விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த துருவை கிராமத்தில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தொழிலாளர்கள் 7 பேரும் விரைவாக குணமடைய  விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்து நடந்த துருவை பட்டாசு ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும், அங்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிக சக்தி கொண்ட வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாததால் தான் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று நடந்த விபத்தில் 5 டன் எடை கொண்ட வெடிமருந்து வெடித்து சிதறியதாகவும், அதனால் தான் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த இரு கட்டிடங்கள் அடியோடு தகர்க்கப்பட்டு, தரைமட்டமானதாகவும் கூறப்படுகிறது. போதிய உரிமம் இல்லாமல் பெருமளவில் வெடி மருந்துகளை பதுக்கி வைத்து வெடிமருந்து தயாரித்து வந்த இந்த ஆலையை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை; போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்யவில்லை. அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகத் தான் இவ்வளவு பயங்கர விபத்து நடந்திருக்கிறது. இந்த கொடிய விபத்துக்கும், 5 தொழிலாளரின் உயிரிழப்புக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் புற்றீசல்கள் போல பட்டாசு ஆலைகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றை முறைப்படுத்தவோ, பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்யவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தால் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 30&ஆம் தேதி விழுப்புரத்தையடுத்த பொய்யம்பாக்கத்தில் நடந்த பயங்கர வெடி விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழ்ந்தனர். அதற்குப் பிறகும் இத்தகைய விபத்துக்கள் நடக்கின்றன என்றால் அதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியம் தான் என்பதில் ஐயமில்லை. இனியும் இத்தகைய வெடி விபத்துக்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த 5 பேரின் அடையாளங்கள் இதுவரை தெரியாத நிலையில், அவர்களின் அடையாளத்தை கண்டறிந்து குடும்பத்தினரிடம் உடல்களை ஒப்படைக்க வேண்டும். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், காயமடைந்த 7 பேருக்கும் தலா 10 லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.