இந்தியா முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, அகில பாரத இந்துமகா சபை, காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

காந்தி ஜெயந்தியை, எதிர்ப்பு தினமாக அனுசரித்தது இந்து மகா சபை.  மேலும் இந்த தினத்தில் நாதுராம் கோட்சேயின் சிலையை தனது அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கோட்சேயின் சிலை வைக்க முயற்சியெடுத்து, எதிர்ப்பின் காரணமாக கைவிட்டது இந்து மகா சபை.

“கோட்சே சிலையைத் திறக்க முயற்சித்தபோது அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தடைபட்டது. இந்த முறை எதிர்ப்புகளை மீறி நாங்கள் சிலையை திறந்துவிட்டோம். இந்த நாளைவிட கோட்சே சிலை திறக்க சிறப்பான நாள் கிடைக்காது. எங்களைப் பின்பற்றி இந்தியர்கள் காந்தியை பின்பற்றுவதை விடுத்து கோட்சேவை துதிக்கத் தொடங்க வேண்டும்” என்கிறார் இந்து மகா சபையின் தேசிய துணை தலைவர் பண்டிட் அசோக் சர்மா.

மேலும் அவர், “காந்தி வழியை இந்த நாட்களில் பின்பற்ற முடியுமா? இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறதே அதுதான் இதற்கான பதிலாக இருக்கும். நாம் எல்லோரும் கோட்சேயின் கோட்பாடுகளைப் பின்பற்றி, காந்தியைத் துதிக்கிறோம். காந்தியை பின்பற்றியிருந்தால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவைப்பட்டிருக்காது” என்கிறார்.