மதுரை உள்பட 6 இடங்களில், 11 அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,

“ஏழை -எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, அவர்கள் பயன்பெறும் வகையில், அம்மா திருமண மண்டபங்கள் கட்ட உத்தரவிட்டுள்ளேன். இந்த மண்டபங்களில் மணமகன் -மணமகளுக்குத் தனி அறைகள், விருந்து உண்ணும் அறை உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் – கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

11 இடங்களில் மண்டபங்கள்:

சென்னை தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அயப்பாக்கம், பருத்திப்பட்டு, பெரியார் நகர், கொரட்டூர், மதுரை மாவட்டம் அண்ணாநகர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேலம் மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுங்கையூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய 11 இடங்களில் ரூ.83 கோடியில், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும். இந்தத் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தி குறித்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டளுமான சு. போ. அகத்தியலிங்கம், “மாநகராட்சி சமூகக் கூடங்கள் – நகராட்சி சமூகக்கூடங்கள் என ஏராளமான சமூகக்கூடங்கள் முன்பு கட்டப்பட்டு வந்தன .ஜெயா ஆட்சி காலத்தில் இருந்ததும் முடங்கியது -பாழடைய விடப்பட்டது .இப்போது 10 அம்மா திருமண மண்டபங்கள் என அறிவிக்கிறார் .ஊடகங்களும் கைதட்டி ஓஹோ என விசிலடிக்கிறது . உண்மையைச் சொல்ல திராணி இல்லை . ஏமாற்றாதே ஏமாறாதே என எம்ஜிஆர் பாடியதின் முதல் வார்த்தை ஜெவுக்கும் இரண்டாம் வார்த்தை மக்களுக்கும் என அறிக !” என விமர்சனம் செய்துள்ளார்.