சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரமான மதுரைக்கு அருகில் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில் 5300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

தமிழர்களின் நாகரிக வரலாற்றையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளன. தமிழர்களின் நாகரிகம் கிராமம் சார்ந்தது என்றும், விவசாயம் மட்டுமே அவர்களின் தொழிலாக இருந்தது என்று தான் இதுவரை அறிந்திருக்கிறோம்.

keeladi_1

ஆனால், கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளன. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கீழடியில் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கு அடையாளமாக 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அங்கு தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும்; அவற்றில் இருந்து தான் அப்பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுடுமண்ணால் ஆன முத்திரைகள், சதுரங்க காய்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.

This slideshow requires JavaScript.

 

கீழடியில் பண்டைய தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் 110 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் நிலையில் இதுவரை அரை ஏக்கரில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டால் தமிழர் நாகரிகம் குறித்து இன்னும் வியப்பளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகலாம். ஆனால், மொத்தமுள்ள 110 ஏக்கர் நிலத்தையும் ஆய்வுக்காக பெறுவதில் தொல்லியல் ஆய்வுத் துறையினருக்கு பல நெருக்கடிகள் இருப்பதாக தெரிகிறது.

தொல்லியல் ஆய்வுக்காக கூடுதல் நிலப்பரப்பைப் பெற்றுத் தருவதும், தொல்லியல் ஆய்வில் கிடைத்த 5300 பொருட்களையும் காட்சிக்கு வைப்பதற்கான அருங்காட்சியகத்தை அமைக்க 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதும் தமிழக அரசால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால், தமிழர் நாகரிகம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் இல்லாத தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை.

 

அதனால், கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அனைத்தையும் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலம் மைசூருக்கு கொண்டு சென்று அங்குள்ள கிடங்கில் போட்டுவைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக போன்ற அரசியல் கட்சிகள் எதிர்த்து தெரிவித்துள்ளன. கிழடியில் கிடைத்த பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் தமிழக அரசு வழங்க வேண்டும். அதேபோல், கீழடியில் மொத்தமுள்ள 110 ஏக்கர் பரப்பளவுக்கும் தொல்லியல் ஆய்வை விரிவுபடுத்தவும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அறிக்கைகள் மூலம் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெங்களூரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

இதனிடையே மதுரை அருகே கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல் பொருட்களை பெங்களுரு கொண்டு செல்ல, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த கனிமொழி மதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கீழடியில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு மாறாக, மத்திய அரசு, கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை பெங்களூருவில் உள்ள தேசிய அகழ்வாராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், கீழடியில் நிரந்தர அகழ்வாராய்ச்சி மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கனிமொழி மதி குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் நாகமுத்து மற்றும் முரளிதரன் அடங்கிய அமர்வு, கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்த தொல்பொருட்களை பெங்களுரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.