விலங்கு நல வாரியத்தின் தூதராக ரஜினியின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனத்தை எதிர்த்து திருச்சியில் தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடைபெறுவதைத் தடுத்த விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா பணியாற்றக்கூடாது. அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். செளந்தர்யாவின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.

தமிழர் வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ், “முரட்டுக் காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து, அதனால் கிராமப்புறங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றார் ரஜினி. தமிழர்களின் ஆதரவுடன் பெரிய நட்சத்திரமான ரஜினியின் மகளான செளந்தர்யா, விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இதை ரஜினி வலியுறுத்தவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

இந்நிலையில், செளந்தர்யா ரஜினிகாந்துக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவமும், கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவமும் உள்ளதால், அவரை தங்களது தூதராக நியமித்துள்ளதாக, விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ்தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவதுதான் செளந்தர்யா ரஜினிகாந்தின் பணி என்றும், விலங்குகள் நல வாரியம் விளக்கமளித்துள்ளது.

இந்த அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பு என்றும், இதில் தூதராக செளந்தர்யாவை நியமித்ததற்கும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.