காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், காவிரி விவகாரத்தை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி நதிநீர் விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் காவிரி மேலாண்மை வாரியமே முடிவு செய்யும். எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை இன்று பிறப்பித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திமுக பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்”, என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களும், கூட்டமைப்புகளும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிறைவேற்ற நான்கு வாரங்கள் வரை காத்திருக்காமல் மத்திய அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்து காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வருகின்ற 27 ஆம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த தண்ணீர் மட்டுமே விவசாயத்திற்கு போதாது. இதுவரை தண்ணீர் திறப்பதில் வெளிவந்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவுகள், தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

நடுவர் மன்றத்தின் காவேரி இறுதி தீர்ப்பு 19.2.2013 அன்றே அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதிய அதிமுக அரசு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கை துரிதப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த வழக்கை விரைந்து விசாரிக்க அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே அணுகியிருந்தால், காவேரி மேலாண்மை வாரியம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும். காவேரி இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய தண்ணீரும் உரிய காலத்தில் கிடைத்து காவேரி டெல்டா விவசாயம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிக் குழுவைக் கூட அழைத்துச் சென்று பிரதமரிடம் வலியுறுத்தலாம். தற்போது திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ள தண்ணீர் காவேரி டெல்டா விவசாயத்திற்கு போதாது என்பதால் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய முழு தண்ணீரையும் பெற காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது மிகவும் அவசரத் தேவை என்பதை அதிமுக அரசு உணர்ந்து, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: வைகோ வரவேற்பு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை செவ்வாய்கிழமை (20.09.2016) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என்று நாம் கூறி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கையைச் செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆறு ஆண்டுக் காலம் தாமதித்துதான் மத்திய அரசு மார்ச் 19, 2013 இல் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியவாறு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வந்தது.

தற்போது உச்ச நீதிமன்றம் சட்டப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டதின் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறைக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று  கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். 6000 கன அடி  தண்ணீர் போதுமானதல்ல என்ற போதிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்ற ஆணை வரலாற்று சிறப்பு மிக்கது. அதை பா.ம.க. முழுமனதுடன் வரவேற்கிறது.
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட 05.02.2007 அன்று முதல் மத்திய அரசிடம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இக்கோரிக்கையை பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், 9 ஆண்டுகளாகியும் இல்லாத காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என்ற போதிலும், அரசியல் காரணங்களுக்காகவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், பாரதிய ஜனதாவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயங்கின. காங்கிரசுக்கோ, பாரதிய ஜனதாவுக்கோ தமிழகத்தில் செல்வாக்கு இல்லாததால், கர்நாடகத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கைத் தக்க வைப்பதற்காக, கர்நாடகத்துக்கு ஆதரவாக  வாரியத்தை அமைக்காமல் கிடப்பில் போட்டன.
காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை அளித்த நாளில் இருந்து 90 நாட்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாமலும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமலும் அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துரோகம் செய்தது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும் மேலாண்மை வாரியத்திற்காக வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. அதன்பின் உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான் 19.02.2013 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.  அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை அளித்த நாளில் இருந்து 90 நாட்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாமலும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமலும் அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துரோகம் செய்தது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும் மேலாண்மை வாரியத்திற்காக வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. அதன்பின் உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான் 19.02.2013 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.  அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒரு முறையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களை இரு முறையும் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவர்களும் அதற்கு ஒப்புகொண்டனர். அந்த தகவலை உமாபாரதி செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். ஆனால், அமைச்சர் உமாபாரதியை கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடாவும், ஆனந்த குமாரும் சந்தித்து பேசிய பின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்த அளவுக்கு அரசியல் விளையாடியது என்பதற்கு இதைவிட உதாரணங்களை கூற முடியாது. அனைத்துத் தடைகளையும் மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் காவிரி பாசனப் பகுதியில் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும்,  மகிழ்ச்சியும் காவிரி பாசன மாவட்டங்களிலுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க  மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் செய்யும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதிலும் இதே போன்ற நிலை ஏற்பட்டது.1990&ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991&ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. ஆனாலும், மத்திய ஆட்சியில் இருந்தவர்கள் செய்த சதியாலும், தமிழகத்தை ஆட்சி செய்தவர்களின் அலட்சியத்தாலும் அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 1998&ஆம் ஆண்டில் தான் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே காவிரி ஆணையத்தை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் பல மாதங்கள் தாமதப்படுத்தி தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. அதேபோன்ற நிலை  இப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது.
காவிரி ஆணையம் கூட காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிப்பதற்கான அதிகாரம் இல்லாததாகவே அமைக்கப்பட்டது. காவிரி பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காவிரி ஆணையம் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம் ஆகும். இப்போதும் அதேபோன்று அரசியல் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்ளாமல், முழுமையான அதிகாரங்களுடன் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவும் 4 வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும், தமிழர்களுக்கு முழு பாதுகாப்பளிக்கவும் மத்திய, கர்நாடக அரசுகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. தமிழக அமைச்சர்கள் குழு தில்லியில் முகாமிட்டு, மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு வரவேற்பு: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
தமிழ்நாடு – கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் காவேரி மேலான்மை ஆணையம் அமைக்கப்படாததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை இவ்விசாரணையின் போது வெளிப்படுத்தி யுள்ளார்கள்.
இந்த சிறப்புமிக்க உத்தரவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
ஏற்கெனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும்  தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், தாக்குதல்களும் நடைபெற்றன.
தற்போது உச்சநீதிமன்றம் காவேரி மேலான்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கர்நாடகவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்க மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.