காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டின் கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்த 52 பேருந்துகள் தீக்கிரையாகின.

பேருந்துகள் எரிக்கப்பட்ட பதற்றமான சூழல் நிலவியபோதும் , அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, பேருந்தின் ஓட்டுனர்கள் 31 பேரும் அங்கிருந்த ராஜராஜேஸ்வரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததுடன், பாதுகாப்பும் கோரியுள்ளனர்.

கலவர பயம் காரணமாக இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே அமர்ந்திருந்த, சேலம், தருமபுரி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தமிழக ஓட்டுனர்கள், தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறும் காவல் அதிகாரிகளிடம் மன்றாடியுள்ளனர்.

இருப்பினும் அங்கு நிலவிய சூழல் காரணமாக, தங்களால் எவ்வித உதவியும் செய்ய இயலாது என்று கர்நாடக காவல்துறை அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.  இந்நிலையில், சாமராஜ்பேட் பகுதியில் “சிவா டிராவல்ஸ்” என்ற  நிறுவனம் நடத்தி வரும் சிவண்ணா என்ற கன்னடருக்கு இந்த தகவல் கிடைக்க, அவர் உடனடியாக தமிழக ஓட்டுனர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்.

சற்று தாமதிக்காமல், தன்னுடைய நிறுவன வாகனங்கள் மற்றும் ஒட்டுனர்களுடன் ராஜராஜேஸ்வரி காவல் நிலையத்திற்கு சென்ற சிவண்ணா,  தமிழக ஓட்டுனர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து சென்றிருக்கிறார். எந்நேரம்  தாக்குதல் நடத்தப்படும் ? என்று எதுவும் தெரியாத அபாயகரமான நிலையிலும், 31  தமிழக ஒட்டுனர்களையும் பத்திரமாக அழைத்து சென்ற சிவண்ணா, ஓசூரில்  உள்ள கே.பி.என் அலுவலகத்தில் அவர்களை இறக்கி விட்டிருக்கிறார்.

“மிகுந்த ஆபத்தான சூழலிலும்,  எங்களது ஓட்டுனர்களை  பத்திரமாக ஓசூர் அழைத்து வந்த கன்னடர் சிவண்ணாவின் துணிச்சலையும், மனித நேயத்தையும்” பாராட்ட வார்த்தைகளே இல்லை. நாங்கள் சிவண்ணாவிற்கு கடன் பட்டுள்ளோம். தீர்க்கவே முடியாத கடன் அது” என்று இந்த சம்பவம் குறித்து கேபிஎன் நிறுவன மேலாளர் அன்சார் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் .

ஏராளமான கன்னட மக்கள், இந்த கலவர தருணத்தில் மிகுந்த அக்கறையுடனும், ஆதரவுடனும் நடந்து தமிழக மக்களை காப்பாற்றியதாக பெங்களுர் தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் தெரியாத,  டிஆர்பி பற்றிய விவரம் அறியாத எளிய மக்கள் எப்போதும் மனித நேயத்தின் பக்கமே இருந்து வருகிறார்கள். விவசாயிகளின் துயரம் அறிந்தவர்கள் அவர்களாகவே மட்டுமே இருப்பார்கள். இந்த நிலையிலும், சிவண்ணா போன்ற எளிய கன்னட மனிதர்கள், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரவேண்டும் என்று குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கைதானே வாழ்க்கை. நம்பிக்கைதானே சகோதரத்துவம். காவிரியினால், மற்றவர்களுக்கான ஒரு வேளை உணவு உருவாக்கும் விவசாயிகளை, அந்த நம்பிக்கைதானே அன்பின் நீண்ட வலிய நூலாக நம்மை இணைத்து கொண்டிருக்கிறது. அரசியலற்று, விவசாயிகளின் துயரங்களை விவசாயிகளே பேசி தீர்த்து கொள்ளும் நாள்  ஒன்று சிவண்ணா போன்றவர்களால் விடியும் என்ற நம்பிக்கையும் இப்போது வந்திருக்கிறது.

with Outputs from: Indian Express