சி. மதிவாணன்

சி. மதிவாணன்
சி. மதிவாணன்

‘அறுவை சிகிச்சை தாக்குதல்‘ (surgical strikes) என்ற பெயரில் இந்திய ராணுவம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ‘பயங்கரவாத முகாம்‘கள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் சொல்கின்றன. அதாவது, அதன் பொருள் பாகிஸ்தான் பரப்பில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. செத்தவர்கள் பயங்கரவாதிகளா? அப்பாவிகளா? என்று நாம் அறியோம். இந்திய ராணுவமும் அறியாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இதற்கு முன்பு, சிந்து நதி நீரை முடக்கி வைப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. நதி நீர் என்பது ஒரு நாட்டின் வள ஆதாரம் என்பதை விட, அது ஒரு விவசாயியின் வள ஆதாரம் என்பதே உண்மையானது. காவிரியைத் தடுத்தால் காவிரி டெல்ட்டா விவசாயி அழிவான். சிந்துவைத் தடுத்தால் பாகிஸ்தான் விவசாயி மட்டுமல்ல, தடுத்து நிறுத்தும் அணை உடைந்தால், இந்தியனும் அழிவான்.

அணு குண்டு போடுவோம் என்று இந்திய அமைச்சரும் நாஙகளும் போடுவோம் என்று பாகிஸ்தான் தரப்பும் ஆவேசப்பட்டுள்ளன. அணு குண்டு வெடித்தால் தன் சொந்த நாடு, எதிரி நாடு என்று எல்லைகளைப் பிரிக்காது. மானுடர்களை, உயிர்களை உடனடியாக, அல்லது சித்தரவதை செய்து கொன்று குவிக்கும்… காவி- பச்சை வேறுபாடு பார்க்காது.

காவி பயங்கரமும், முஸ்லிம் எதிர்வினையும் பாகிஸ்தானை உருவாக்கின. இந்தியத் துணைக் கண்டம் என்ற அடையாளத்துடன் நின்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களார்களான பெரிய மக்கள் திரளைப் பிளந்தன. ஏகாதிபத்தியங்களின் விளையாட்டுக் களமாக இந்திய துணைக் கண்டத்தை மாற்றின.

இரத்தத்தில் காவியும் இல்லை – பச்சையும் இல்லை. யுத்தத்தில் என்றும் தேசபக்தியில்லை. ஏனெனில், மக்களைத் தவிர்த்தால் எந்த தேசமும் இல்லை.

யுத்தம் வேண்டாம். இரத்தம் வேண்டாம்…

நாம் காவிகளை எதிர்த்து நிற்போம். பாகிஸ்தான் மக்கள் அவர்கள் நாட்டு ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்பார்கள்.

ஏனென்றால், மக்கள் அமைதியை, வாழ்க்கையை நேசிக்கிறார்கள். இந்திய- பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் யுத்தத்தை- ஏகாதிபத்தியம் அளிக்கும் பிச்சையை- லாபத்தை- தங்களின் சுய லாபத்தை மட்டுமே யோசிக்கிறார்கள். இந்திய அரசும்- பாகிஸ்தான் அரசும் முதலாளிய- ஏகாதிபத்திய வெறிகளின் அரசுகளே என்பதை நினைவில் கொள்வோம்.

அமைதி வேண்டும்… எந்த மதத்தினராக இருந்தாலும் மக்களுக்கு வாழ்க்கை வேண்டும்.

சி. மதிவாணன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.