கண்ணன் ராமசாமி

கண்ணன் ராமசாமி
கண்ணன் ராமசாமி

சுவாதியின் கொலைக்கு உளவியல் ரீதியிலான அழகியல் கண்ணோட்டத்தில் ஒரு முகம் கொடுத்திருக்கிறது ஒரு செய்தி. “நீ தேவாங்கு போல் இருக்கிறாய்!” என்று சுவாதி சொன்னதால் ஆத்திரம் அடைந்ததாக ராம்குமார் குறிப்பிட்டிருக்கிறார் என்கிற செய்தியை நாம் எல்லோரும் படித்தோம். ராம்குமாரின் வாக்குமூலம் குறித்த முழுமையான உண்மைகள் நமக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

இருப்பினும், இதுவே இறுதி உண்மை எனக் கருத முடியாது என்று நான் நம்புகிறேன். அதே சமயம், இது போன்ற விமர்சனங்களை நாம் பிறரிடம் இருந்து எதிர்கொள்கிறோமா? இல்லையா என்று யோசிக்கும் போது, நிச்சயமாக இது ஒரு விவாதிக்கப் படவேண்டிய பிரச்சனை தான் என்று புரிகிறது. நம்மில் பலரை சுற்றி இருப்பவர்கள் ஏதோ ஒரு குறையை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போது, அவர்களுடைய குறையை திரும்ப சுட்டிக் காட்டுவதோ அல்லது புற அழகைப் பற்றி விமர்சிக்கும் அந்த நபரை புறந்தள்ளுவதோ தான் நம்முடைய பொதுவான எதிர்மறையாக இருக்கிறது. இது போன்ற விமர்சனங்களுக்கு பதிலாக நாம் அவர்களை கொலை செய்யும் அளவிற்கு மூர்க்கமாக மாறிவிடவில்லை என்றாலும், பொதுவாகவே அழகியலின் உளவியலை ஆய்வு செய்ய நமக்கு இச்சம்பவம் நல்லதொரு உதாரணமாக அளித்திருக்கிறது.

இரு தரப்பில் இருந்தும் நமக்கு பொதுவான சில சமூக நியதிகளைப் பற்றிய கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி, ஒரு பெண், ஏன் தேவாங்கு போல் இருக்கிறாய் என்று ஒரு ஆணை விமர்சிக்க வேண்டும்? இரண்டாவது கேள்வி, தன் அழகிற்கு பொருத்தமான ஒரு பெண்ணின் மீது ஏன் ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை? மூன்றாவது கேள்வி, இந்த சமூகத்தின் அழகியல் நிலைப்பாடுகளுக்கு தனி மனித விருப்பு வெறுப்பு மட்டுமே உந்து சக்தியாக விளங்குகிறதா? இல்லை, புற காரணிகள் இருக்கின்றனவா?

கறுத்த தேகம் பொருந்தியவர்களை நாம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சமாகத் தான் கருதுகிறோம். இந்த உண்மையைக் கூறினால் உடனடியாக ரஜினிகாந்த்-ஐ நாங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் என்று பதில் வரும். முசுலிம்களை ஒரு புறம் தீவிரவாதிகளாக சித்தரித்து விட்டு, ஷாருக் கானை கொண்டாடும் இந்த சமூகத்தின் இரட்டை முகத் தன்மைக்கும் இதற்கும் பெரிதாக வித்யாசம் இல்லை. அமரிக்கர்களின் நிற வேற்றுமைகளைப் பற்றி சிந்தித்து, அத்தகைய வேற்றுமைகள் இந்தியாவில் இல்லை என்றும் கூற நாம் தலைப்படலாம். ஆனால், நம் நாட்டில் கறுப்பர்களுக்கு எதிரான அமைதியான முறையில், சுயதேர்வு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நிலவும் வேற்றுமைகளுக்கு அளவே இல்லை.

