அடுத்த ஆண்டு வரவிருக்கிற உத்திரபிரதேச மாநில தேர்தலையொட்டி கிஷான் யாத்ரா என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. திங்கள் கிழமை உத்தர பிரதேசத்தின் லக்னௌ நகரத்தின் அருகே உள்ள சிதாபூரில் பிரச்சார வாகனத்தில் ராகுல் காந்தி வந்தபோது,  அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அவர் மீது செருப்பு படாமல் பின்னால் நின்றுகொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா மீது பட்டது அந்த செருப்பு.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை காவல்துறை உடனடியாகக் கைது செய்தது. அவர் பெயர் ஹரி ஓம் மிஸ்ரா என்றும் அவர் பத்திரிகையாளர் என்று தன்னை கூறிக்கொண்டதாகவும் சொல்கிறது என்டிடீவி செய்தி.

“60 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு, படுகுழிக்குத் தள்ளிவிட்டது காங்கிரஸ். நான் கடந்த இரண்டு வருடங்களாக பத்திரிகையாளராக இருக்கிறேன். எனக்குத் தெரியும்…ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் என்ன செய்தது என்று” என தன்னுடைய செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஹிர் ஓம் மிஸ்ரா.

இந்நிலையில் தன் மீது நடத்தப்பட்ட செருப்பு வீச்சு சம்பவத்துக்கு ராகுல் காந்தி, ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“நான் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். என் மீது இன்னும் ஏராளமான செருப்புகளை வீசலாம். ஆனால், நான் பின்வாங்கப் போவதில்லை. நான் உங்களைப் பார்த்து பயம் கொள்ளவில்லை. நான் அன்பின் மீதும் அமைதியின் மீதும் நம்பிக்கை கொள்கிறேன், நீங்கள் வெறுப்பை மட்டும் பிடித்துக் கொண்டிருங்கள்” என குழுமியிருந்த கூட்டத்தினரிடையே பேசும்போது தெரிவித்தார் ராகுல்.