ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமின்மையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்றன. அவரது நிலை குறித்து விதவிதமான கருத்துகள் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. எல்லோரும் இந்த விஷயத்தில் அதீத மாண்பு காக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தொடங்கி எதிரிக்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் உட்பட. அப்பல்லோ மருத்துவமனை ஒரு கோட்டையைப் போல பராமரிக்கப்படுகிறது.

இதுவரை அவரது உடல்நிலை குறித்து வெளிவந்திருக்கும் எல்லாத் தகவல்களுமே உண்மைக்கும் பொய்க்குமான விளிம்பில் நிற்கின்றன. அந்த செய்திகளைச் சுற்றி உளுத்துப்போன செண்டிமெண்ட் காரணங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டின் மொத்த அதிகார அமைப்பும் இந்த கட்டமைக்கப்பட்ட வலுவான கோட்டையின் செங்கல்லாக மாறி நிற்கும் ஆச்சர்யம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மோடி முதல் கவர்னர் வரை. போலீஸ் முதல் அதிகாரிகள் வரை.

முதல்வரின் உடல் நலம் குறித்து அந்த மருத்துவமனையின் அறிக்கை மட்டுமே மக்களின் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்புபவர்களிடம், அவரது உடல் நலன் குறித்து தெரிந்து கொள்ள விழைவது ‘ஜெயலலிதாவின் தனிமனித உரிமையை மீறுவதாகாதா…?’ என்று கேட்கிறார்கள். ஆகாது என்பதே எனது புரிதல். ஏன்? ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த யூகங்கள் ஊடகவெளிக்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன. அப்போதெல்லாம் யாரும் அது குறித்து கேள்வியெழுப்பி அவரது அந்தரங்கத்தில் குறுக்கிடவில்லை. அவ்வாறு எப்போதாவது எழுப்பப்படும் கேள்விகளை நிராகரிக்கும் உரிமை ஜெயலலிதாவுக்கு இருந்தது. அந்த உரிமையை முழுக்கவும் ஜெயலலிதா பயன்படுத்திதான் வந்தார். இப்போது தனது தனிமனித உரிமையை பயன்படுத்திக்கொள்ளும் தன்மையில் அவர் இருக்கிறாரா என்பது தான் இங்கு கேள்வியே.

இதற்கு யார் பதில் சொல்வது? அதை உறுதி செய்யக்கோரிதான் சாமான்ய மக்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கம்போல இந்த விஷயத்திலும் சில லும்பன்கள் தங்களது கோர முகத்தை காட்டுகிறார்கள்தான். ஆனால் அதை முன்னிட்டு, ஜெயலலிதாவின் மீது உள்ளார்ந்த அன்புடன் இருக்கும் ஒரு பகுதி மக்களை அவமதிக்கும் செயலை அனுமதிக்க முடியாது அல்லவா? அப்பல்லோ வெளியிடும் அறிக்கை என்பது கிட்டத்தட்ட ஜெயா டிவியின் செய்தியறிக்கை மாதிரியே இருக்கிறது. அங்கு புரட்சித்தலைவி என்றால் இங்கு ஹானரபில். தொனியில் மாத்திரம் அல்ல; உள்ளடக்கத்திலும் நிறைய முரண்களைக் கொண்டிருக்கிறது அது.

அவரது சுகவீனம் ஒரு பகுதி மக்களை அசைத்திருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதே சமயம் பொதுவெளியில் இது குறித்து அஞ்சி அஞ்சியே பலர் பேசுவதைப் பார்க்க முடிகிறது. இந்த மவுனத்தின் பின்னால் இருப்பது நாகரீகத்தை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம் மாத்திரம் அல்ல. நிலவும் சூழலின் மீதான அச்சம். இந்த அச்சம் ஒரு அடர்த்தியான நிழலைப்போல நம் மீது படர்ந்திருக்கிறது. அது வெறும் செய்தியின் நிழலா? இல்லை. அது அதிகாரத்தின் நிழல். அது இரண்டு வகையில் செயல்படுகிறது. ஒன்று அவரது உடல்நிலையைக் குறித்து நம்பகமற்ற தகவல்களை உலவ விடுகிறது. இரண்டாவது இது குறித்து பேசும் எல்லாரையும் வதந்தியைப் பரப்புபவர்களாக வரையறுக்கிறது. அதன் மூலம் தனது திசை திருப்பும் நடவடிக்கைகளால் பெரும்பகுதி மக்களை மற்றவர்களாகவும் குற்றவாளிகளாகவும் உருவகிக்கச் செய்கிறது.

