சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர். காவிரி வழக்கில் கர்நாடக அரசு மேலும் 3 நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்ததாக இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய நீர்வள அமைச்சகம் தகுந்த அறிவுரைகளை வழங்க, இரு மாநில நிர்வாகத் தலைவர்கள் கூட்டத்தை உச்சநீதிமன்றம் கூட்ட உத்தரவிட்டது குறித்தும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் கூறினர்.

இதன்படி நாளை டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.‌ இக்கூட்டத்தில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர், முதன்மைச் செயலர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், கூட்டத்தில் தனது உரையை தலைமைச் செயலர் வாசிக்கவும் ஆலோசனை வழங்‌கியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.