பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு நெருங்குகையில், சென்னை வட்டாரத்தில் திடீர் மழைச்சூழல் தொற்றிக்கொண்டது. ஆனாலும் திட்டமிட்டபடி நிகழ்வு நடந்தது. இதில் மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் பேச்சு, தீர்மானிக்கப்பட்டிருந்த பொருளை மையப்படுத்தியதாக அமைந்தது.
 அரவிந்தன் சிவக்குமார்
மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்

 

அவரின் பேச்சிலிருந்து:

“ஒரு வாரமாக நாடு முழுவதும் ஊடகங்களில் அமங்தே பற்றிய செய்திகள் வலம்வந்தன. யார் அந்த அமங்தே ஒரிசாவில் கல்கந்தி மாவட்டத்தில், ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், தன் மனைவியின் சடலத்தைத் தூக்கிச்சென்றவர். அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி கொடுக்கப்படவில்லை. ஊடகங்களில் இது பற்றி செய்திகள் வந்தன. அமரர் ஊர்தி தராததுதான் பிரச்னையா? அமங்தே, பெண். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவரின் இறப்புக்குக் காரணம், காசநோய். எல்லாருக்கும் இந்த நோய் வருவதில்லை. அந்த அம்மாவுக்கு காசநோய் வந்ததற்குக் காரணம் என்ன? மருத்துவமனைக்குப் போக வசதி இருந்ததா? ஆரம்பகட்டத்தில் அவருக்கு நோய் இருக்கிறதென்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்களா? அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததா? இப்படி பல கேள்விகளை நாம் கேட்காமலேயே, அமரர் ஊர்தி எனும் விசயத்தை மட்டுமே முன்னிறுத்தி, அரசியலாக்கி, அங்கு பிப்ரவரியிலிருந்து நடைமுறையிலிருக்கும் அமரர் ஊர்தித்திட்டத்தை ஊழல் மலிந்தது என்று மட்டுமே விசயத்தைச் சுருக்கி, சுகாதாரம் குறித்த பல கேள்விகளை, அந்த சடலத்தோடு சேர்த்து, அந்த துணியோடு அதை மறைத்து மண்ணில் போட்டு புதைத்துவிட்டோம்.

 

இத்தனை நாட்கள் பிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடியின மக்களைப் பற்றியோ அவர்களின் வாழ்வைப் பற்றியோ எந்த கேள்வியுமே எழுப்பாமல், செத்த பின்பு சடலத்தைத் தூக்கிப்போவதை எல்லாரும் கண்ணீர்விட்டுப் பார்ப்பது.. இதன் பின்னால் இருக்கும் காரணங்களைப் பேசாமல் இருக்கும் மவுனம், அதற்கான அரசியல்… இதைப் பற்றி கேள்வி எழுப்பவேண்டும்.

 

ஒருவருக்கு நோய் வருகிறதா, இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது. சமூகத்தில் கீழ்ப்படிநிலையில் இருக்கும் ஒருவர், பெண், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவராக  உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கும் ஒருவர், அவருக்குண்டான சிக்கல்களில், ஊட்டச்சத்து குறைபாட்டால் நெருக்கடியால், சமூக பொருளாதாரத் தாழ்நிலையால் அவரின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. இதை எங்கும் யாரும் சொல்லித்தருவதும் கிடையாது; கேள்வி கேட்பதும் இல்லை. உடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் என்றால் அதை அரசியல் என ஒதுக்கிவிடுகிறார்கள். உறுதியாக, உடல் ஆரோக்கியம் என்பது அரசியல்தான்!

 

காரில் போகும் பணக்காரருக்கு காசநோய் வந்தால், மாத்திரை சாப்பிட்டு, ஏசி அறையில் இருந்து குணமடைந்துவிடுவார். அதுவே ஏழை நோயாளி என்றால் ஒரு கட்டத்தில் இறந்துதான் போகவேண்டிய நிலை.!

