இலக்கியம்

காவிரி போராட்டமும்! வாணி ஸ்ரீக்களும்…!

இசை கருக்கல் என்னும் கவிஞர் 2013-ம் ஆண்டு / வருக என் வாணிஸ்ரீ/ என்னும் கவிதை எழுதுகிறார். அதை – சில நாட்களுக்கு முன் நடந்த இசையின் கவிதைகள் பற்றிய விமர்சன கூட்டத்தில் சிலாகிக்கிறார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். அதை அடுத்துதான் தொடங்குகிறது முகநூளில் “வாணி ஸ்ரீக்கள்” பற்றிய பதிவுகள். தமிழ் இலக்கியவாதிகளின் சமீபத்திய டாப் trending hashtag என்பது வாணிஸ்ரீ மட்டுமே.

மனுஷ்ய புத்திரன்:

போட்டிக்கவிதைகளைப் படித்து தூக்கத்தில் கெட்ட கனா கண்டு எழுந்து உட்கார்ந்துகொண்டு ’’என்னய்யா வாணி ஸ்ரீக்கும் உனக்கும் பிரச்சினை ?’’ என்று கேட்பவர்களுக்காக இசை எழுதிய கவிதையையும் நான் எழுதிய கவிதையையும் கீழே கொடுத்துளேன். இதற்குமேலும் உங்களுக்கு பிரச்சினை புரியவில்லை என்றால் அறிஞர் எம்டிஎம்மை தனிப்பட்ட முறையில் அணுகவும். அல்லது பெண்ணிய போராளிகளுக்கு கடிதம் எழுதவும்.

இசை எழுதிய வாணி ஸ்ரீ கவிதை

வருக என் வாணிஸ்ரீ
……………….

நீ எங்கு தான் இருக்கிறாய் வாணிஸ்ரீ?
உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ?
இந்த மழைக்காலத்தில்
எல்லா பேருந்து நிறுத்தத்திலும் ஆள் நிறுத்தியிருக்கிறேன்.
சன்னலோரம் அமர்ந்து
நீர்த்துளிகளைப் பிடித்து விளையாடியவாறு
நீ வந்துவிடுவாயென..
எல்லோரும் திரும்பி வந்து உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
குருட்டுப்பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி..
நான் ஓடிப்போய்
நீ வாணிஸ்ரீ தானே என்று கேட்டேன்.
அவளும் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போகிறாள்.
நீ வந்து அழகானதொரு கிண்ணத்தில்
செக்கச்சிவந்த உன்உதிரம் நிரப்பித் தரவில்லையென்று தானே
இப்படி கள் மேல் காதல் கொண்டு திரிகிறேன்.
எங்கு தான் இருக்கிறாய் வாணிஸ்ரீ?
வந்துகொண்டிருக்கிறாயா
அல்லது
இல்லவே இல்லையா ?
*****

வாணி ஸ்ரீ நீ வர வேண்டாம்
…….
வாணிஸ்ரீ
நீ இப்படி ஒரு நாள்
வந்து நிற்பாய் என
நான் எதிர்பார்க்கவே இல்லை
ஒரு போன் பண்ணியிருந்தால்
நான் கொஞ்சம் ஆயத்தமாக
இருந்திருப்பேனே

நீ உன் குருதி நிரம்பிய கோப்பையை
மறுபடி கொடுக்க வந்தாயா
நான் குடிப்பதை எப்போதோ
நிறுத்திவிட்டேன்
மருத்துவர் அறிவுரைப்படி
மாலையில் யோகா செய்கிறேன்
பிறகு மற்றவர்களோடு சேர்ந்து
ஏழு மணியிலிருந்து சீரியல் பார்கிறேன்

பித்தனாக உன்னையே நினைத்து
இந்தத் தெருக்களில் நான்
இன்னும் அலைவேன் என்பதுதான்
உன் விருப்பம் இல்லையா
தொந்தி வந்துவிட்டது
காலையில் தவறாமல் வாக்கிங் போகிறேன்
பிறகு வீட்டிற்கு வந்து
வென்னீரில் குளிக்கிறேன்

வாணி ஸ்ரீ
நீ எப்படியும் வந்துவிடுவாய் என
காத்திருக்க அவகாசமில்லாமல்
என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்.
இதோ அடுத்த தெருவில்தான் இருக்கிறது
நான் வாடகைக்கு இருக்கும்
வசந்த மாளிகை
அழைத்துப்போய்
யாரோ ஒருத்தியாய்
உன்னை அறிமுகம் செய்ய
எனக்கு எப்படி மனம் வரும் ?

