சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம் குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராம் குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு செவ்வாய்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை செய்வது வீடியோவில் படம் பிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

செய்தித்தாள்களில் ராம் குமாரின் மரணம் குறித்த வெளியான செய்திகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.

அதையடுத்து, ராம் குமார் தற்கொலை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஏடிஜிபி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக புழல் சிறை அதிகாரிகளிடம் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச் செல்வி 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார். காலை 9 மணியளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், பிரேத பரிசோதனை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின் அவர் புழல் மத்திய சிறைக்குச் சென்றார். சிறை அதிகாரிகளிடம் விசாரணையை தொடங்கிய நீதிபதி தமிழ்ச் செல்வி, ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.