“விடுதலை வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்தான் முதல் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் (என்பதை மறவாதீர்கள்). தனக்கென்று தனி உரிமைகள் உள்ள வர்க்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தன் உரிமையை அனுபவிக்க மட்டுமே முயற்சி செய்வார். அவருக்குக் கீழ் உள்ளவரை ஒடுக்குவதற்கு முடிந்தவரை அனைத்தையும் செய்வார். உரிமையற்றவர்களைத் தன் குதிகாலால் நசுக்குவார். இப்படித்தான், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகிறது. எனவே, ஒன்றுபட்டு, உங்கள் சொந்தக் காலில் நின்றுகொண்டு இன்றைய சமூகத்தை எதிர்த்து நிற்க சற்றும் தயங்காதீர்கள். உங்களின் உரிமையை மறுக்க ஒருவருக்கும் தைரியம் இல்லையென்பது அப்போது தெரியவரும். மற்றவர்களின் கருணையில் வாழாதீர்கள். மற்றவர்களைப் பற்றி எந்த மாயையையும் வைத்துக்கொள்ளாதீர்கள். அதிகார வர்க்கத்தின்பால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்கள் நண்பர்களாக இருப்பதற்கு மாறாக, அவர்களின் தாளத்திற்கு உங்களை நடனமாடச் சொல்வார்கள். முதலாளிகளும், அதிகார வர்க்கமும் சேர்ந்த கூட்டுதான், உண்மையில், உங்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் உங்களின் வறுமைக்கும் காரணம். எனவே, அவர்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் தந்திரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அப்போது மட்டும்தான் தப்பிக்கும் வழி வாய்க்கும்.

நீங்கள்தான் உண்மையான உழைக்கும் வர்க்கம். தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். உங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர. எழுங்கள்… தற்போதைய சமூகத்திற்கு எதிராகக் கலகம் செய்யுங்கள். படிப்படியான மாற்றம், அல்லது சீர்திருத்தம் உங்களுக்கு எந்தப் பலனும் தர மாட்டா. சமூக நிலையை எதிர்க்கும் போராட்டத்தின் மூலம் ஒரு புரட்சியைத் துவக்குங்கள். உங்கள் சிங்கங்களை அரசியல். பொருளாதாரப் புரட்சிக்குத் தயார் செய்யுங்கள். நீங்கள், நீங்கள் மட்டுமே தேசத்தின் தூண்கள். தேச சக்தியின் கரு நீங்கள்தான். விழித்தெழுங்கள் தூங்கும் சிங்கங்களே.. கிளர்ந்தெழுங்கள்.. கலகத்தின் பதாகையை உயர்த்திப் பிடியுங்கள்.

(1928 ஜூனில் கிரித்தியில் தலித்துகளுக்காக பகத்சிங் எழுதிய கட்டுரை.)

நன்றி : சி.மதிவாணன்