சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, கோயம்பேடு, அண்ணாசாலை, அம்பத்தூர், தியாகராய நகர், வண்டலூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிற்காமல் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தமிழகத்தில் இன்றும் பல பகுதிகளில் ம‌‌ழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதன் காரணமாக வட உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது.