காவிரி தீரத்தில் பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.

இன்று (19.9.2016) தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், பாறைப் படிம எரிவாயு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக விவசாயிகள் சார்பில் வாதாடிய வைகோ, முன்வைத்த கருத்துகள்:

காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து, இதே தீர்ப்பு ஆயத்தில் நான் வாதாடினேன். காவிரி தீர மக்களும், விவசாயிகளும் கடுமையாகப் போராடினார்கள். தமிழ்நாடு அரசு ஒரு தொழில் நுட்ப அறிஞர் குழுவை அமைத்தது. அவர்களது பரிந்துரையின் பேரில், ‘மீத்தேன் எரிவாயு எடுக்கத் தமிழக அரசு அனுமதிக்காது’ என்று அறிவித்தார்கள்.

ஓஎன்ஜிசி நிறுவனம், எண்ணெய் எடுக்கிறோம் என்ற போர்வையில், நவீனமயமான எந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து, மீத்தேன் எரிவாயுவை விடக் கேடான சேல் எரிவாயு எனப்படும் பாறைப்படிம எரிவாயு எடுக்கத் திருட்டுத்தனமான வேலைகளில் ஈடுபடுகின்றது. மேலும், எரிவாயு எடுக்க முனையும் இடங்களில் விவசாயமே கிடையாது என்ற பச்சைப் பொய்யைப் பதிவு செய்துள்ளது. மக்கள் கருத்தைக் கேட்காமலேயே கேட்டதாகப் பொய் அறிக்கை தந்து இருக்கின்றது. தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் என்ற இடத்தில், சேல் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் போட்டு இருக்கின்றது. இந்த எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும்,  அப்படி அனுமதி கொடுத்தால் அதற்குப் பிறகுதான் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மாசிலாமணி அவர்கள் கூறினார்கள்.  மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சொன்னபிறகும், அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை என்று மத்திய அமைச்சர் சொல்லுகிறார்.

இந்த சேல் வாயு எரிவாயு எடுப்பதால், இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்கு உயரும்; இந்தியாவுக்கு இப்படிப்பட்ட எண்ணெய் எரிவாயு தேவை என்றும் ஓஎன்ஜிசி தரப்பில் கருத்து சொல்லப்பட்டது.

உண்மைதான். இந்தியாவின் பொருளாதாரம் பலமடங்கு உயரும். அந்நியச் செலாவணி லாபம் கிடைக்கும். ஆனால் எங்கள் தமிழ்நாடு நாசமாகும். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காகக் காவிரி தீரம் பலியாக வேண்டுமா?
ஏற்கனவே காவிரி தீரத்துக் கர்நாடக விவசாயிகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரச்சினைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த எரிவாயு எடுக்கின்ற திட்டத்தையும் அனுமதித்தால், ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சைத் தரணி, பஞ்சப் பிரதேமாகி பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்.

தமிழகத்திற்கு ஏற்படும் இந்தக் கொடுமைகளை எல்லாம் எதிர்த்துத்தான், மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 21 வயது இளைஞன், தனக்குத்தானே நெருப்பு வைத்து உயிரை மாய்த்துக் கொண்டான். அவனது கோரிக்கைகளுள் ஒன்றுதான், காவிரி தீரத்தில் எரிவாயு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்பதாகும். ஐரோப்பியக் கண்டத்தில் ஒன்பது நாடுகள் சேல் கேஸ் எடுப்பதைத் தடை செய்து விட்டன. அமெரிக்காவில் சில மாநிலங்கள் தடை செய்துள்ளன. கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீருடன் 634 நச்சு வேதிப் பொருள்களைக் கலந்து 10000 அடி ஆழத்திற்கு உள்ளே செலுத்தி ஆழத்தில் உள்ள பாறைகளை உடைத்து சேல் கேஸ் எடுக்கப் போகிறார்கள். பின்னர் அந்தத் தண்ணீரும் நஞ்சாகி விடும். விளைநிலங்கள் நச்சு நிலங்கள் ஆகி பாழாய்ப் போகும். அருகில் உள்ள கட்டடங்கள் இடியும் ஆபத்து ஏற்படும். எனவே, பாறைப் படிம எரிவாயு தமிழ்நாட்டில் எடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டைத் தமிழக அரசு மேற்கொண்டு, தீர்ப்பு ஆயத்தில் தங்கள் தரப்பு அறிக்கையைத் தர வேண்டும். மீத்தேன் எரிவாயுத் திட்டம் போல இந்தத் திட்டத்தையும் ஆய்வு செய்யும் தொழில் நுட்ப அறிஞர்கள் குழுவைத் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

நீதியரசர் ஜோதிமணி அவர்கள், ‘மூன்று வார காலத்திற்குள் தமிழக அரசு தனது கருத்தைத் தீர்ப்பு ஆயத்திற்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

விசாரணையின்போது வைகோவுடன், வழக்கறிஞர்கள் நன்மாறன், சுப்பிரமணி, செந்தில் செல்வன், ஆர். இராஜேந்திரன், வேல்முருகன், இளங்கோ, எல். சங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.