நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

ஒரு காவிரிப்படுகை மாவட்டக்காரனாக இது எனக்கொரு துயரமான ஆண்டு. என் வீட்டையொட்டியே வெறும் நான்கடியில் தொடங்கி கண்ணுக்கெட்டிய வரை வயல்கள்தாம். உழவும், நடவுப்பாட்டும், கொக்குகள் கூட்டமுமாக இருந்திருக்க வேண்டிய பசுமை வயல்கள் பழுதடைந்து கிடக்கின்றன. என் வாழ்நாளில் இவ்வளவு வறட்சியாக இவ்வயல்களை நான் கண்டதில்லை. கடந்த 2012க்கு பிறகு குறுவைச் சாகுபடி மறுக்கப்பட்ட வயல்களே இன்னமும் வலியை தந்துக்கொண்டிருக்கையில், சம்பாவும் மறுக்கப்பட்ட இவ்வாண்டு மனதைக் குலைக்கிறது. பத்தடிக்குக் கீழ் தண்ணீர் கிடைத்து வந்த ஊரில் இவ்வாண்டு அய்ம்பது அடி ஆழத்துக்குக் கீழ் நீர்மட்டம் இறங்கியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவிரியில் முறையாக நீர் வராவிட்டால் என்ன நேரும் என்பதை நடப்பு நிலை உணர்த்திவிட்டது.

கர்நாடகம், காவிரி நீரைக் கொடுக்க மறுப்பதும், கடைமடைப் பாசன உரிமைக்கு எதிராகச் செயற்படுவதும், கடந்தாண்டுகளில் அது தன் பாசனப் பரப்பை சட்டவிரோதமாக விரிவாக்கிக் கொண்டதும் மறுக்க முடியாத உண்மை. இதைக் கண்டிப்பதும், நமக்கான உரிமையைப் பெற தொடர்ந்து போராடுவதும் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் இச்சிக்கலை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டியது நமது கடமையாகிறது. .

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலையில் நிறையச் சோலைக்காடுகள் இருந்தன. புல்வெளிகளையும் உள்ளடக்கிய இக்காட்டினை பிரிட்டிசார் ‘வீண்நிலம்’ (wasteland) எனக் கருதி, அதனை அழித்துத் தைலமரம், சீகைமரங்களை நட்டனர். கூடவே தேயிலைத் தோட்டங்களையும் உருவாக்கினர். அவர்களுடைய நாட்டில்தான் இவ்வகையான நிலவமைப்பு வீண்நிலமாகக் கருதப்பட்டது. ஆனால் அது நமது சோலைக்காடுகளுக்குப் பொருந்தாது.

சோலைக்காடுகள் ஒருமுறை பெய்யும் மழையைப் பஞ்சுப்போல் ஈர்த்துக்கொண்டு மூன்று மாதங்கள் வரை கூடக் கொஞ்ச கொஞ்சமாய்க் கசியவிடும் தன்மைக் கொண்டவை. அதனால்தான் காவிரி ஒரு காலத்தில் வற்றாத ஆறாய் ஓடியது. தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அன்றைக்கே காவிரிக்கு நீரைக் கொடுத்துக் கொண்டிருந்த ஓடைகளில் சுமார் நான்காயிரம் ஓடைகள் வற்றிப் போயின. இந்தச் சிற்றோடைகள் அனைத்தும் ஒன்றிணைந்துதான் துணையாறுகளாக உருவெடுத்துக் காவிரியில் கலந்தன.

காடுகளை அழித்துத் தோட்டங்களை உருவாக்கினால் மழைப்பொழிவு நாட்கள் குறைந்துவிடும். மலேசியாவில் காடுகளை அழித்து ரப்பர் மரத்தோட்டங்கள் உருவாக்கியப் பிறகு அங்கு யுனெஸ்கோ நிறுவனம் ஓர் ஆய்வு செய்து, 1978ல் அதை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அதன்படி அங்கு மழைநாட்கள் குறைந்துப் போனதோடு மழைப்பொழிவின் வேகமும் அதிகரித்து மண்ணரிப்பு நிகழ்ந்தது அறிய வந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் வேளாண்மை ஆலோசகராகத் தமிழகத்துக்கு வந்த டாக்டர். வோல்கர் என்பவர் நீலகிரியில் காடுகளின் அழிவுக்கும், மழைக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்துள்ளார். 1870லிருந்து 1874 வரை மரங்கள் வெட்டப்பட்ட காட்டுப் பகுதியில் அய்ந்து ஆண்டுகளுக்கான மொத்த மழை நாட்கள் 374 ஆகும். பின்பு அதே இடத்தில் மரங்களை வளர்த்த பின்பு 1886லிருந்து 1890 வரை ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த மழை நாட்கள் 416 ஆக அதிகரித்திருந்தன. அதாவது ஆண்டுக்கு 8 மழைநாட்கள் கூடியிருந்தன. இப்படிப்பட்ட காட்டை அழித்துதான் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தேயிலைத் தோட்ட நிலத்தின் நீர்ப்பிடிப்பு திறன் குறித்த ஆய்வொன்று கென்ய நாட்டில் நிகழ்த்தப்பட்டது. ஒரு பெருமழையின்போது அங்கிருந்த தேயிலைத் தோட்டம் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புக்கு நொடிக்கு 27 கனமீட்டர் நீரை வெளியேற்றியது. அங்கிருந்த இயற்கை காடோ மக்குகள் நிறைந்திருந்ததால் நீரைத் தன்னுள் உறிஞ்சிக்கொண்டு வெறும் 0.6 கனமீட்டர் நீரை மட்டுமே வெளியேற்றியது. அதாவது தேயிலைத் தோட்டத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு காடுகளைவிட 45 மடங்கு அதிகம்.

