ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் நடைபெறும் பேரணியை நவம்பர் 6 அல்லது 13-இல் நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி தெரிவிக்கிறது.

இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்த மனு விவரத்தையும் தினமணி வெளியிட்டுள்ளது: தமிழகத்தில் அக்டோபர் 9-ஆம் தேதி ராமனுஜரின் 1000-ஆவது ஜெயந்தி, அம்பேத்கரின் 126-ஆவது ஜெயந்தி, விஜயதசமியை ஆகியவற்றை கடைப்பிடிக்கும் விதமாக கோவை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த அணிவகுப்பிற்கு அனுமதி வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் தனி நீதிபதி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற அணிவகுப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி வழங்காமல் அனுமதி மறுத்து வருகின்றனர் என்றார்.

இந்த மனு தனி நீதிபதி முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றைப் படித்து பார்த்த நீதிபதி:

உள்ளாட்சி தேர்தல், இம்மாதத்தில் நடைபெற இருப்பதால் ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த மாதம் அனுமதி அளிக்க முடியாது. மாறாக, நவம்பர் 6 அல்லது 13-ஆம் தேதி அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மக்களின் மத உணர்வுகளை பாதிக்காத வகையில், அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த அணிவகுப்பின் போது, முழுக்கால் சட்டை அணிய வேண்டும். இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவதோடு, சட்டத்தை மீறும் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.