அகமது இக்பால் 

*ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த மதசகிப்பு, அமைதி எல்லாவற்றையும் மொத்தமாக கொலை செய்தாயிற்று;

*அடிப்படை உரிமையான தனிமனிதனின் உணவுத்தேர்வையும் கூட பிரச்னைக்குரிய ஒன்றாக்கி கொலை பாதகம் வரை சென்றாயிற்று;

*விகாஷ்புருஷின் சொந்த மாநிலத்திலேயே தலித்துக்களின் சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார நிலைமையின் லட்சணம் என்ன என்பதை உனா நிகழ்வும் தொடர்ந்த மாபெரும் எழுச்சி யாத்திரையும் அம்பலமாக்கின

*‘ஒவ்வொருவரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் ரூபாய் ஏறும் நன்னாளை எதிர்பாருங்கள்’ என்ற விகாஷ்புருஷின் வாக்கு வெறும் பச்சைப்பொய் என அம்பலமாயிற்று; ஆனால் கார்பொரேட் பெருமுதலாளிகளுக்கு சொத்துவரியை ஒழித்ததன் மூலம் 8,325 கோடி ரூபாயை இத்தேசம் இழந்தது.

*சாமானிய இந்தியனின் மீது மறைமுக வரியை 23,383 கோடியாக விகாஷ்புருஷ் உயர்த்தினார்; ஆனால் கார்பொரேட் பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை (அதாவ்து அரசு இழந்த தொகை) ஐந்து லட்சம் கோடிக்கு மேல்

*சாமான்ய அன்றாடம்காய்ச்சிகளை நேரடியாக பாதிக்கின்ற சேவை வரியை 12.36, 14, 14.5, 15 என தொடர்ந்து உயர்த்திக்கொண்டே சென்றாயிற்று

  • ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆதார் அட்டையை ஒழிப்போம்’ என்று 2014 தேர்தல் சமயத்தில் விகாஷ்புருஷ் மார்தட்டினார்; ஏற்கனவே ஒவ்வொரு குடிமகனிடமும் பல அடையாள அட்டைகள் இருக்க, சமையல் எரிவாயு மானியத்தையும் ரேசன் திட்ட்த்தையும் முற்றாக ஒழிக்க இப்போது ஒவ்வொரு குடிமகனையும் ஆதார் அட்டைக்காக கையை முறுக்குகின்றார் விகாஷ் புருஷ் (ஒட்டுமொத்த ஆதார் பதிவுகளும் அமெரிக்க எஜமானிடம் ஒப்படைக்கப்படும் என்பதுதான் இதன் உண்மையான நோக்கம்)

*குடிநீர், பொதுசுகாதாரத்தேவைகளுக்காக 2015-16 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட்து வெறும் 6,326 கோடி மட்டுமே, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதியே இது; ஆனால் தனது ஆட்சிக்காலத்துக்குள் ஆறு கோடி கழிப்பறைகளை, அதாவது வருசத்துக்கு 1.20 கோடி கழிப்பறைகள் கட்டப்போவதாக, ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலம் வழங்கப்போவதாக ‘ஸ்வாச்ச் புருஷ்’ (இந்தியாவுக்கு வரும்போதெல்லாம்) தெருத்தெருவாக முழங்குகின்றார்

*மதிய உணவுத்திட்டம் உட்பட கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த விகாஷ்புருஷின் பட்ஜெட்டில் 3 விழுக்காடு மட்டுமே

*சாமான்ய உழைக்கும் மக்களுக்கு ஓரளவு வருவாய் தந்துகொண்டிருந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ’விகாஷ் புருஷ்’ ஒதுக்கிய தொகை 34,699 கோடி மட்டுமே; இது தேவையில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே

*தினக்கூலித்தொழிலாளர்களின் சேமிப்பான ப்ராவிடண்ட் நிதியை அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில்தான் மீட்டு எடுத்துக்கொள்ள முடியும் என சர்வாதிகார உத்தரவு இட்டார் விகாஷ் புருஷ்; ஆனால் ஏப்ரல் மாதம் பெங்களூர் வீதிகளில் திரண்ட அன்றாடக் கூலித்தொழிலாளிகள் (இவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள்) இரண்டு நாட்கள் பெங்களூரின் அசைவை நிறுத்தினார்கள்; கார்பொரேட் ஊடகங்கள் விகாஷ்புருஷுக்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தை மூடி மறைத்தன என்றாலும் இரண்டாவது நாளே சத்தமில்லாமல் தனது சர்வாதிகார உத்தரவை விகாஷ் புருஷ் திரும்பப்பெற்றது வரலாறு

*இத்தனைக்கும் மேலாக முக்கியமாக வடமாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது; மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை இல்லாத விகாஷ்புருஷுக்கு, எத்தனை மோசடிகள் செய்தாவது இந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க (அல்லது இரண்டாவது இடத்தையாவது பிடிக்க) வேண்டிய நிர்ப்பந்தம்.

விகாஷ்புருஷின் முன்னோடி ஒருத்தர் ஏற்கனவே 1998இல் போட்டு வைத்திருந்த ஆனால் பாழடைந்து முட்களும் சப்பாத்திக்கள்ளிகளும் மண்டி முளைத்து நாசமடைந்துள்ள பழைய தேஷ்பக்தி ராஸ்தாவை தார் ஊற்றி மேடுபள்ளம் செப்பனிட்டு அதில் இப்போது விகாஷ் புருஷும் பயணிக்கின்றார்; நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க பாரத்தேஷ் எங்கும் வீதிவீதியாக வீடுவீடாக சானல் சானலாக தேஷ்பக்தி நுங்கும்நுரையுமாக கொப்பளித்து கரைபுரண்டு ஓடி…

அகமது இக்பால், சமூக-அரசியல் விமர்சகர்