தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் மட்டும், 4,748 பேர் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

த.மா.கா. தனித்து போட்டி

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டணி தொடரும்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் இணைந்தே போட்டியிடும் என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.