சென்னை லயோலா கல்லூரி பி.எட் பயிற்சி வளாகத்தில் டாக்டர் பேரா.ஜெபமாலைராஜா “caste victimization” – A Study on the Dalits (Arunthathiyar’s) of Dalits, ஆய்வு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கலந்து கொண்டு ஆய்வு நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அருந்ததியர்களின் நிலை பற்றியும், அவர்கள் விடுதலைக்கான வழிமுறைகள் பற்றியும், சமூநீதியின் புரிதல்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

“பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இதே வளாகத்தில் இதைப்போன்ற ஆய்வு நூல்கள் பறையர் சமூகத்தினருக்கு கிடைத்துவிட்டது, அதன் பயனாக அவர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து விட்டனர், அரசியல் ரீதியாகவும் பெரும் வளர்ச்சியை தொடர்ந்து வருகின்றனர்,

ஆனால் அருந்ததியர்களைப் பற்றி ஆய்வு நூல் முதன்முதலில் பேரா.மார்க்கு அவர்கள்தான் கரிசல் சங்கத்தில் இருந்த போது “அருந்ததியர் வாழும் வரலாறு” என்னும் நூலை கொண்டு வந்தார்,

அதன் பிறகு மிகவும் துள்ளியமாக, சரியான ஆய்வுடன் நண்பர் எழில்.இளங்கோவன் அவர்கள் எழுதி பேரவை சார்பில் வெளியிட்ட “அருந்ததியர் வரலாறு” என்ற நூல்தான் அருந்ததியர்களை பற்றிய புரிதல்களை தெரிந்து கொள்ள குறைந்த பட்சம் உதவியது. ஆனால் இதைப்போன்ற நூல்கள் நம்மிடம் மிகவும் குறைவாகவே உள்ளன.

நிலைமை இப்படி இருக்க அருந்ததியர்கள் முழு விடுதலை பெறுவதற்கு நாம் இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முன்னதாக அருந்ததியர் விடுதலை என்பது தூய்மைப் பணியில் இருந்து தொடங்க வேண்டும், அவர்கள் அத் தொழிலில் இருந்து முழுமையாக விடுபடுவதில்தான் அமைந்துள்ளது, எனவே சமூகநீதியின் நீட்சியாக அருந்ததியருக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு தூய்மைப் பணியாளருக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றால் அதை ஆதித்தமிழர் பேரவை முழுமையாக வரவேற்கும்.

எனது நீண்ட கால நண்பரான பேரா.ஜெபமாலைராஜா அவர்கள். அருந்ததியர் உள் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு பலவகையில் இருந்தபோது உள் இடஒதுக்கீட்டின் நியாயத்தைப் பற்றி ஆதரவு நூல் வெளியிட்டவர் இவர் மட்டும்தான். அவரின் இந்த முயற்சியை ஆதித்தமிழர் பேரவை சார்பிலும், எனது சார்பிலும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”

நிகழ்வில் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ.ஆனந்தன், நாமக்கல் தமிழரசு டெல்லி.கந்தசாமி, வேலூர் செந்தில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பேரவையினர் பங்கேற்றனர்.