செய்தி சேகரிக்கச் சென்ற தீக்கதிர் நிருபர் ஜாபர் உசேன் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் அவருக்கு காது கேளாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காயங்களுடன் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளவை:

“தீக்கதிர் பத்திரிகையின் நிருபர் தோழர் ஜாபர் மீது எவ்வித காரணமுமின்றி மணலி புதுநகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி பகுதியில் 20வது வார்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் டி. பாபு வேட்புமனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலத்திற்கு சென்ற போது, தீக்கதிர் பத்திரிகை நிருபர் தோழர் ஜாபரும் உடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணலி புதுநகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் திரு. சரவணன், மணலி புதுநகர் ஆய்வாளர் திரு. தீபக்குமார் மற்றும் காவலர் திரு. சசிகுமார் ஆகியோர் ஜாபரை தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல அனுமதியில்லை என்றும், தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டே கண்மூடித்தனமாக முகத்திலும், காதிலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமுற்ற ஜாபர் காது கேளாத நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எவ்வித காரணமும் இன்றி தீக்கதிர் நிருபர் ஜாபரை தாக்கிய காவல்துறையினரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது”.

இத்தாக்குதலுக்கு பத்திரிகையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இர.இரா. தமிழ்க்கனல்:

ஏவல் நாய்களின் வெறியாட்டம்..! சென்னையில் போலீசால் மூத்த செய்தியாளர் தீக்கதிர் ஏட்டின் தோழர் ஜாபர் தாக்கப்பட்டு, வலது காது கேட்காத அளவுக்கும் முகம் வீங்கியும் பாதிப்பு. ………….. இந்த முடி சனநாயகத்தின் அதிகார அத்துமீறலைக் கண்டிப்போம்; சட்டரீதியாக தண்டிப்போம்!

முரளிதரன்:

தீக்கதிர் புகைப்படகலைஞர் ஜாபர் மீது காவல்துறையினர் மணலியில் தாக்குதல். தாக்கியது பைப் சரவணன் என்ற இன்ஸ்பெக்டர் . மணலி புதுநகர். அவர்மீது பொதுமக்களை தாக்கியதாக ஏராளமான வழக்குகள் உள்ளன. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை தேவை….