாநில உரிமைக்கான பிரச்சினைகளின் போது கன்னட அமைப்புகள் ஒன்றிணைந்துவிடுகின்றன. கட்சிகள் கூட வேறுபாடுகளை மறக்கின்றன. கன்னட நடிகர்கள் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். காங்கிரஸ், பிஜேபி, ஜனதா தளத்தின் கொடிகளை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு மஞ்சள், சிவப்பு நிறமுடைய கர்நாடகத்தின் கொடியை மட்டுமே ஏந்துகிறார்கள். தமிழகத்தில் நிலைமை அப்படியா இருக்கிறது? போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம்- குறைந்தபட்சம் நாற்பது எம்.பிக்களையும் ஒற்றுமையாக இணைந்து பிரதமரைச் சந்திக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தச் சொல்லி முயற்சிக்கலாம். நான்கு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து ஒரு பேச்சு வார்த்தையை நடத்தலாம் என்று சித்தராமையா கோரிக்கை வைத்திருக்கிறார். அப்படியொரு கூட்டம் நடந்தால் தமிழகத்திலிருந்து யார் கலந்து கொள்வார்கள் என்று நம் அத்தனை பேருக்கும் தெரியுமே.

பிரச்சினை என்று வந்துவிட்டால் கன்னடன் கன்னடனாக மட்டுமே இருக்கிறான். ஆனால் எப்பொழுதுமே தமிழன் தேவனாகவும், வன்னியனாகவும், தலித்தாகவும், முதலியாராகவும், திமுக்காரனாகவும், அதிமுகக்காரனாகவும், பாமகக்காரனாகவும் பிரிந்துதான் நிற்கிறான். இந்த லட்சணத்தில்தான் அப்பாவி கிடைத்தால் கும்மி நமது இன உணர்வைக் காட்டுகிறோம். இனாவானா ஒருவனின் வண்டியை உடைத்து மாநிலப் பற்றைக் காட்டுகிறோம். அப்பாவியையும், எளியவனையும் சாத்துவதன் வழியாக நம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது.

இவர்கள் உணர்வைக் காட்டுகிறேன் என்ற பெயரில் இருக்கிறவன் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

இப்பொழுதும் கூட ‘ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம். காவிரியைத் தஞ்சைக்குக் கொண்டு வருவோம்’ என்றெல்லாம் கர்ஜித்து எழுதலாம்தான் ஆனால் நாளைக்கே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் எனது வீடியோ வெளியாவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தது போலாகிவிடும். அடித்து உதைப்பவன் என்ன சொல்கிறான் என்றே புரியாமல் அறையும் உதையும் வாங்க முடியாது. இதைக் கூட யாராவது அச்சு எடுத்துக் கன்னடக்காரர்களிடம் போட்டுத் தருவதாக இருந்தால் கடைசி வார்த்தையைத் துண்டிக்காமல் கொடுக்கவும்.

ஜெய் கர்நாடகா!

வா.மணிகண்டன், எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நாவல் மூன்றாம் நதி.
Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s