ஆக இது மக்களின் மீது ஏவப்பட்டிருக்கும் ஒரு கருத்து முற்றுகை. இந்த முற்றுகையில் இருந்து வெளியேறுவதும் வெளியேறத் தூண்டுவதும்தான் கருத்து நேர்மை கொண்டவர்கள் செய்ய வேண்டிய செயல். ஆனால் நமது சூழலில் பெரும்பாலான அறிவுஜீவிகள் தொடங்கி மாற்று கட்சியினர் வரை தரகர்களின் மனநிலையுடனே கருத்துகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தனிமனித நாகரிகம் என்ற பெயரில் பசப்புகிறார்கள்.

ஒருபுறம் எளிய மக்கள் தங்களது குழந்தைகளின் வாயில் அலகு குத்தி பால்குடம் எடுத்து சாமியிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். அது எதன் பொருட்டு? தான் ஸ்னேகிக்கிற ஒரு தலைவியின் உடல் நலன் பொருட்டு. இவ்வாறு வேண்டுதலில் ஈடுபடும் அனைவரையுமே காசுக்காகதான் அதைச் செய்கிறார்கள் என்று அவமதிப்பது என்பது நமது மேட்டிமை மனநிலையின் தவறு. ஆனால் அந்த எளிய மக்களுக்கு இத்தகைய விவகாரங்களில் என்ன பங்கு இருக்கிறது என்று நான் யோசிக்கிறேன். அவர்கள் மீது சுமத்தப்படும் அரசியலில் எப்படி அவர்களது பங்கு இல்லையோ அதே போல இதைப்போன்ற அற்பத்தனங்களிலும் இல்லைதான். ஆனால் அவர்கள் ஒரு கருவியாக இங்கு பயன்படுகிறார்கள். எம்ஜியாரால் வலுவாக உருவாக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கருத்து நிலை அது. அது இங்கு முக்கியமா என்றால் ஆம்; முக்கியம் தான்.

நான் ஒரு விவாதத்துக்காக இதைச் சொல்கிறேன். இப்படி ஒரு நிலையில் ஸ்டாலினால் கருணாநிதியை இரண்டு நாட்களுக்குக் கூட தொண்டர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க முடியாது. ஏன்? கதவை உடைத்துக்கொண்டு ஒரு தொண்டனாவது மருத்துவமனையின் உள்ளே போவானா மாட்டானா? அப்படி ஒரு கொந்தளிப்பு சொந்த கட்சிக்குள்ளேயே நடக்காமல் இந்த விவகாரம் அதிமுகவில் எவ்வளவு லாவகமாக கையாளப்படுகிறது என்பதை யோசித்தால் உருவாக்கி உலவ விடப்படும் படைப்பூக்கமுள்ள வதந்திகளின் பங்கு என்ன என்று புரியும். திருமா போன்றவர்களின் விசிட்டுக்கு இந்த கருத்துருவாக்கத்தில் என்ன பங்கு என்று ஒரு மாற்று பார்வையைக் கூட அது வழங்கக்கூடும்.

இறுதியாக இதில் சொல்வதற்கு ஒன்றிருக்கிறது. நடக்கும் இந்த அபத்த நாடகத்தில் அதிகாரம் ஒரு தரப்பாகவும் வெகு மக்கள் திரள் மற்றொரு தரப்பாகவும் இருக்கிறது. அதனால் அவரது உடல் நலன் குறித்து தெரிந்து கொள்ளும் தங்களது ஆர்வத்திற்காக யாரும் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. உண்மையாக நிலவரத்தை மறைத்து பொய்களைப் பரப்புபவர்களை விட அது ஒன்றும் அத்தனை அருவறுப்பானதில்லை. முன்னதில் ஒரு வெறுக்கத்தக்க கிளுகிளுப்பு மனநிலை கூட இருக்கலாம். ஆனால் பின்னதில் மிகவும் கீழான சுயநல நோக்கங்கள் ஒளிந்திருக்கின்றன.

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர்.  வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்), சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.