கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மூத்த மகள் ரம்யா கோவையை அடுத்து உள்ள கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மகேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி ராஜா அறிவித்தார். இதனையடுத்து, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மகேஷுக்கு இன்று தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.