முதலமைச்சர் உடல்நிலை குறித்து தவறாக வதந்தி பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், முகநூலில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், ராஜ்கமல் என்பவர் அளித்த புகாரின் பேரில், முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் பணியாளர் பேசுவது போல் பேசி அதனை வளைதளத்தில் வெளியிட்ட, மதுரையைச் சேர்ந்த மாடசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்ற வதந்திகளை முகநூல், டிவிட்டர், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்த குற்றத்திற்காக 43 வழக்குகளை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்காகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களையும், வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், அதனை பிறருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.