வெள்ளையாக இருப்பவர், கருப்பரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தன்னுடைய சுய முடிவு என்று நினைக்கிறார். ஆனால், இத்தகைய முடிவை இச்சமூகத்தில் மிகச் சொற்பமாகக் கூட யாரும் எடுப்பதில்லையே ஏன்? என்று யோசிக்கும் போது தான் அடிப்படை உண்மை புரியும். இங்கு நிலவும் விசித்திரமான போக்கு என்னவென்றால், கருப்பாக இருக்கும் ஒருவரும் தன்னை விமர்சிக்கும் போது, கருமையின் பெருமையை பேசிவிட்டு, தன்னுடைய துணையைத் தேடும் போது மட்டும் வெள்ளையான ஒரு பெண்ணின் மீதோ ஆணின் மீதோ முதல் பார்வையில் காதல் கொள்வது தான்.

இதிலும் அடுத்த நிலை என்று ஒன்றிருக்கிறது. கருத்த தேகம் பொருந்தியவரை பணம், முதிர் திருமணம், குடும்பக் கட்டுப்பாடு எனும் பல்வேறு காரணங்கள் கருதி விரும்பி/விருப்பமில்லாமல் ஏற்றுக் கொள்பவரும், திருமண நாள் அன்று எப்படியாவது வெள்ளையாகத் தெரியவேண்டும் என்று மிகவும் பிரயர்த்தனப் பட்டு சாயங்கள் பூசி துணையின் இயற்கையான அழகை கெடுத்து வைக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் கருமையைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தன்னுடைய வாழ்வின் முக்கியமான தருணத்தில், யாரும் பொருத்தமில்லாத ஜோடி என்று விமர்சித்து விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக, உடல் அமைப்பு குறித்த மதிப்பீடுகள் என்று பார்க்கும் போது தான் சில ஒப்பீடுகளை சுட்டிக் காட்ட வேண்டி வருகிறது. ஒருவர் குண்டாக இருக்கும் போது யானை என்பதும், ஒல்லியாக இருக்கும் போது தீக்குச்சி என்பதும், வழுக்கை தலை பொருந்தியவர்களை வழுக்கப் பாறை என்பதும் கேலியாக, எப்போதும் பயன்படுத்தப் படும் ஒப்பீடுகள். இவற்றின் அடிப்படையிலே தான் நம்முடைய சினிமாவின் நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கிறது. இந்த வகையிலேயே தேவாங்கு என்கிற விமர்சனத்தையும் நாம் ஒப்புமை செய்து நோக்க வேண்டும். தேவாங்கு எனும் விலங்கிற்கு முகத்தில் கண்கள் மட்டுமே பெரிதாகத் தெரியும். இதை ஒரு ஆணின் முகத்திற்கு ஒப்புமை செய்து நோக்குவது, அவரது புற அழகை சுய தேர்வின் எல்லைகளைத் தாண்டி விமர்சிக்கும் போக்கு என்று பலருக்குப் புரிவதில்லை. இறந்த சுவாதியின் வாக்குமூலம் நமக்கு கிடைக்க வாய்ப்பில்லாத இந்த நிலையில், இங்கு ராம்குமாரின் வாக்குமூலம் உண்மை எனும் முன் முடிவுக்கு நாம் வர வேண்டியதில்லை என்றாலும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, இது போன்ற ஒப்பீடுகள் சமூகத்தில் இல்லவே இல்லை எனும் வாதத்தை நாம் பகுத்தறிவுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

அதே நேரத்தில், எது அழகு எனும் கேள்விக்கும் நமக்கு விடை தெரிகிறதா? என்று யோசிக்க வேண்டும். கருத்த தேகம் உடையவர்கள் எப்போதும் வெள்ளையின் மீது ஏன் ஆசைப் படுகிறார்? இது அவருடைய சுய தேர்வின் அடிப்படையில் மட்டும் உருவானதா? அல்லது அவருடைய தேர்வில் பல புறக் காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா?

