கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு கடையடைப்புப் போராட்டத்துக்குத் திமுகவின் ஆதரவு அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது.இந்தப் போராட்டத்துக்கு திமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், தமாகா, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தி.மு. கழகம் ஆதரவு: மு. கருணாநிதி அறிக்கை

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு. கழகத்தின் ஆதரவினை அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையினை ஏற்று வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதென திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக்கிறது. எனவே தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவினைத் தந்து, போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடதுசாரிகள் ஆதரவு:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அமைக்கவில்லை. இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்திய அரசின் அரசியல் பொறுப்புணர்வற்ற போக்கே காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இரண்டு மாநிலங்களுக்கிடையில் மோதல் போக்கிற்கு இடமளிக்காமல் இப்பிரச்சனையில் சுமுக தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்திட காவரி மேம்பாட்டு ஆணையத்தையும், நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைத்து காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு  நிரந்தரத் தீர்வு காண அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள் சார்பில் 16-09-2016 அன்று நடைபெறவுள்ள கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோல, முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.

மதிமுக ஆதரவு: வைகோ அறிக்கை

காவிரிப் பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை செயல்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் கர்நாடக மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் தலைதூக்கி உள்ள வன்முறைகளை அம்மாநில அரசே ஊக்குவிக்கின்ற போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது.

கர்நாடகத்தில், தமிழக பதிவெண் கொண்ட 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் உட்பட 200 வாகனங்கள் கன்னட இனவெறிக் கும்பலால் தீ வைத்து எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன.

அப்பாவி தமிழர்கள் மீதும், தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மீதும் வன்முறை கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றது. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்காமல், கர்நாடக மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. அம்மாநில அரசை கண்டிக்காமல், மத்திய அரசு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது.

இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் சிக்கலுக்கு சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருவது தமிழ்நாட்டுக்கு எதிரான வஞ்சகப் போக்கு ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு படி தமிழகத்திற்கு உரிய நீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 16 இல் நடைபெறும் தொடர் வண்டி மறியல் போராட்டம், சாலை மறியல் அறப்போராட்டங்களில் மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டின் உயிர் ஆதாரமான காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு தமிழக மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தேமுதிக தனியாக போராட்டம்:

கர்நாடக மக்களின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து, 16-ம் தேதி தேமுதிக தலைமை கழக அலுவலகம் முன்பு கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசிக ஆதரவு: தொல் திருமாவளவன் அறிக்கை: 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.பிரதமர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைத்திட வகை செய்யவேண்டும். கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

காவிரி பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கப்படுவதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து, செப்டம்பர் 16-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் நலன் காக்க நடைபெறும் இந்தப் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது. அதேபோல், மற்ற அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடக அரசின் அநியாயத்தை கண்டிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தமாகாவும் பங்கேற்கும். தமிழகத்துக்கு நியாயம் பெற்றுத் தர கர்நாடக அரசையும், மத்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்துவோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, போராட்டத்துக்கு ஒட்டுமொத்த ஆதரவை அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை குழுவை காலதாமதம் செய்யாமல் உடனே நியமனம் செய்ய வேண்டும்.

இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன்:
போராட்டத்துக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய லீக் நீண்ட நாள்களாகப் போராடி வருகிறது என்பதாலும், தமிழகத்தின் நலன் காப்பதற்காக கடையடைப்பு நடத்தப்படுகிறது என்பதாலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம்.

4,600 பெட்ரோல் பங்குகள் மூடப்படும்: 

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 4,600 பெட்ரோல் பங்குகள் பங்குபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்காது :

காவிரிப் பிரச்னையில், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டித்தும், காவிரி நீரை திறந்து விடக்கோரியும் விவசாய அமைப்புகள், வணிக சங்கத்தினர் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனியார் பள்ளிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் நாளை 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்காது என்று அவர் கூறியிருக்கிறார். நாளைக்குப் பதிலாக வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்றும் நந்தகுமார் கூறியுள்ளார்.

பால் விநியோகம் இருக்காது:

இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் பால் விற்பனை மையங்கள், விநியோக மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் 1.5 லட்சம் பால் முகவர்கள் பங்கேற்கவுள்ளதால் அன்றைய தினம் 60 சதவீதம் வரை பால் தட்டுப்பாடு ஏற்படும். இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.