புத்தக அறிமுகம்

நூல் அறிமுகம்: ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமா

விஜயமகேந்திரன்

விஜய் மகேந்திரன்
விஜய் மகேந்திரன்

உலக திரைப்படங்கள் குறித்தான பல புத்தகங்கள் வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா குறித்தான புத்தகங்கள் வெகு குறைவாகவே பதிப்பிக்கப்படுகின்றன. உலக சினிமா, உலக சினிமா இயக்குநர்கள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்கு தமிழில் இருக்கும் சந்தை மதிப்பு தமிழ் படங்கள் குறித்தான புத்தகங்களுக்கு இல்லை என்பதை பதிப்பாளர்களே ஒத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அப்படியே விற்றாலும் ஒரு வெற்றி பெற்ற நடிகரின் வாழ்க்கை கதைகளோ, அல்லது வெற்றி பெற்ற படங்களின் திரைக்கதை பிரதிகளே அதிகமாக விற்கின்றன. இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் உதவி இயக்குனர்கள், சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள். ஆனால் தமிழ் திரைப்படங்களை அது தமிழர் வாழ்க்கையில் உருவாக்கி இருக்கும் பாதிப்புகளை பின்புலமாக கொண்டு தமிழ் திரைப்படங்கள் குறித்து வரும் கட்டுரைகளும் குறைவு. அதன் விளைவாக தமிழ் திரைப்படங்களின் உண்மைத் தன்மையை விளக்கும் கட்டுரை தொகுப்புகளும் மிக அருகிவருகின்றன. இந்தச் சூழலில் ந. முருகேசபாண்டியனின் ” தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் ” என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் ஆறு கட்டுரைகள் மட்டுமே கொண்ட 70 பக்கங்கள் உள்ள இந்த புத்தகம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ந. முருகேசபாண்டியன் இலக்கிய விமர்சகராக பல வருடங்களாக தொடர்ச்சியாக செயல்பட்டு வருபவர். ”ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்”, கிராமத்து தெருக்களின் வழியே ” என்கிற இரண்டு கட்டுரை தொகுப்புகளின் வழியாக தமிழ் மக்களின் பண்பாட்டு கூறுகள் அடைந்து வரும் மாற்றத்தை துல்லியமாக பதிவு செய்துள்ளார். கிராமத்து தெருக்களின் வழியே புத்தகத்தில் உடும்பை விற்க வரும் ஒருவன் இன்றைய கிராமத்தில் அடையும் கஷ்டங்களை அற்புதமாக விவரித்து இருப்பார் . அந்த காட்சிகள் இன்னும் என் மனதில் கொண்டிருக்கிறது. சினிமா பற்றி என்னிடம் நேரடியாக பலவிஷயங்களை பேசியுள்ளார். மதுரையின் பழைய திரையரங்குகள் பற்றி, எண்பதுகளில் பத்மராஜன் , பரதன் போன்றவர்கள் இயக்கிய மலையாள திரைப்படங்களை ஏதோ பிட்டு படங்கள் போல விளம்பரம் செய்து திரையரங்கங்ளில் கூட்டம் கூடச் செய்ததை பற்றி ஒருமுறை பேசியது நல்ல நகைச்சுவையுடனும், அந்த கால கட்ட படங்களின் பாலியல் வெறுமையையும் வெளிப்படுத்தியது. ” சார் இந்த விஷயங்களை நீங்க கட்டுரைகளாக எழுதலாமே, ஒரு கால கட்டத்தின் பதிவாக இருக்கும்” என்றேன். எனக்கு தெரிந்தே பரதனின் ” ரதி நிர்வேதம்”, ”தகரா” போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செக்ஸ் படங்கள் போலவே ”ஏ” என்ற எழுத்தை பெரிதாக போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். தகரா படத்தைத் தான் பின்னர் தமிழில் ஆவாரம் பூவாக பரதனே இயக்கினார்.

