இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 வரை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. விமானப்படை விமானங்களில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பீமர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள இந்திய ராணுவம், நமது வீரர்கள் யாரும் இந்த தாக்குதலில் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு சொல்கிறது. இதில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும்  இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெளியேறுகின்றனர்

இந்திய விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

‘அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும்’

நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதன்மூலம் நமது நாட்டுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதாகவும் சோனியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சந்திப்பு-ராகுல் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியாவிடம், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்தார். ராணுவத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.