மரு.அரவிந்தன் சிவக்குமார்

“இன்று காலை விழித்தபோது ஊரடங்கு உத்தரவு.
கடவுளே நானும் கைதியானேன்.
என்மீது நின்றோர் முகம் தெரியவில்லை,
அவர்களை அலங்கரித்தன கொடூரர்களின் சீருடை.
இன்றிரவு அழுது புலம்புகிறோம்.
யார் எங்கள் கண்ணீர் துடைக்க?
பல ஆண்டுகளாய் நீள்கிறது எங்கள் துயரம்.
நான் வளர எனக்கு சோறு கொடுங்கள்,
கஞ்சா வேண்டாம்.
இன்றிரவு,
எரிப்போம்! கொள்ளையடிப்போம்!
எரிப்போம் !எங்களின் இருத்தலுக்காக …..
எரிப்போம் !சீர்கேட்டினை…
எரிப்போம் !மாயைகளை…
இன்றிரவு, எரிப்போம் கொள்ளையடிப்போம்.
எரிப்போம் சீர்கேட்டினை”.

(பாப் மார்லியின் ‘Burning and looting ‘பாடல் வரிகளிலிருந்து…)

சென்ற வாரம், ஒரு நோயாளியின் தாய் எங்கள் மருத்துவமனை புறப்பிணியாளர் பகுதிக்கு வந்தார். அவருடைய மகனுக்கு, 6 மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தோம். கஞ்சா புகைத்து அதனால் ஏற்பட்ட மனக் குழப்பத்தோடு எங்கள்  மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இப்போது கண்ணகி நகர் எப்படி இருக்கிறது என்றேன்? சொன்னதுதான் தாமதம், கோபமாய் பொங்கியெழுந்துவிட்டார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்தி மற்றும் அவனின் நண்பனை காவல்துறை என்ன செய்தது? எப்படி கார்த்தியைக் கட்டிவைத்து அடிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது?அடித்துக்கொன்ற பிறகு காவல்துறை என்ன செய்தது?

காணாமல் போன கார்த்தியின் நண்பன் என்ன ஆனான்? அவருடைய தாயின் ஆட்கொணர்வு மனு என்னவாகும்?

எப்படி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் கூட்டம் முழுக்க குடி, கஞ்சாவுக்கும், ஒயிட்னருக்கும் அடிமையாக்கப்படுகின்றனர்?

கஞ்சா விற்பவனை செய்யும் ரெளடி கும்பலைத் தொடாத காவல் துறை ஏன் கஞ்சா  புகைக்கும் இளைஞர்களை மட்டும் பிடிக்கிறது? என்று பல கேள்விகளைக் கேட்டு பொறிந்து தள்ளிவிட்டார். மக்களின் கோபம், எப்படி காவல் வண்டி மீது கல் மழையாய் வீழ்ந்தது, பெண்கள் பலர் எப்படி போராட்டம் நடத்தினர் என்றும் பேசினார்.

“சார், சின்னச்சின்னப் பசங்க, போலீசு விரட்டவிரட்ட மாடி மீது ஏறி பிளேடால கிழிச்சுக்குவேன் என்று மிரட்டி, கிழிச்சிக்கவும் செய்கிறார்கள். ஒரு சில அக்யூஸ்டு தப்பு செய்றான்; அதற்காக எல்லோரையும் போலீஸ் ரொம்ப மோசமா நடத்துது? ஏன் கஞ்சா, குடி, போதையை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்குது?” என்றார்.

“என் பையன, வீட்டுக்குள்ளேயே பூட்டிவெச்சிருக்கேன்; வெளிய அனுப்ப பயமா இருக்கு; இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ள இந்த இடத்த வித்துட்டுப் போயிடணும் சார்! ஊர்ப்பக்கம் போலாம்னு இருக்கோம். கண்ணகி நகர் வாழத் தகுதியில்லாத இடம் சார். எல்லா பசங்களும் அழிஞ்சிபோவுதுங்க. யாரோ பாப் மார்லியாம சார், அந்த ஆள் போட்டோ போட்ட பனியனு, தலையில துணி, கர்ச்சீப்பு, எல்லாத்தையும் போட்டுகிட்டு கஞ்சா குடிக்கிறானுங்க” என்றும் சொன்னார்.

“யாரும்மா பாப் மார்லி?”என்றேன். ” ஏதோ கஞ்சா குடிக்கிற பெரிய ஆளாம.. சார். பாட்டு பாடுவாராம.. அவரோட படம்தான் கண்ணகி நகர் முழுக்க இருக்கு” என்று சொல்லிவிட்டுப் போனார் அவர்.

aravindan-sivakumar-copy

2009ஆம் ஆண்டு… கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில்  ஆய்வுசெய்த உண்மை அறியும் குழுவில் மரு. குருமூர்த்தியும் (அப்போது, பட்டமேற்படிப்பு மாணவர்), நானும் இருந்தோம். வாழ்வதற்கு அத்தியாவசியமான தண்ணீர் இல்லாமல் இருக்க, குடி மட்டும் எப்படி மக்களுக்கு தடையில்லாமல் வழங்கப்படுகிறது என்பதை நாங்கள் விவாதிதோம். எங்கள் மருத்துவமனையில் குடிப்பழக்கத்திற்காக கண்ணகிநகரிலிருந்து சிகிச்சைக்கு  வந்த நோயாளிகளைப் பரிசோதித்த பட்டமேற்படிப்பு மாணவர்களிடம், கண்ணகி நகர் பற்றியும், (I.D.P) இடப்பெயர்வு, அதன் உளவியல் தாக்கம் பற்றியும் நாளும் விவாதம் நடந்தது.
ஒருவரின் வாழும் சூழலே மனநலத்தையும் மனநோய்க்கான முக்கிய காரணியாகவும் இருக்கிறது என்பதைப்  பற்றியும் மாணவர்களிடம் பேசிய காலம் அது. மருத்துவ சிகிச்சை வழங்கும் போது  சமூகச்சூழலின், புறக்காரணிகளின் தாக்கத்தை முற்றிலும் மறுத்து, கண்ணை மூடிக்கொண்டு சிகிச்சை அளித்தால், நோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பது கடினமாகும் என்பது மாணவர்களிடம் அழுத்தமாய்ப் பதியவைக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக கண்ணகிநகரிலிருந்து, பல இளைஞர்கள், போதைப்பொருள் பழக்கத்தில் மூழ்கி மீளமுடியா துயரத்தோடு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுகிறார்கள். கற்றல்குறைபாடு, படிப்பில் கவனச்சிதறல் போன்ற பல காரணங்களால் பாதியில் முடியும் பள்ளிப்படிப்பு, சுலபமாகக் கிடைக்கும் கஞ்சா, குடி, ஃபெவிபாண்ட் என முளையிலேயே மூளை நரம்பு சிந்திக்க வழியில்லாமல் சின்னாபின்னமாக்கப்படுகிறது.

சுய அடையாளத்தைக் கட்டமைக்கும் பதின்பருவத்தில், தான் வாழும் இடத்தில் இருக்கும் இளைஞர்களின் பிம்பத்தையும், ’மகிமைப்படுத்தப்பட்டு ப்ளெக்ஸ் போர்டில் வளர்ந்து நிற்கும் ’தலை’, ’தளபதி’களும், அவர்களின் ’வீரதீர’ செயல்களையும் மனதில் பதியவைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை எண்ணங்களை நியாயப்படுப்படுத்துபவர்களை மட்டுமே தங்களின் அருகில் வைத்துக்கொள்கிறார்கள்.

தன்னுடைய திறன் எது என்பதைக் கண்டெடுக்காமல் ஒதுக்கி விலக்கிவிடும் சமூகத்தில், அந்த இளைஞன், தன்னுடைய கோபத்தை, எதிர்மறை உணர்ச்சிகளைக் கையாளத்தெரியாமல் இருக்கிறான். இப்படியான நிலையில், குற்றச்செயல்களின் கதவுகள் அவனை வரவேற்கின்றன. கோபத்தை, ஆத்திரத்தை, நினைத்தது நடக்காதபோது ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கை, இவர்கள் பிளேடால் கீறி, கிழித்து தற்காலிகமாக தணித்துக்கொள்கிறார்கள். அதையே எதிர்ப்பை வெளிப்படுத்தும் வடிவமாகவும் பயன்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள்.

வேலையின்மை தொடர… மது, கஞ்சா மற்றும் இதர போதைப் பழக்கத்திலிருந்து வெளிவர வழிதெரியாமல், அதற்குள்ளேயே மூழ்கி, வாழ்க்கையைத் தொலைப்பவர்கள், பலர். அசுரவேகத்தில் வளர்ந்து , நகரமயாக்கலில் பிளவுண்டு ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கும் சமூகத்தில், திருட்டு, கொள்ளையின் மூலம் வேகமாய் முன்னேற முனைகிறார்கள். தடுமாறி, பலர் சிறையிலும் சிலர் சவக்குழியிலும் மெளனமாக்கப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாமல், திறனுக்கேற்ற வேலையில்லாமல், போதையில் மூழ்கிக்கிடக்கும் – சண்டை சச்சரவு மண்டிக்கிடக்கும் இடமாக, தற்கொலைகளும், முயற்சிகளும் அதிகமாய் நிலவுகின்ற இடமாக, கண்ணகி நகர் திகழ்கிறது.

நகரத்தின் மையப்பகுதியில் யார் வாழவேண்டும், எவர் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்து, சமூகத்தின் ஒரு பிரிவை வாழ்வதற்குத் தகுதியில்லாத இடத்தில் குடியமர்த்தி, அங்கு நீ வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று நிர்பந்திக்கும்போது, அதன் எதிர்வினை மிக மோசமாக இருக்கும். 16,000 குடும்பங்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் சென்னையில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து குடியமர்த்தப்பட்டு, வேலைக்கும் மருத்துவத்திற்கும் சென்னையின் மையப்பகுதிக்குச் செல்லவேண்டியுள்ளது.

2014 அக்டோபர் மாதம், உலக மனநல நாளையொட்டி குடி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை கண்ணகி நகரில் ஏற்பாடு செய்து, மக்களிடம் பேசினோம். அப்போது, ” சார், இந்த மாதிரியான ரோடு இல்லாத- சாக்கடை தேங்கியிருக்கும் இடத்துல, என் புள்ளகுட்டிய வெச்சுக்க கஷ்டமாயிருக்கு; யாரையும் கேள்விகேட்க முடியல; எதிர்க்க முடியல. இந்த இயலாமையால குடிக்குறேன்” என்றார் ஒருவர்.

குடி ஒழிப்பையும் மனநலம் பேணுவதையும் ஒற்றைப் பரிமாணத்தில் கொண்டுசெல்ல முடியாது. நாம் வாழும் சூழலையும், மனநலத்தைத் தீர்மானிக்கும் புறக்காரணிகளையும் மேம்படுத்தாமல் போதையை ஒழிக்கமுடியாது என்பதை தலையில் கொட்டுவைத்து விளக்கினார், அவர்.

குற்றத்தையும் போதைப்பழக்கத்தையும் நாம் தடுக்கவிழையும் அதே வேளையில், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியில் பிறந்து வளர்ந்த, வளரும் சிறுவர்கள், இளைஞர்களின் மனநலம் குறித்த ஆய்வும் செய்யப்பட வேண்டும். சமூகச்சூழலின் தாக்கமும் , வளர்ந்த- வளர்ந்துவருகின்ற சிறுவர், இளைஞர்கள் மீதான அதன் பாதிப்பை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்து பதியவேண்டும்.

நேற்றுகூட கண்ணகி நகரிலிருந்து வந்த ஒருவரைச் சந்தித்தேன். ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்தை வன்முறையை விவரித்தான், ஒரு சிறுவன்.

“காவல்துறையினரின் அடக்குமுறையை எதிர்த்து தங்களையே பிளேடால் கிழித்துக்கொண்டே ஊர்வலமாக நடந்து வந்தனர் சிலர். அவர்களை போலீஸ் பிடித்தது. காவல் நிலையத்துக்கு ஒருத்தனை அழைத்துச் செல்லாமல் தனியே அழைத்துச் சென்றது” என்று சொன்னான். அந்த இளைஞன் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியாது!

பாப் மார்லியின் கஞ்சா அடிக்கும் பிம்பத்தை உள்வாங்கிக் கொண்டு வலம் வரும் கண்ணகி நகர் இளைஞர்களிடம் ஒடுக்குமுறையைப் பற்றியும் போராட்டம் பற்றியும்  பாப் மார்லியின் பாடல்களின் மூலமாகவே பேச வேண்டியுள்ளது. ஒடுக்கப்படும் சமூகம் எப்படி எதிர்த்து நிற்கும் என்று சென்னையில் உள்ள மக்களுக்கும் அந்த வரிகளின் மூலமாகவே தெரியப்படுத்த வேண்டியுள்ளது.

“எழுந்து நில், உன் உரிமைக்காக உறுதியாய் நின்று போராடு,
உரிமைகள் மீட்டெடுக்கும் வரை எழுந்து நில், உன் உரிமைக்காக போராடு”.
என்று சொன்ன பாப் மார்லியின் வரிகள் கண்ணகி நகர் இளைஞருக்கு தேவையாகவுள்ளது.

“முதல் வகுப்பு குடிமக்கள்,
இரண்டாம் வகுப்பு குடிமக்கள்
என்று இருக்கும் வரை,
அடிப்படை மனித உரிமைகள்
எல்லோருக்கும் உறுதி செய்யும் வரை
இந்த போர் நீடிக்கும்”

(பாப் மார்லியின் ‘போர்’ பாடலிலிருந்து)

வர்க்க முரண் களையப்படாதவரை, எல்லோருக்குமான மனித உரிமைகள் நிச்சயிக்கப்படும் வரை அமைதியைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்ற பாப்மார்லியின் வாசகத்தை, கண்ணகி நகர் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, சென்னையில் உள்ளவர்க்கும் கொண்டுசெல்வோம்!

அரவிந்தன் சிவக்குமார், மனநல மருத்துவர். தொடர்புக்கு spartacus1475@gmail.com