பொதுவான அழகியல் ரீதியிலான அடிப்படைகளை தற்போது மதமும், சினிமாவும், நுகர்வு விளம்பரங்களும் அதிக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.அகத்தியர் காலத்தில் இருந்து பெண்களை அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என்று வகைப்படுத்தி, வெளிர்மையான நிறமும், மென்மையான கூந்தலும், அழகிய கண்களும் உடைய பெண்களை உயர்வான இடத்தில் வைத்து பார்த்த சமூகமாகவே இது இருந்திருக்கிறது. வெள்ளை நிறத்தவர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவராகவும், சுத்தமும், உரத்துப் பேசாத குரலையும் உடையவர்களாக கருதப் பட்டு வந்தனர். கரிய நிறமும், செம்பட்டை தலைமுடியும், தடித்த உதடும் கீழானதாக கருதப் பட்டு வந்திருக்கிறது. இவர்கள் தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் உறவு கொள்வார்கள் என்றும், கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள் என்றும், குடும்பம் சொந்த பந்தங்களைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள் என்றும் ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷன சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஆண்களை முயல் சாதி, மான் சாதி, காளை சாதி, குதிரை சாதி என்று வகைப்படுத்தி, கருத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன், உஷ்ண தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதாவன், தெய்வ பக்தி இல்லாதவன், மிகுந்த கோபக் காரன், நிறைய உண்பவன், அழகோ, அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்யாசம் இன்றி உறவு கொள்வான் என்று அகத்தியர் அருளிய ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷன சாஸ்திரம் சொல்கிறது.

இவை படிப்பு வாசனையின் மூலம் அல்லாமல், கேள்வி ஞானத்தின் மூலம் மக்களிடையே விளம்பரப்படுத்தப் படும் விவரங்கள். சாதிய முறையில், கருத்தவர்களை பிரித்து வைத்துப் பார்த்ததோடு நில்லாமல், அவர்களோடு வெள்ளையானவர்களை உறவு கொள்ளச் செய்யாதிருக்க திட்டமிட்டே தான் இவற்றை எழுதி வந்திருக்கின்றனர். இந்த முடிவுகளை எத்தனை பேர் கொண்டு சோதித்தாலும், இவை ஒரு குறிப்பிட்ட நிறத்தவர்களை, இயற்கையாக சில அங்க குணம் பொருந்தியவர்களை தவறாக சித்தரிப்பதால், நாம் இவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஆனால், நாம் செய்வதோ வேறு! நம் குழந்தைகளிடம் இத்தகைய தவறான எண்ணங்களை விதைக்கிறோம். இன்று கரிய நிற ஆணை யாரும் குதிரை சாதி என்று அழைப்பதில்லை என்றாலும், அவனை குடிகாரனாகவும், பொருக்கியாகவும், பூச்சாண்டியாகவும் சித்தரிக்கும் பரிணாமம் நிகழ்ந்திருக்கிறது. இத்தகைய தவறான எண்ணங்களின் விளைவாகவே, சமூகத்தில் சிந்தனா வாதிகளாக உருவெடுக்கும் நம் குழந்தைகள், மக்களை தவறான வழியில் திசை திருப்பவும் செய்கிறார்கள்; அவர்களில் வெகு சிலர் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள்.
இத்தகைய எண்ணங்களை சுயமாக யோசித்து முடிவு செய்யும் ஒருவன் இங்கே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெரும்பாலும், தனக்கு சொல்லப்பட்ட ஒன்றை மனிதன் சமூகத்தில் சோதித்து பார்க்கிறார். அதன் விளைவாக, அந்தப் படிப்பினை உண்மை என்று உணர்த்தும் உதாரணங்களை ஏற்றுக் கொள்கிறான். மறுதலிக்கும் உதாரணங்களை கவனிக்க மறுக்கிறான். மதமும், சாதியும் மனிதனுடைய பாலியல் தேர்வில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றால், ஒருவருடைய பாலியல் வேட்கையே அவருடைய முடிவுகளை எடுக்க உந்து சக்தியாக இருக்கும். இதன் மூலம், பாலியல் தேர்வில் எந்த ஒரு குறிப்பிட்ட நிறத்தவரும், அங்க குணம் பொருந்தியவர்களும் உதாசீனப்படுத்தப்பட மாட்டார்கள்.

ஆனால், மதமும் சாதியும் ஆதிக்கம் செலுத்த, உருவாகும் சிந்தனைகளை, தன்னுடைய சுய சிந்தனைகளாக எண்ணிக் கொள்ளும் மனிதர்கள் எடுக்கும் சினிமாவும், அவர்களைப் போலவே, நிற வெறியைக் கக்குகிறது. இந்த வேற்றுமையே, அவர்களை வெண்மை குறித்தான உரத்த குரலை எழுப்பச் சொல்கிறது. அது தொடர்பான வணிகத்தில் ஈடுபட வைக்கிறது. அதை விளம்பரப் படுத்தவும் ஊக்கம் தருகிறது.

இன்று வேலை செய்யும் இடங்களில் communication skill களை வளர்கிறோம் என்கிற பெயரில் உடையில் மாற்றங்கள், முகத்தில் மாற்றங்கள், என பல்வேறு நுகர்வுத் திட்டங்கள் அரங்கேறுகின்றன. அவற்றிற்கு மக்கள் இலக்காகிறார்கள் என்றால் இது குறித்த நுட்பமான பார்வை இல்லை என்பதே காரணமாக இருக்க முடியும். படித்தவர்களாக இருக்கும் அனைவரும் நிஜமான கல்வி கற்றவர்கள் இல்லை என்பதையும் இது உணர்த்துகிறது.
பொதுவாகவே நான்கு பேர் தன்னைப் போலவே யோசிக்கிறார்கள் என்றாலோ, தன்னுடைய சிந்தனையை பிறரும் எழுத்து வடிவத்திலோ, அல்லது பிற வடிவங்களிலோ பதிவு செய்கிறார்கள் என்றாலோ, ஒருவர் தன்னுடைய யோசனை சரியே என்று முடிவெடுத்து விடுவது இயல்பு. வெண்மை குறித்தான கேள்விகளுக்கு, “வெண்மை தான் அழகு என்று யார் சொல்லித் தெரியவேண்டும்? அது எல்லோரும் அறிந்த உண்மை தானே?” என்கிற பதில் சொல்லப்படுவதற்கு இதுவே காரணம்.

இது பொதுவான ஒரு குணமாக மாறிவிட்டதால், ஆணவமும், அவமரியாதையும் இயல்பானதாகி, இலக்காகும் மக்கள் பொறுத்துப் போக வேண்டும் என்பது பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகவும் மாறி விட்டது. இன்னமும் சொல்லப் போனால் இதை ஏற்றுக் கொள்வது ஒரு வகையான பக்குவ நிலை என்று கூட இச்சமூகம் கற்பிக்கிறது.
அறிவு சார் சமூகத்தில் இத்தகைய தவறுகள் நிகழாது. தன்னுடைய அவதானிப்பே இறுதி என்றும், அதன் அடிப்படையில் தன்னுடைய மனதில் உருவாவதே சத்தியம் என்றும் நம்பும் இந்த சமூகத்தில், மதமும், சாதியையும் ஒழிந்தால் ஒழிய பகுத்தறிவுக்கு விமோசனம் இல்லை என்பது திண்ணம்.

கண்ணன் ராமசாமி, எழுத்தாளர். வெண்புள்ளிகள் குறித்ததான ‘ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு’ எனும் நாவல் இரண்டாவது படைப்பாக வெளிவர இருக்கிறது.