புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணமடைந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

விசிக தலைவர் தொல் திருமாவளவன்:

ராம்குமார் சாவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதை தற்கொலை என்று மூடி மறைக்க அரசு முயற்சிக்க கூடாது. அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உடலை உடனே அடக்கம் செய்யக்கூடாது.

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்:

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் இன்று தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வருகிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்வாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டபோதே தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்தி வந்தது. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறபோது எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும்? சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? சிறை நிர்வாகம் ராம்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. எனவே, ராம்குமார் மரணம் தற்கொலையா இல்லையா என்பதை விசாரிக்க, தற்போது பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக்கொண்டு உயர்மட்ட நீதி விசாரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

திமுக பொருளாளர் ஸ்டாலின்:

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட இளைஞர் ராம்குமார், மிகவும் பாதுகாப்பு இருக்கக் கூடிய சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஏற்கக்கூடியதாகவும் நம்பும்படியும் இல்லை.

அண்மையில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் மீது சக கைதி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்த சில நாட்களுக்குள் சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை என்பது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் தருவதாக அமைந்து இருக்கிறது.

உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமாரின் பாதுகாப்பைக் கூட சிறைத் துறையால் உறுதி செய்ய முடியவில்லை என்பது வெட்க கேடாக இருப்பது மட்டுமின்றி பல சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதன் கீழ் உள்ள காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகமும் மிகவும் மோசமடைந்து சீர் குலைந்து விட்டது என்பதற்கு பேரறிவாளன் மீதான கொடூரத் தாக்குதலும், ராம்குமார் மர்ம மரணமும் சாட்சியங்களாக இருக்கின்றன.

ராம்குமார் மரணத்தின் மூலமாக இளம்பெண் சுவாதி கொலை வழக்கின் உண்மைகளை மூடி மறைக்க அரசும்,காவல்துறையும் முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இது தவிர பொதுமக்கள் மனதிலும் பத்திரிகைகளிலும் ராம்குமார் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர மத்தியிலும் எழப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இந்த தற்கொலை மேலும் வலு சேர்த்து விட்டது.

ஆகவே ராம்குமார் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

சென்னை, நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறையினர் கூறுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்த போதே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தக்க பாதுகாப்புடன்தான் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ராம்குமார் சிறையின் உள்ளே கட்டுக்காவல்களை மீறி, சமையல் அறைக்குச் சென்று மின் கம்பியை கடித்து, தன் உடலில் தானே மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுவது நம்பும் படியாக இல்லை.

அப்படி எனில் புழல் சிறையில் கண்காணிப்புகள் இல்லாமல்தான் கைதிகள் இருக்கின்றனரா? சிறைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களா? சிறையில் நடந்த இந்தச் செயலுக்கு சிறைத்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு முக்கியமான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் தற்சொலை செய்து கொண்டார் என்று அரசு தரப்பில் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சுவாதி கொலை வழக்கின் பின்னணி குறித்தும், சிறையில் ராம்குமார் தற்கொலை குறித்தும், உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு புழல் மத்திய சிறையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது ஏற்கத்தக்கதல்ல.

கொடிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டியது காவல்துறையினரின் கடமை. அதற்கு முன்பாகவே அவர்கள் லாக்&அப்களிலும், சிறைகளிலும் உயிரிழப்பது தடுக்கப்பட வேண்டும். ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் அதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கட்சிகளின் அறிக்கை காலநிலைப்படி வெளியிடப்பட்டுள்ளது.