கடந்த 5–ம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 16–ந் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் காரணமாக கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் திருத்தம் கோரும் மனுவை கர்நாடக அரசு கடந்த 11–ந் தேதி தாக்கல் செய்தது. அதில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று கோரியது. ஆனால் அதனை ஏற்காத உச்ச நீதிமன்றம் ‘‘20–ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடவேண்டும். அதன் பின்னர், தண்ணீரை திறந்துவிடுவது பற்றி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேற்பார்வை குழு செயல்படவேண்டும்’’ என்று கடந்த 12–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனால் கர்நாடகா மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. தமிழகத்தின் லாரி, பேருந்துகள், பெங்களூருவில் தீக்கிரையாகின. இரு மாநிலங்களுக்கிடையே முற்றிலும் போக்குவரத்து தடைபட்டது.

இதனிடையே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அன்றைய தினமே(செப்.12) , காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் கூடியது. அப்போது 2007–ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தற்போது வரையிலான 9 ஆண்டுகளில் பெய்த மழையின் அளவு, அந்த ஆண்டுகளில் அணைகளில் இருந்த தண்ணீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் செப்டம்பர் 15–ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களை டெல்லியில் காவிரி மேற்பார்வைக் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது.

அதன்பின்னர், தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செ‌யலாளரும், காவிரி மேற்பார்வைக்குழு தலைவருமான சசி சேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காவிரி நீர்வரத்து மற்றும் இருப்பை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஆன்லைன் முறை, இரண்டு ஆண்டுகளில் அமல்படுத்தப்படும். அறிவியல் பூர்வமாக நீர் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும், காவிரியில் நீர் திறக்க உத்தரவிட மேற்பார்வைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கிறது. பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியிலிருந்து தமிழக எல்லையை நோக்கி வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் பேரணியாக வந்து எல்லையடைப்பு போர‌ட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை கர்நாடக போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ், “கர்நாடகத்தில் குடி தண்ணீர் கூட இல்லாத நிலையில் தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்கிறது. ‌கர்நாடகாவில் உள்ள 6 கோடி பேர் சிறைக்கு சென்றாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூ‌ட தமிழகத்திற்கு தரமுடியாது” என வாட்டாள் நாகராஜ் பேசியதாகக் குறிப்பிடுகிறது புதிய தலைமுறை.