இப்படி மிகையாக வெளியேற்றப்படும் நீர்தான் பெருமழைக்காலத்தில் ஒரே நேரத்தில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து அணைக் கொள்ளளவையும் தாண்டி கடலுக்கு ஒரே தடவையில் சென்று சேர்கிறது. அணைகள் இல்லாத காலக்கட்டத்தில் காடுகள் இயற்கை அணையாகச் செயற்பட்டு வந்ததால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீரோடிக் கொண்டிருந்தது. .

காவிரியின் முதன்மை துணையாறுகளான பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே ஓடி இவ்வாறே காவிரியில் நீரைச் சேர்த்துக் கொண்டிருந்தன. தமிழக எல்லைக்குள் ஓடும் இவ்வாறுகளில் கிடைத்து வந்த நீரின் அளவு குறைந்து போனது ஏன் என்ற கேள்விக்கு முதலில் நாம் விடைக் காணவேண்டும்.

பவானிக்கு மேலுள்ள குந்தா உள்ளிட்ட நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு 16.8 டிஎம்சியாக இருந்தது. பவானி சாகரின் கொள்ளளவு 32.8 டிஎம்சி. இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அளவு இன்றும் கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி. சோலைக்காடுகளை அழித்துத் தேயிலை வளர்ப்பது தொடர்வதால் குந்தா நீர்தேக்கம் 1990களிலேயே மாநிலத்திலுள்ள இதர நீர்த்தேக்கங்களை விட அதிகளவில் நீர்க் கொள்ளளவை (2.7%) ஆண்டுதோறும் இழந்து வந்தது.

காவிரியில் மொத்த நீர்வளம் 1934-35 தொடங்கி 1971-72 வரை மேட்டூர் நீர்த்தேக்கத்தில் சராசரியாக 527 டிஎம்சியாக இருந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் கீழணை நீர்த்தேக்கத்திலும் காவிரியில் மொத்த நீர்வளம் கணக்கிடப்பட்டுள்ளது. கீழணை நீர்த்தேக்கத்தின் சராசரி நீர்வளம் 766 டிஎம்சியாகும். மேட்டூருக்கு கீழேயுள்ள இவ்வணையில் வந்து சேரும் நீரில் தென்மேற்கு பருவமழையால் பலன் பெறும் பவானி, அமராவதியோடு வடகிழக்கு பருவமழையால் அதிகப் பலன் பெறும் நொய்யலும் வந்து காவிரியில் கலப்பதால் இந்தளவு நீர் கிடைத்து வந்தது. இவ்வாறுகள் தந்த இந்த உபரி நீர்வளம் இன்று எங்கே போனது என்பதுதான் கேள்வி.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெருநிறுவனங்களின் தேயிலைத் தோட்டங்கள் அதற்கு அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி காடுகளை ஆக்கிரமித்து அழித்து விரிவாக்கிக் கொண்டதாக எழுந்த புகாருக்கு இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த அரசும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட 99 ஆண்டுக் குத்தகைக் காலம் முடிந்தும் தேயிலைத் தோட்டங்களை இன்னும் இயங்க அனுமதித்துக் கொண்டிருப்பதும் நமது அரசுகள்தாம்.

அன்று காவிரி தோன்றும் குடகுமலைக் காட்டை அழித்து ஆங்கிலேயர்கள் காப்பியை பயிரிட்டபோது, அது குறித்துக் கவலைப்படாமல் கும்பகோணத்தில் இருந்தவர்கள், ‘பேஷ்… பேஷ்… காப்பி நன்னாருக்கு’ என்று சுவைத்ததன் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். தேயிலைத் தோட்டங்களும் நமது நீரை காவு வாங்கியவையே என்பதைக் காவிரி உழவர்கள் இனியாவது உணர வேண்டும்.

இத்தேயிலைத் தோட்டங்களைத் திரும்பவும் காடாக்கினால் மழை வளம் பெருகும் என்பது அப்பட்டமான உண்மை. குத்தகைக் காலம் முடிந்த தேயிலைத் தோட்டங்களையும், காடுகளை ஆக்கிரமித்த தோட்டங்களையும் கைப்பற்றித் திரும்பவும் மறுகாடாக்க வேண்டும். ஒரு நாடு என்பது அதன் நிலத்தில் 33% காடாக இருந்தால்தான் அது இயற்கை வளமிக்கதாக விளங்கும். நம்மிடையே இருப்பது வெறும் 11% மட்டுமே. இங்கு மிகை உற்பத்திக்காகவே தேயிலைத் தோட்டங்கள் பேணப்படுகின்றன. சொந்த நாட்டு மக்கள் சோறு தின்ன நீரில்லாமல் தவிக்கையில் அயல்நாட்டினர் குடிக்கத் தேயிலை வளர்ப்பது ஒன்றும் அவசியமில்லை. இதற்காகத் தேயிலை வேளாண்மை செய்யும் சிறு உழவர்களின் மீது கையை வைக்காமல் பெருநிறுவனங்களின் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக மட்டுமல்ல, காடுகளை ஆக்கிரமித்து நம் ஆற்றின் நீரைத் தடுக்கும் தேயிலைத் தோட்ட பெருநிறுவனங்களுக்கு எதிராகவும், நம் ஆறுகளின் மணலைத் திருடி மிச்சமிருக்கும் நம் நிலத்தடி நீரையும் வற்ற வைக்கும் துரோகத் தமிழர்களுக்கு எதிராகவும் நாம் செயற்பட வேண்டிய காலம் இது.

நிழற்படம்: அருண் நெடுஞ்செழியன்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.