முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியது:

“மாண்புமிகு முதல்வர்அவர்கள் நலமுடன் இருக்கிறார், விரைவில் குணமடைந்து ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார்” என்று அதிமுகவின் மூத்த தலைவர்களை நான் சந்தித்த போது கூறினார்கள். மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை. இரண்டாவது தளம் முதல்வர் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற தளமாகும். அங்கேயும் பொதுமக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான முதல்வர் அவர்கள், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற நிலையில், அவருடைய உடல்நலத்தை விசாரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே இன்று அப்பலோ மருத்துவமனைக்கு வந்தோம். “அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்; வழக்கம் போல் தனது அரசியல் கடமைகளை ஆற்ற வேண்டும் என்று மனமுவந்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அளித்தோம்” .

நமது ஆளுநர் அவர்களின் அறிக்கையில், முதல்வர் அவர்கள் குணமடைந்து வருகிறார் என்று இருந்தது. அதிலே எனக்கு மனநிறைவில்லை என்கிற காரணத்தால் தான் நேரிலே சந்திக்கிற முயற்சியை எடுத்தேன். அதனடிப்படையில், இரண்டாவது தளத்துக்கு நான் சென்றேன். அதிமுகவின் மூத்த தலைவர்கள் என்னை வரவேற்றார்கள். அவர்களோடு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அதிமுக வின் மூத்தத் தலைவர்களை நேரிலே சந்தித்ததில், அவர் விரைவில் நலம்பெறுவார் என்கிற செய்தியை அறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேரிலே சென்று அவர் உடல்நலத்தை அப்போது விசாரித்தேன். அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்கள் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்த போது நேரிலே சென்று அவருடைய உடல் நலத்தை விசாரித்தேன். அந்த அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான முதல்வர் இவர்கள் இன்று மருத்துவமனையிலே இருக்கிற போது அவருடைய உடல்நலத்தை விசாரிப்பது எனது கடமை. ஆகவே தான் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தேன்.

முதல்வர் அவர்களை பற்றி பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டிருக்கிற நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும், அவ்வளவுதான். அரசு தரப்பிலே அவருடைய உடல்நலன் குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டிருந்தோம். இன்றைக்கு நேரிலே வந்து அவருடைய உடல் நலத்தை விசாரித்திருக்கிறோம். என்னிடத்திலே பேசிய மூத்த தலைவர்கள் மிக நம்பிக்கையோடு தெரிவித்தார்கள்”.