காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பெங்களூருவில் உள்ள கேபிஎன் தனியார் பேருந்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 42 பேருந்துகள் கடந்த 12ஆம் தேதி எரிக்கப்பட்டது.

இந்தவிவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக பாக்யஸ்ரீ என்ற 22 வயது பெண் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  பாக்யஸ்ரீ கன்னட அமைப்பின் உறுப்பினர். ராய்ச்சூரைச் சேர்ந்த பாக்யஸ்ரீ, தந்தையை இழந்தவர், தாயுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பிழைப்புக்காக வெவ்வேறு தின சம்பள வேலைகளைப் பார்த்து வரும் அவர், ரூ. 100க்காகவும் பிரியாணிக்காகவும் பஸ்ஸை கொளுத்தியிருக்கிறார் என போலீஸில் தரப்பு சொல்கிறது.

மேலும், கேபிஎன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள், இன்னாள் ஊழியர்களின் துணையுடனே இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் போலீஸ் சொல்கிறது. 42 பஸ்கள் எரியூட்டப்பட்டபோதும், ஒருவர்கூட இந்த வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தை திட்டமிட்டு செய்யக் காரணமாக இருந்த கன்னட அமைப்பில்  இருப்பவர் யாரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை