தமிழகத்தில் அதிமுக அரசில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தமிழக அரசை நிலைகுலையச் செய்யவும் நரேந்திர மோடி அரசு முயற்சித்து வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையானது தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் முழுமையாக நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தோம். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழக முதல்வர் நலமாக இருந்தபோது அவரது வீடு தேடிச் சென்று விருந்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போது முதல்வரைப் பார்த்து நலம் விசாரிக்காதது வியப்பளிக்கிறது.

இது பிரதமருடைய தனிப்பட்ட விருப்பம் என எடுத்துக்கொண்டாலும், அவரது கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும்” என அறிக்கை வெளியிட்டபிறகும் அதனைப் பிரதமர் கண்டிக்காதது மத்திய அரசின்மீது சந்தேகதத்தை எழுப்புகிறது.

முதல்வரின் உடல் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கர்நாடகத்துக்கு ஆதரவாகக் காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறிப்பதற்கும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நிலைகுலையச் செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

குறிப்பாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரைக் காண்பதற்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் மருத்துவர்கள் எப்படி வந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான வேண்டுகோளின்றி, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. அத்தகைய வேண்டுகோள் ஏதுமின்றி, எய்ம்ஸ் மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவே தெரிகிறது.

மத்திய அரசின் உள்நோக்கம் கொண்ட இத்தகைய முயற்சியை முழுமூச்சுடன் எதிர்ப்பதோடு ஜனநாயகத்தைக் காக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
முதல்வர் நலம்பெற்று மீண்டும் அரசு அலுவல்களை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அப்படி அவர் நலமடைந்து திரும்பும்வரை தமிழக அரசின் நிர்வாகத்தை தேக்கமின்றி நடத்திச்செல்ல ‘வெளிப்படையானதொரு இடைக்கால ஏற்பாடு’ செய்யப்படவேண்டியது அவசியமாகும்.

அப்படிச் செய்யாததால்தான் பாஜக அரசு தமிழகத்தில் குழப்பம் விளைவிக்க முற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கும், மத்திய அரசின் சதிச்செயல்களை முறியடிப்பதற்கும் இடைக்கால ஏற்பாடு செய்வதே சரியான வழியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, முதல்வரின் உடல்நலம் குறித்து அவர் சிகிச்சை பெறும் தளத்திற்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.