உன்னோடு
ஒரு காஃபி ஷாப்பில்
ஒரு நல்ல தேநீர் அருந்தவேண்டும்
என்பதுதான் எனது விருப்பமும்
இந்த ஊரில் நிறையப்பேருக்கு
என் முகம் தெரியும்
யாரோ ஒருத்தியுடன்
நான் தேனீர் அருந்துவதை
அவர்கள் கவனிப்பதில்
எனக்கு சில சங்கடங்கள் இருக்கின்றன.

வாணிஸ்ரீ
அன்று நான் உன்னைப் பார்த்து
அந்தக் கேள்வியைக்
கேட்டிருக்கக் கூடாதுதான்
எப்படி நீ மனம் உடைந்து அழுதாய்
பிறகு வாழ்க்கை நம்மை
அவரவரவர் வழியில்
வழிநெடுக சவுக்கால் அடித்தபோது
நாம் ஒரு சொட்டுக் கண்ணீரில்லாமல்தானே
நின்றுகொண்டிருந்தோம்

வாணி ஸ்ரீ
உனக்குப்பிறகு
உண்மையிலேயே
உன்னைவிட அற்புதமான பெண்களை
சந்தித்தேன்
நீ எனக்குக் கொடுத்த
அன்பின் நெருக்கடிகள் எதுவுமில்லாமலேயே
அவர்கள் என்னை அன்பு செலுத்தினார்கள்
ஆனாலும்
வாணி ஸ்ரீயை
என்னால் மறக்க முடியவில்லை
என்று பொய் சொல்லியே
அவர்கள் பொறாமையைத் தூண்டினேன்

வாணி ஸ்ரீ
வாணி ஸ்ரீயாய் வாழ்வதிலோ
சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசனாய் வாழ்வதிலோ
ஒரு பொறுப்பற்ற தனம் இருக்கிறது
என்பது உண்மைதானே வாணி ஸ்ரீ?

மேலும்
வாணிஸ்ரீக்காக
சிவாஜி கணேசன் காத்திருப்பதாகவோ
இறந்துவிடுவதாகவோ
கதை முடியும்வரைதான்
இந்த உலகில் நியதிகள்
காவியத்தன்மை கொண்டதாக இருக்கும்
நீ இப்படி திடுதிப்பெனெ
பஸ்ஸைப் பிடித்து வந்து இறங்கினால்
எனக்கு அலுவலகத்தில்
பெர்மிஷன் போடுவது
மிகவும் கஷ்டம் வாணி ஸ்ரீ

உனக்கு இந்த ஊரில்
வேறு உறவினர்களோ
நண்பர்களோ இருக்கிறார்கள்தானே
வாணி ஸ்ரீ?
நீ மாறவே இல்லை
என்றுதான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்
சந்திப்போம்
போய் வா
13.9.2016
இரவு 7.55

மனுஷ்ய புத்திரனின் வாணிஸ்ரீ கவிதை குறித்து உடனே விமர்சிக்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி:

 

யாரையும் போய் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ
—————————————————

பருத்திப் புடவை மொடமொடக்க
இப்போதெல்லாம்
ஸ்கூட்டியில்
அலுவலகம் செல்கிறாள் வாணி ஶ்ரீ

அவள் செல்லும் வழியில்
பாழ்பட்டு கிடக்கும்
வசந்த மளிகைகளை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ

தெரு முனை காஃபீ டேயில்
அவளோடு பானங்கள் அருந்தி
பெருமையடையும் நண்பர்களோடு
கலகலத்து பேசுகிறாள் வாணி ஶ்ரீ

வளர்ந்துவிட்ட அவள் பிள்ளைகளுக்கு
சிமோன் தி பூவா பெயரை
சரியாக உச்சரிக்க
சொல்லித் தருகிறாள் வாணி ஶ்ரீ

