சுவாதி கொலைவழக்கில் கைதாகியிருந்த இராம்குமாரின் மர்ம மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், முன்னதாக மதியம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இராம்குமாரின் சடலத்தைப் பார்வையிட்டார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே வரிசையாகக் கேள்விகளை எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில் சீமான் கூறியிருப்பதாவது:

மென்பொறியாளர் சுவாதி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

வேலூர் சிறையில் தம்பி பேரறிவாளன் மீது கைதி ஒருவர் காட்டுமிராண்டித்தன- மாகத் தாக்கிய சம்பவம் நடந்து 10 நாட்கள்கூட ஆகாதநிலையில், இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்துகொண்டார் என்று அறிவித்திருப்பது சிறைக்குள் இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டுக்குள்தான் சட்டஒழுங்கு கெட்டு கொலைக்குற்றங்கள் நிகழ்கிறதென்றால் சிறைக்குள்ளும் மரணங்கள் நிகழ்வது பெருத்த வேதனையான செய்தியாகும்.

சுவாதி கொலைவழக்கு தொடர்பான மர்மங்களே இன்னும் விலகாத நிலையில், இராம்குமாரின் மரணம் இந்த வழக்கில் மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

நாடறிந்த கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, உயர் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர், தற்கொலை செய்துகொள்கிற அளவுக்குத்தான் சிறையிலே பாதுகாப்பும், கண்காணிப்பும் உள்ளதா?

கைதுசெய்ய செல்லும்போதே இராம்குமார் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என காவல்துறையினரே கூறியிருக்கும்நிலையில் அவரை சிறைத்துறையினர் எப்படி கண்காணிக்காமல் விட்டார்கள்?

இராம்குமார் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டார் என்றால், அவரது மன அழுத்தத்தைக் குறைக்காது இவ்வளவு நாட்களாக என்ன செய்தார்கள்?

மின்சாரப் பெட்டியை உடைத்து மின்சாரக் கம்பியை வாயால் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்றால், மின்சாரப் பெட்டியை உடைக்கிறவரை சிறைத்துறையினர் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? சத்தம் வெளியில் கேட்கவில்லையா?

தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்றபோது இராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்றால், அவரது அறையில் தண்ணீர் வைக்கப்படவில்லையா?

அவரது அறையில் தண்ணீர் இருக்கும்போது எதற்காக சமையலறைக்குச் செல்ல வேண்டும்? அப்படிச் செல்லும்போது அவரைக் கண்காணிக்காமல் சிறை அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

அவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் இடத்திலிருக்கும் கண்காணிப்புக் கருவி (கேமரா) மட்டும் வேலை செய்யாதது ஏன்?

மின்விளக்கு பொருத்துகிற மின்கம்பியில் உயிரைப் போக்குகிற அளவுக்கா உயர் மின் அழுத்தம் இருக்கும்? சாதாரண 1.5 மி.மீ. அளவுடைய மின்சாரக் கம்பியை பல்லால் கடித்து துண்டிப்பதே சிரமமாக இருக்கும்நிலையில், உயிரைபோக்கும் அளவிற்கு உயர் மின் அழுத்தம் பாயும் மின்சாரக் கம்பியை பற்களால் கடித்து துண்டிப்பது சாத்தியமா?

மின்சாரம் தாக்கினால் தானாக மின் இணைப்பு துண்டிக்கும் தானியங்கி ட்ரிப்பர் அவ்வளவு பெரிய சிறையில் இல்லையா? அது இருந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பில்லையே?

பற்களால் மின்சாரக் கம்பியை கடித்து உயிரிழந்தார் என்றால், வாய்ப்பகுதியில் சிறு காயமோ, இரத்தக்கட்டோ ஏற்பட்டிருக்க வேண்டுமே, இராம்குமாரின் வாய்ப்பகுதியில் அப்படி எதுவும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே?

புழல் சிறையிலுள்ள மின் இணைப்புப் பெட்டிகள் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே; அப்படியிருக்கும்போது எப்படி அதை உடைத்து தற்கொலை செய்துகொள்வது சாத்தியம்?

சிறைக்கு வந்த புதிதில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்றால் வாய்ப்பிருக்கலாம்; பிணை மனு விரைவில் போடப்பட இருந்த நிலையில் இராம்குமார் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? என நீளும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இராம்குமாரின் மரணம் கொலைதானோ என்ற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இராம்குமாரின் தந்தையும், வழக்கறிஞரும் இது தற்கொலை அல்ல! கொலை என்றே உறுதிபட தெரிவிக்கிறார்கள். எனவே, இவ்விவகாரத்தில் இராம்குமாரின் மரணத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய நீதிவிசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு சீமானின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.