ராஜ்சங்கீதன் ஜான்

பாலகுமாரனின் நிலைத்தகவலை பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை.

பாலகுமாரனுக்கு வயது 70. ஒரு சாமானிய முதியவனின் குழப்ப மன நிலையை புரிந்துகொள்வதற்கே நம் சமூகம் இன்னும் தயாராகவில்லை. அப்படியிருக்க புகழ் பெற்ற ஒரு எழுத்தாளன் முதுமை அடைகையில் என்ன குழப்பங்களை அவன் மனம் கொள்ளும் என்பதை நம் சமூகம் புரிந்துகொள்வதெல்லாம், சுத்தம்!

அதிலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மரணத்தின் எல்லை வரை சென்று வந்தவர் பாலகுமாரன். அந்த அனுபவத்தையும்கூட ஒரு கட்டுரையில் அவரே விவரித்திருக்கிறார். மரணம் தொட்ட பின், வெகு இயல்பாக நேரும் ஆன்ம வேட்கை அவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், நித்தியானந்தா முதலிய சாமியார்களின் வழிதொடர்வது மட்டுமல்லாமல், அவர்களை பரிந்துரைக்கும் அளவில் பாலகுமாரன் தற்போது இருக்கிறார்.

எழுத்தாளனாக, அறிவாளியாக காண்பித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏதொவொரு காரணத்தால் ஏற்படும் திடீர் நொடித்தல், அவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உறவுகள் இழப்பு, பொருள் இழப்பு, வயதின் சுமை, நோய், பொருள் தேவை, நிம்மதியின்மை, பற்றுகளின் பொதி, அடையாளம் இன்மை, அறுந்து போன புகழ், குறையும் மரியாதை என ஏராளம் இருக்கும். இதனாலேயே பல நேரங்களில், நடுநிலை என்பது வசதிக்குறைவாக மாறிப்போய், ஏதோ ஒரு கரையில் ஒதுங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

புகழ் வெளிச்சத்தில் பாலகுமாரன் இருந்த போது, நடுநிலை என்ற அலங்காரம் தேவைப்பட்டது. ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்கள் செய்தார். கவனித்து பார்த்தால் அந்த படத்திலும் கூட அவரது சாய்வு தெரியும். அந்த சாய்வு காலப்போக்கில் பாலகுமாரனை இந்தப் பக்கத்து கரைக்குதான் கொண்டு வந்து விடும். விட்டிருக்கிறது. அந்த பட்டவர்த்தனமான சாய்வை நியாயப்படுத்தியும், அதற்கு முன் வகித்து வந்த நடுநிலையையும் (அல்லது அப்படி அழைக்கப்படுகிற நிலையை) விளக்கவும் வேண்டியதை தன் ஆளுமை தொடர்ச்சிக்கான அவசியமாக நினைக்கிறார். அதற்கு ஒரு அரசியல் நிலையும் கிடைத்தால் வேலை சுலபம். அப்படியான அரசியல் நிலையை வெளிப்படுத்த உவப்பான சூழல் நிலவினால் இன்னும் அற்புதம்.

அப்படி ஒரு அரசியல் நிலை தொன்று தொட்டு இங்கு இருந்து வருகிறது. அதற்கான சூழலும் தற்போது பெருமளவில் நிலவுகிறது. அதனால் அப்படி ஒரு நிலைத்தகவல். அவ்வளவுதான்.

சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் குன்றும் என்பது பாலகுமாரனுக்கு தெரியாதா? ஏன் அவரது கடவுள் நம்பிக்கை புகைப்பிடித்தாலும் ஆரோக்கியத்துடனே அவரை இருக்க வைக்கவில்லை? ஏன் மருந்து சாப்பிடுகிறார்? மிக எளிய மனதுக்கான மிக எளிய பதற்றம். பிரகாரத்தை சுற்றி சுற்றி கடவுளை வேண்டிக் கொண்ட பின்னும், இரவு முழுக்க கண் விழித்து படித்துவிட்டு பரீட்சைக்கு செல்லும் மாணவனுக்கான பதற்றத்தை போல்.

சிறுவனுக்கு அந்த பதற்றம் ஏற்பட்டால் பிரச்சனை இல்லை. முதுமையில் அந்த பதற்றம் ஏற்படுகையில் அதை நியாயப்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அப்படி அந்த முதியவர் நினைக்கிறார். ஏனெனில், அவரின் நியாயங்களை தாண்டி அவரின் மனதுக்கு தெரியும் அவர் யாரென. அவரின் இரட்டை நிலை என்னவென. அவர் பதற்றம் என்னவென.

பாலகுமாரனுக்கு கடவுளோடு மாத்திரையும் தேவைப்படுகிறது. அவரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் குலத்தையும் அந்த குலத்தின் வரலாற்றையும் அவர் நியாயப்படுத்த வேண்டியிருக்கிறது. யாரிடமிருந்து? உங்களிடம் இருந்தா, என்னிடம் இருந்தா? இல்லை. ஈ.வே.ரா.விடமிருந்து. நம் பெரியாரிடமிருந்து. ஏனெனில் பெரியார்தான் அவருக்கான மனசாட்சி. நமக்கான மனசாட்சி. இந்த மொத்த சமூகத்துக்கான மனசாட்சி.

இந்த சமூகத்தில் வாழ்க்கை, அரசு, கலை என எதை எவன் நடத்த விரும்பினாலும் பெரியாருடன் உரையாட வேண்டியிருக்கிறது. பெண், குடும்பம், சடங்கு, மதம், கடவுள், கல்வி, சாதி, குடும்பம், உலகம் என எந்த சுவரை இங்கு முட்டினாலும் அங்கு நிற்கும் பெரியாரின் கேள்விக்கு பதிலளிக்காமல் கடந்து செல்ல முடிவதில்லை. அதனால் ஏற்படும் கோபம் துடிக்கிறது. பல நேரங்களில் வெடிக்கிறது. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் பெரியார் அங்கு நின்று கொண்டுதான் இருப்பார்.

மற்றபடி, பாலகுமாரன் என்ற புகழ் பெற்ற முதியவரின் பதற்றமாகத்தான் இந்த நிலைத்தகவலை நாம் கடந்து போக வேண்டும். அந்த முதியவர் நம்மிடம் வேண்டுவதெல்லாம் அவரின் தடுமாற்றத்துகான மன்னிப்பும் இரக்கமும் கொஞ்சமாகவேனும் கவனம் மட்டுமே.

ஆனானப்பட்ட ஜெயகாந்தனே தடுமாறிய அவரின் கடைசிக்காலங்களை நாம் பார்க்கவில்லையா?

ராஜசங்கீதன் ஜான், ஊடகவியலாளர்.