அதி முக்கியமாய்
ரத்தம் கக்கி, உதடு பிதுக்கி
பாட்டுப்பாடும் சீ போ சீ கணேசன்களை
எங்கிருந்தாலும்
போய்ப் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ

யாரையுமே போய் பார்ப்பதில்லை வாணி ஶ்ரீ

வாணி ஶ்ரீ ஒரு வாணி ஶ்ரீ

 

விமர்சனம்: மனுஷ்யபுத்திரனின் வாணி ஶ்ரீ parody

இசை எழுதிய கவிதையில் காதலின் பெருந்துயரம் எங்கே இருக்கிறது? அந்தக் கவிதை வாணி ஶ்ரீ ஏற்றிருந்த திரைப்பிம்பத்தினை லட்சியப்படுத்தி, வசந்த மாளிகை திரைப்படக் கதையினை தன் அடியோட்டமாக வைத்திருக்கிறது. இசையின் கவிதையில் “நீ எங்கு தான் இருக்கிறாய் வாணிஸ்ரீ? உன் தூக்கிக்கட்டிய கொண்டையை நான் காணவேண்டாமா ?” மற்றும் “நீ வந்து அழகானதொரு கிண்ணத்தில், செக்கச்சிவந்த உன்உதிரம் நிரப்பித் தரவில்லையென்று தானே
இப்படி கள் மேல் காதல் கொண்டு திரிகிறேன். எங்கு தான் இருக்கிறாய் வாணிஸ்ரீ?” ஆகிய வரிகள் திரைப்பிம்பத்திற்கும் திரைப்படத்திற்குமான நேரடியான குறிப்புகள். இதற்கான parody ஐ, ஒரு பலகீனமான ஆணை வாணி ஶ்ரீ வந்து சந்திப்பதாக இருக்கும் கவிதையை மனுஷ்யபுத்திரன் எழுதியிருப்பாரேயென்றால் (அவருடைய கூற்றுப்படி) அது ஒரு பெண்ணியக்கவிதையாகவே பரிணமித்திருக்கும். ஆனால் வாணி ஶ்ரீ தன்னை வந்து சந்திப்பதில் போலி கௌரவமும், பெருமிதமும் அடையும் மனுஷ்யபுத்திரனின் கவிதை “வாணி ஸ்ரீ, உனக்குப்பிறகு உண்மையிலேயே, உன்னைவிட அற்புதமான பெண்களை சந்தித்தேன்” என்ற வரிகளில் இசையின் கவிதைக்கு பகடியாக இல்லாமல் ஆணியப் பிரதியாக மாறுகிறது. “வாணி ஸ்ரீ வாணி ஸ்ரீயாய் வாழ்வதிலோ, சிவாஜி கணேசன், சிவாஜி கணேசனாய் வாழ்வதிலோ,ஒரு பொறுப்பற்ற தனம் இருக்கிறது, என்பது உண்மைதானே வாணி ஸ்ரீ?” என்ற வரிகளில் திரைப்படத்தை மேலும் லட்சியப்படுத்தி பகடியில் தோற்று விடுகிறது.

…………………………….
சுந்தரராமசாமி தொடர்ந்து வணிகத் திரைப்படங்களை எதிர்த்து வந்தார். அவர் திரை பிம்பங்கள் மாய காம உறுப்புக்களை மாட்டிக்கொண்டு மயக்குவதாக எழுதியவர். அவர் வாணி ஶ்ரீயை தன் கவிதையில் சந்திப்பது நிகழ்ந்திருக்கவே முடியாத ஒன்று. அது போலவே நகுலனும், ஆத்மாநாமும், தேவதேவனும், வன்ணதாசனும் திரைப்பிம்பங்களை மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் விதத்தில் தங்கள் கவிதையில் சந்திக்க வாய்ப்பேயில்லை. அப்படி அவர்கள் சந்திக்ககூடும் என்று எழுதுவது அவர்களுடைய கவியுலகிற்கு நியாயம் சேர்க்காது. மனுஷ்யபுத்திரன் பட்டியலில் கலாப்ரியா மட்டுமே வாணி ஶ்ரீ பிம்பத்தை கவிதையில் சந்தித்திருக்கக்கூடியவர்; அப்படி சந்திப்பாரெனில் அவர் கவிதையை கலாப்ரியாவிடமிருந்தே அறியலாம். மனுஷ்யபுத்திரன் தனக்கென உருவாக்குகிற போலிப்பாரம்பரியத்திற்கு பாவம் இவர்களை உட்படுத்துவானேன்?

