சுந்தரவள்ளி

சுந்தரவள்ளி
சுந்தரவள்ளி

ஒரு படைப்பாளி சமூகத்தின் செவியாக இதயமாக கண்ணாக இருக்க வேண்டும். சமகால நிகழ்வுகளை அவற்றின் மீதான கண்ணோட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று மாக்சிம் கார்க்கி கூறுகிறார்.அந்த வழியில் எழுத்தாளர் விந்தன் சமூகத்தின் ஆன்மாவாக இருந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு பிறந்து 1975 ஆம் ஆண்டு மறைந்த விந்தன் தமது 59 ஆண்டு கால வாழ்க்கையில் துயரத்தை கண்ணீரை அவமரியாதையைத் தாங்கி நின்று படைப்புகளைத் தந்திருக்கிறார். அவர் இடைநிலைக்கல்வியைக் கூட தாண்டவில்லை இரவுப்பள்ளியிலே படித்து எழுத்தறிவை வளர்த்துக் கொண்டு அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகிறார். அவர் எப்போதும் தொழிலாளியின் பக்கமே நின்றிருக்கிறார்.

‘தமிழை சரியாகப் படித்து விட்டுத் தலை கீழாக சிந்திக்கிறவர்கள் மத்தியில் தமிழைத் தலைகீழாகப் படித்துவிட்டு நேராக சிந்தித்தவர் விந்தன்’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் பாராட்டியிருக்கிறார். விந்தனின் கதைகளில் 90 சதவீதம் படித்திருக்கிறேன். அவர் கதைகளில் முக்கியமாக மூன்று பாத்திரங்களைக் காணலாம். ஒரு வில்லன், ஒடுக்கப்பட்ட தொழிலாளி, கடவுள். வில்லன் பாத்திரப்படைப்புகள் பெரும்பாலும் பெரும்பணக்காரர்களாக,பெரிய தொழிலதிபர்களாக, ஒசந்த சாதிக்காரர்களாக இருப்பார்கள். கதாநாயகர்களாக வரும் ஒடுக்கப்பட்ட பட்டாளிகள் பராக்கிரமம் மிக்கவர்களாக இருக்க மாட்டார்கள். வாழ்க்கையோடு போராடிக் கொண்டிக்கிற சாமானியர்களாக இருப்பார்கள். பூவிற்பவர், பால்காரர், ரிக்ஷா தொழிலாளி, சாக்கடை அள்ளுபவர், குடை ரிப்பேர்காரர், மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் பெண் போன்ற பாத்திரங்களின் வாழ்க்கையைக் கொண்டு வந்து கண்முன் நிறுத்துவதாக விந்தனின் படைப்புகள் இருக்கின்றன. ஒடுக்குவோர் அல்லது சுரண்டுவோர் என்று படைக்கப்படும் பாத்திரங்களின் பெயர்களில் சாதி ஓட்டு இருக்கிறது. ஆனால் ஒடுக்கப்படுவோர், சுரண்டப்படுவோர் என்று படைக்கப்படும் பாத்திரங்களில் சாதி ஓட்டு இல்லை. அதிலும் இருளப்பன், சின்ன சாமி, பெரியசாமி, அம்சா, முரு காயி என்று அந்தப் பெயர்கள் இருக்கின்றன.பெயர்களைக் கூட இப்படித்தெளிவாகப் பிரித்துப் பார்ப்பதில் ஓர் அரசியல் இருப்ப தாகவே நினைக்கிறேன். சுரண்டப் படுகின்ற பாட்டாளி மக்களுக்கு சாதி இல்லை. அவர்களுக்கான ஒரே அடையாளம் தொழிலாளி என்பதுதான் என்று விந்தன் பதிவு செய்வதாகக் கருதுகிறேன்.

மவராசர்கள் என்றொரு கதை, அதிலே பஞ்சகாலத் தொப்பையோடு பீதாம்பரம் முதலியார் என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. அவர் ரயில் பெட்டியில் ஏறுகிறார். அவரது உருவப் படாடோபம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி உட்கார இடம் கொடுக்கிறார்கள். அதே பெட்டியில் தாடியோடும் ஒட்டின மூஞ்சியோடும் கருத்த உடலோடும் ஒரு ஏழை ஏறு கிறான்- கையில் குழந்தை வேறு. அங்கே இருப்பவர்கள் அவனைப் பார்த்து அருவருப்படைகிறார்கள். ஒதுங்கி இடம் கொடுக்க மறுக்கிறார்கள். டிக்கெட் வாங்காமல் ஏறியிருப்பான் என்று கேலியும் பேசுகிறார்கள். டிக்கெட் பரிசோதகர் வருகிறார். அப்போது நாங்கல்லாம் சின்ன மனுசங்கய்யா எங்களுக்குத் தில்லுமுல்லு செய்ய தெரியாதய்யா என்று சொல்லி விட்டு டிக்கெட்டை எடுத்துக்காட்டுகிறான் என்பதாகக் கதை முடிகிறது.

பெண் பாத்திரங்களும் தெளிவாக இருக்கின்றன. ஒரு கதையில் கணவர் மனைவியிடம் காபி கேட்பார். இவர் பால் இல்லை என்பார். கதைகளிலே வரும் மனைவி கேட்கும் போதெல்லாம் காபி கொடுக்கிறாள் என்பார் கணவர். மனைவியா காபி போடுகிறாள். எழுத்தாளர் தானே போடுகிறார். அவருக்கென்ன. ஒரு மேசையும் பேப்பரும் பேனாவும் இருந்தால் போதும். எத்தனைக் காபி வேண்டுமானாலும் போட்டு விடலாம் என்று மனைவி பதில் சொல்வாள். வாழ்க்கையை எதார்த்தமாக நையாண்டியோடு ஒரு பெண் சொல்வது நுட்பமானது.இன்னொரு கதையில் ஏழைப் பெண்ணின் தந்தை தனது பண்ணையார் வீட்டுத் தென்னை ஓலைகளை மகள் மூலம் கொடுத்தனுப்புவார். அவற்றைக் கீற்றாக முடைந்து விற்று மகளுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்பது அவர்திட்டம். ஒரு நாள் பண்ணையார் மகன் இதைப் பார்த்து பிடித்து விடுவான். ‘எத்தனநாளா இது நடக்குது’ என்று அவன் கேட்பான். உங்கப்பா ஒரு ஆள கூட்டிக் கிட்டு ஓடச் சொல்லுன்னு என்னைப்பத்தி சொன்ன நாளிலிருந்து நடக்குது என்று பதில் சொல்வாள். இப்படி அச்சமில்லாத பெண் பாத்திரங்களை விந்தன் படைப்புகளில் காண்கிறோம். பாட்டாளிகளை, எளிய மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திப்பிடித்துள்ள விந்தனின் கருத்துக்களை பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும்.

(மதுராந்தகத்தில் அக்.1 அன்று நடைபெற்ற விந்தன் நூற்றாண்டு விழாவில் தமுஎகச துணைச் செயலாளர் சுந்தரவள்ளி பேசியதிலிருந்து)

நன்றி: தீக்கதிர்