வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன.

இந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ் கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனுடன் நட்புடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் திடீரென்று கம்பியால் தாக்கியதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர், பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என எழுவரின் விடுதலையை கோருபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.