…………………………..

மனுஷ்யபுத்திரன் இசையின் கவிதையை வைத்து, அவருடைய கூற்றுப்படி, பகடி எழுதியிருப்பாரேயானால் பெண் கவிஞர்கள் எழுதிய அத்தனை கவிதைகளையும் வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் தன்னை சிவாஜி பிம்பத்தின் பிரதிநிதியாகக் கருதிக்கொண்டு வாணி ஶ்ரீ கவிதை எழுதிய அத்தனை பேரையும் பெண்ணியப் போராளிகள் என நக்கலடிக்கிறார்.

…………………………..

பாவம் இசை! மனுஷ்யபுத்திரன் தான் இசையின் கவிதைக்கு எழுதியது பகடி (pardoy) என்று வெளிப்படையாக கூறிய பின்னரும் அவர் ஏதோ தன் கவிதைக்கு கௌரவம் சேர்த்துவிட்டார் என்று நினைத்து மனுஷ்யபுத்திரனின் பதிவுகளை ஆர்வமாக பகிர்ந்து வருகிறார். இசைக்கு என் வாழ்த்துக்கள்.

எம்.டி. எம்மின் கருத்துக்கு இலக்கியவாதிகளின் எதிர்வினை:

போகன் சங்கர்:

வெகுஜன சினிமாவும் சற்றே வளர்ந்தவர்களின் தேவதைக் கதைகள் போலத்தான்.தேவதைக் கதைகளில் வரும் இளவரசன், இளவரசி, சூனியக்காரி, வயதான அரசன், மந்திரவாதி, டிராகன், சித்திரக் குள்ளர்கள், நினைத்தவுடன் சின்றெல்லாவையும் இளவரசனையையும் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் சென்று விடும் மாயக் கண்ணாடி எல்லாம் உண்டு.

நம்முடைய ஒவ்வொரு சினிமாவுக்கும் இணையான கதை ஒன்று நமது புராணங்களிலோ நாட்டுப் புறப் பாடல்களிலோ வாய்மொழிக்கதைகளிலோ இருக்கிறது. வசந்த மாளிகை புதிதாக இருக்கலாம் தேவதாஸ் பழைய ஆள் மட்டுமல்ல இறப்பே இல்லாத ஒரு கருத்துருவம்.வாணிஸ்ரீயும்தான்.இங்கு வாணிஸ்ரீ என்பது வாணிஸ்ரீ அல்ல அல்லது வாணிஸ்ரீ மட்டுமேயல்ல .

உங்களுக்குத் தெரியாததா கோட்பாடு சார்?

 

சுரேஷ்குமார இந்திரஜித்:

சமீபத்தில்தான் – ஒரு மாதத்திற்குள் இருக்கும்- டி வி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி – பழைய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி- சரோஜாதேவி, ராஜஸ்ரீ மற்றும் வேறு சிலரும் இருந்தனர்- நாற்காலியில் குண்டாக ஒரு அம்மாள் உட்கார்ந்திருந்தார் – எழுந்து நின்று பேசக்கூட முடியவில்லை – கழுத்து என்பதே இல்லை – யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன் – ஒன்றும் பிடிபடவில்லை – நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நட்சத்திரம் சொன்ன பின்னால்தான் தெரிந்தது – அவர் வாணிஸ்ரீ என்று- நம்ப முடியவில்லை – எனக்கு துயரமாக இருந்தது – முகநூலில் வாணிஸ்ரீ பற்றி கவிதைகளும் சொல்லாடல்களும் வந்து கொண்டிருக்கின்றன- நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த வாணிஸ்ரீ எங்கோ மறைந்துவிட்டாள்-

விஷ்ணுபுரம் சரவணன்:

 

பத்து நாட்களுக்கு முன் வரை வெல்வெட் கேக், சினிமா, சசிகலா இதுதான் எல்லோருக்கும் டாபிக் (இப்பவும் இலக்கியவாதிகளுக்கு வாணிஸ்ரீ தான் டாபிக 🙂 ) ஆனால் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாய நிலம், விதை பற்றி அறிவியல் அடுத்த தலைமுறைக்கு கடத்தாமை, நெல் விலை எதைப் பற்றியும் பேச்சில்லை. பரவாயில்லை பெருமக்களே. . டெல்டா காரர்கள் எப்படி போராடுவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். . நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்.

