தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில் அவதூறான பதிவுகளை எழுதியதாக பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவாரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை   தமிழச்சி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழச்சியின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து தமிழச்சி தனது முகநூலில், “சென்னை காவல்துறை என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை  வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் காவல்துறையினர் மேற்கொள்ள உள்ள விசாரணைக்கு காத்திருப்பேன். தகுந்த உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே  இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன்” என்று எழுதியுள்ளார்.