இந்த புத்தகத்தில் மதுரையில் அழிந்து போன திரையரங்கங்கள் குறித்த நீண்ட கட்டுரை மிக முக்கியமான பதிவு. ஒரு காலத்தில் மதுரை திரையரங்கங்களின் சொர்க்கமாகவே விளங்கியது. இரண்டு மைல் தொலைவுக்கு 4 திரையரங்குகள் இருந்த காலம் மதுரையில் உண்டு. அவற்றில் பாதி கூட இன்றில்லை. ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்று அழைக்கப்படும் தங்கம் ஆயிரம் இருக்கைகள் கொண்டது. அது மூடப்பட்டு பல வருடங்களாகி இன்று பாழடைந்த நிலையில் உள்ளது. புத்தகத்தின் அட்டைப் படத்தில் தங்கம் தியேட்டரின் இன்றைய நிலையை பார்க்கலாம். எம்ஜிஆர் படங்களே வெறும் 70 நாட்கள் ஓடும் அந்த தியேட்டரில் பாக்யராஜின் ” தூறல் நின்னு போச்சு” 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இன்றெல்லாம் இரு வாரங்கள் ஓடினாலே படம் வெற்றி என்ற அளவில் தமிழ் சினிமா மாறியுள்ளதை, மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை விமர்சனத்துக்கும் உட்படுத்தி இருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் சினிமா வியாபார அரசியலை அம்பலப்படுத்தும் ” விஸ்ரூப பூச்சாண்டி” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சினிமாவைக் காட்டி ரசிகர்களை எவ்வாறு பெரிய நடிகர்கள் ஏமாற்றுகிறார்கள் என அருமையான விளக்கத்துடன் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னையே விஸ்வரூபம் படம் வெளிவராதது என்று டி.வி.ஊடகங்கள் அந்த மாதம் முழுவதும் நடந்து கொண்டதையும் இந்த கட்டுரையில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். கதாநாயகிகளை கவர்ச்சி பண்டங்களாக, படுக்கையறைக்கும், முத்தக் காட்சிக்கும் மட்டுமே பயன்படுத்துபவர்களாக காட்டியதில் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் பங்கு அதிகம். இதை அவரது விக்ரம்(லிசி), மகாநதி( சுகன்யா கதாபாத்திரம்), மைக்கேல் மதன காமராஜன் (ரூபிணி) கதாபாத்திரம், ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் அடித்து கொள்ளுதல் ( பஞ்ச தந்திரம், அவ்வை சண்முகி, விஸ்வரூபம்) ஆகிய பெரும்பான்மை படங்களில் காணலாம். தேவர் மகனில் படம் முழுக்க ஆதிக்க சாதி அரசியலை பேசிவிட்டு, கடைசி காட்சியில் ” பிள்ளைகளை படிக்க வைங்கங்கய்யா ” என்ற ஒரு வசனத்தின் மூலம் சாதிக்கு எதிரான படமாக காட்டி அந்த வருடத்தின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது வரலாறு. விருமாண்டி படமும் ஆதிக்க சாதி அரசியலை தூண்டி விடும் படம் தான். இத்தகைய பிற்போக்கான படங்களை எடுத்து விட்டு உலக சினிமாவே தன் கையில் உள்ளது போல பேசும் கமலின் வியாபார அரசியலை இந்த கட்டுரை அக்கு வேர் , ஆணி வேராக ஆராய்ந்துள்ளது.

மற்ற கட்டுரைகளும் தமிழ் திரைப்படங்களில் உள்ள நுண்ணரசியலை பேசுவதாக உள்ளது. தமிழ் சினிமா உருவாக்கத்தில் நாவல்கள் என்ற கட்டுரை சினிமாவுக்கு எழுத முயல்பவர்களுக்கு பல புதிய விஷயங்களை சொல்கின்றன. இந்த கட்டுரைகளில் உள்ள கருத்துக்களை ஏற்கலாம். மறுக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் புறந்தள்ள முடியாத அளவுக்கு பல நுண்ணிய அவதானிப்புகள் இந்த ஆறு கட்டுரைகளிலும் காணக்கிடைக்கிறது. சினிமாவை கருத்தியல் ரீதியாக அணுகுபவர்களுக்கு மட்டுமல்ல, சினிமாவை நுட்பமாக புரிந்து கொண்டு ரசனையை வளர்த்தெடுக்கவும் இந்நூல் பெரிதும் பயன்படும். முருகேசபாண்டியனின் உரைநடை மொழி ஓரே மூச்சில் வாசிக்க வைக்கும் படி சீராக இருப்பது பாராட்டிற்குரியது.

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் ( கட்டுரைகள் )
வெளியீடு டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ. 60

விஜய் மகேந்திரன், எழுத்தாளர்; பிசியோதெரபி மருத்துவம் படித்தவர்.இவரது ‘நகரத்திற்கு வெளியே’ என்ற சிறுகதை தொகுப்பு 2011-ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் விருது பெற்றது. தற்பொழுது ஊடுருவல் என்ற நாவல் எழுதி முடித்துள்ளார். டப்ளின் என்ற நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s