தமிழ்நதி:

பெருந்தேவியின் கவிதையைப் பார்த்தேன். அட்டகாசம்! ‘வாணி ஶ்ரீ-சிவாஜி கவிதையொன்றை எழுதேன்’ என என்னையும் தூண்டிவிட்டது.

“வாணிஶ்ரீ!
உனது நெடிய புறாக்கழுத்து
போதையேற்றும் ஒரு போத்தலுக்கு நிகரானது”என்று தொடங்கலாம் 😉

இந்தத் தொடர்ச்சியின் மூலவராகிய இசைக்கு நன்றிகள் 😉

தீபு ஹரி:

சிவாஜிகணேசன்களுக்கு .

சிவாஜி கணேசனுக்கு வேலையில்லை.
விமானத்தில் பறக்கிறார்,
நவநாகரிகப் பெண்களுடன் நடனமாடுகிறார்,
சும்மா இருக்கும்போது ஏழைகளுக்கு உதவுகிறார்
ரொம்ப சும்மா இருக்கும்போது
வாணிஸ்ரீயை காதலிக்கிறார்.

வாணிஸ்ரீக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது.
அவளுக்கு ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்,
முன்னேற வேண்டும்
உழைக்க வேண்டும்.
ஆனால் சிவாஜிகணேசனுக்கு
அது பற்றி கவலை இல்லை.
அவரைச் சுற்றி ஒரு உலகம்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
அது பற்றியும் கவலை இல்லை.
சட்டங்கள், தர்மங்கள் அற்ற உலகில்
சக்ரவர்த்தியாவது பற்றி மட்டுமே
அவர் கவலை கொள்கிறார்.

அவருக்கு எல்லாமே மிகையாகத் தேவைப் படுகிறது.
அவரது மாளிகையில் கட்ட
நட்சத்திரத் தோரணங்கள்,
அவர் குடியை நிறுத்த
தன் ரத்தத்தை பீட்ரூட் ஜூஸைப் போல்
பிழிந்து தருகிற ஒரு பெண்.
இப்படியாக….

மிகை அவரை ஆள்கிறது.
சுருட்டைப் போல,
கள்ளைப் போல,
சம்போகத்தைப் போல
மிகை
அவரைப் பைத்தியமாக்குகிறது.
எல்லா உண்மைகளிலிருந்தும்
அவர் தப்பியோடிக் கொண்டே இருக்கிறார்.
அதுவே சாஸ்வதமென்றும்
களைப்போடு
தற்சமாதானம் கொள்கிறார்.

ரொமான்டிசிஸ காலத்திலேயே
இந்த சிவாஜிகணேசன்களை
வாணிஸ்ரீக்கள் பொருட்படுத்தவில்லை
என்பதையும்,
மேலும்,
அவருக்குப் பருகக் கொடுத்ததே
அவரறியாமல்,அவரிடமிருந்து
வாணிஸ்ரீ உறிஞ்சிய ரத்தம் தான்
என்பதையும்,
இந்தப் போஸ்ட் மாடர்ன் யுகத்திலாவது
சிவாஜிகணேசன் புரிந்து கொள்வாரா
என்று யோசித்து,
கவலைகொள்கிறாள் வாணிஸ்ரீ.

கிருத்திகா தரன்:

வாணிஸ்ரீ என்றே பெயர்.
முதல் வாணிஸ்ரீயை மறக்கவில்லை
பிறகு வாணிஸ்ரீக்கள் கணக்கில்லை

ஒவ்வொரு வாணி்ஸ்ரீ. உம் ஒரு வித வசீகரம்
ஒன்று போல் ஒன்றில்லை..வாசமும்
தேட தேட அவிழா ரகசிய புதிர்
மர்மம் ஒன்றை ஒளித்தே வைத்திருந்தாள்.

வாணிஸ்ரீக்கள் சொல்லிவைத்தாற் போல்
சண்டையிட்டே பிரிந்தார்கள்..இன்னொரு
வாணிஸ்ரீ உள்நுழையும் பொழுது.

வாணிஸ்ரீ கள் தேவதைகள் வெறுக்க முடியுமா
எல்லா வாணிஸ்ரீக்களுக்கும் ஒரே ஒற்றுமை..
இந்திரனாய் இருப்பவனை சிவனாய் மாற்ற.

வாணிஸ்ரீக்கள் அற்புதம் அப்படியே நேசிக்கிறேன்
என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள எந்த
வாணிஸ்ரீ யும் முன்வருவதில்லை .இன்னொரு
வாணிஸ்ரீயை எதிரியாய் நினைக்கிறார்கள்.

எதுவாக இருப்பினும் வாழ்வு வாணிஸ்ரீயால்
இயங்குகிறது. 🙂

இப்படிக்கு

வாணிஸ்ரீ மயமானவன்.

அபிலாஷ் சந்திரன்:

வாணிஸ்ரீ கவிதைகளில் மிக நுணுக்கமானது இது. கடந்த காலத்தின் காவியக் காதலனின் துயரத்துக்கும் நெகிழ்ச்சிக்குமான ஏக்கம் இக்கால மனதிடம் உள்ளது. அதை இசை கொண்டாடியபடியே பகடி செய்கிறார்.

ஜ்யோவ்ராம் சுந்தர்

அடேய்களா, எனக்கே வாணிஸ்ரீ யாருன்னு தெரியாதே, மத்தவன் எப்படி ரிலேட் பண்ணிப்பான்? உங்க கவித்துவத்துல இடி விழ!

சொக்கத் தங்கம் மீனாவைப் பத்தி நான் எழுதறேன் பாருங்க – இல்லாட்டி, ஸ்நேகா பத்தி. காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடும்போது ஒரு கன்னட நடிகையைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதை எழுதும் இவர்களெல்லாம் தமிழர்களாய் இருக்கவே முடியாது.

பாரதிநாதன்:

ஒரே வாணிஸ்ரீ பதிவா இருக்கே… ஆமா, வசந்தமாளிகை படத்துல காணாமப் போன நகை வாணிஸ்ரீ பெட்டில இருந்ததப் பாத்து சரியா விசாரிக்காம பணக்கார சிவாஜி ‘நீயா இப்படி செஞ்ச..’ன்னு கேட்டாரே… உண்மையா காதலிச்சிருந்தா யாராவது இப்படிக் கேப்பாங்களா? வாணிஸ்ரீ மனசு என்ன பாடு பட்டிருக்கும். இது பத்தி ஏன் யாரும் பேசல…? கல் நெஞ்சக்கார உலகம்பா…

புதியதடம் மேகவண்ணன்:

எல்லோரும் வாணிஸ்ரீ பற்றி வரைந்து தள்ளும் இந்நாளில் சமந்தா பற்றிய பழைய கவிதையை இங்கன போடுவது தவிர்க்க இயலாதது!

ஷாஜஹான்:

ஆளாளுக்கு வாணிஸ்ரீ வாணிஸ்ரீ…ன்னு எழுதறாங்க. எனக்கு வாணிஸ்ரீ கொண்டைதான் சட்டுனு ஞாபகம் வரும். எதுக்கு இப்போ எல்லாரும் வாணிஸ்ரீ பத்தி எழுதறாங்கன்னு சத்தியமா தெரியலே.

ஸ்ரீதேவியை மறந்துட்டு வாணிஸ்ரீக்காக இவ்ளோ உருகுறீங்களே… நியாயமா இது?

வேல் கண்ணன்:

இனி கவிதையில் உப்பு, புளி, மொளகா சேர்க்க வேண்டும் போல.. பின்னே கவிதையை சப்புக் கொட்டி சாப்பிடுபவர்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். நமக்கு வேற சமைக்கவும் தெரியாது, சாப்பிடவும் தெரியாது. என் செய்வேன் என் அன்பே #வாணிஸ்ரீ ?
ஆம் காவேரியை நீர்த்து போகச் செய்த அதே வாணிஸ்ரீ தான்(இதை விட தமிழர் போராட்டங்களை கேவலப்படுத்த முடியாது)

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.