 

பெண்கள் மீதான வன்முறையில்.. கத்தியால் வெட்டக்கூடிய, கொலைசெய்யக்கூடியவற்றை கண் முன்னே பார்க்கிறோம். ஆனால் கண்களுக்கே தெரியாமல், சமூகக் கட்டமைப்பு, சமூக நிறுவனங்கள் மக்களின் அடிப்படையாகத் தேவையான உணவு, நல்ல வேலை, உடை, இருப்பிடம் ஆகியவற்றைப் பூர்த்திசெய்யாமலேயே தராமல், பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கி, மக்களைத் துன்புறுத்தி இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் பார்ப்பதே இல்லை. இதைத்தான் கட்டமைப்பு வன்முறை என்கிறோம்.

 

இதற்கு உதாரணம் நான் ஒண்ணும் சொல்லணும். நெல்லை மாவட்டம் தென்காசி பக்கத்தில் அரியபுரம் எனும் கிராமம். அங்குள்ள தலித் பெண் ஒருவர், குழந்தையுடன் கிணற்றில் குதிக்கிறார். பக்கத்தில் இருந்த ஒருவர் பெண்ணைக் காப்பாற்றுகிறார். குழந்தை மட்டும் இறந்துபோனது. உடனே அந்தம்மாவை அம்பாசமுத்திரம் போலீசில் குற்றம்சாட்டி நீதித்துறை நடுவர் முன்னால் நிறுத்த, அவரின் மனநிலை சரியில்லை என பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்துக்குக் கொண்டுவரப்பட்டார். கட்டமைப்பின் வன்முறையானது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதற்கு சான்று. இவருக்கு பீடிசுற்றும் தொழில், மாதம் 200 ரூபாய் கூலி. கணவருக்குக் கட்டிட வேலை, மாதம் ரூ.2 – 3ஆயிரம். 3.5 ஆயிரத்தில குடும்பததை நடத்தணும். மகளிர் சுய உதவிக்குழுவிடம் கடன் வாங்குகிறார். இதில் மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பினியானார், இந்த அம்மா. கணவருக்கு திடீரென வேலை இல்லை. பொருளாதாரப் பிரச்னை. இவரின் சம்பளத்தில்தான் சமாளித்தாக வேண்டும். அதைச் சமாளிக்க கடன்.. சுமைகள் அதிகமாகிறது. இதற்கிடையில் கணவரின் குடிப்பழக்கம்.. மூன்றாவது குழந்தை பிறக்கிறது.. பெண் குழந்தை.. இவர் ஒரு முடிவு எடுக்கிறார், தத்து கொடுக்கிறார். அதற்குமுன் மூன்றுநான்கு முறை குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சிக்குப் போகிறார். ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுகிறார்.

 

தத்து கொடுத்த பின்னரும் சிக்கல்கள் அதிகமாகிறது. தனியார் மருத்துவரிடம் போகிறார், கடன் வாங்கி சிகிச்சைக்கு செலவுசெய்கிறார்கள். பூசாரியிடம் போகிறார்கள். 200ரூவா, 300 ருவா சம்பளம். இதற்குத் தீர்வு சுய உதவிக்குழு.. கடன் அதிகமாகி, பண நெருக்கடி, மன நெருக்கடி. ஒரு கட்டத்தில் மாத்திரைகளை நிறுத்துகிறார்..இறுதியாக குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயல்கிறார்.. இப்படி தமிழகத்தில் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொள்வது, நம் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கணும்.

 

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல், ஒண்ணு. உலக அளவில் இந்தியாவிலுள்ளவர்கள் 34% மனச்சோர்வில இருக்கிறாங்க. தற்கொலையிலயும் இந்தியாதான் முன்னிலையில் இருக்கு. இதிலுள்ள சிக்கல் அதிகமாகிட்டு இருக்கு. கட்டாயமாக, நெருக்கடி நிறைந்த சூழலில் வாழ்ந்துகிட்டு இருக்கோம். வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்ல.பல்வேறு நெருக்கடிகளில் வாழும்போது அது உளவியல் சிக்கலாக மாறும். பதற்றம், கவலை அதிகமாகிறது. அது உடல்ரீதியாக, உள்ளரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் வாழும் சூழலைப் புரிந்துகொள்ளாமல், அதை எதிர்த்து நாம் செயல்படாமல் தீர்வு காணமுடியாது.

– நம் செய்தியாளர்.

(தொடரும்)