துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்து பூஜித்த அர்ஜுன் சம்பத்தைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திங்கள்கிழமை (10.10.2016) ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது வீட்டில் பல பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபடும் படத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் பயங்கர ஆயுதங்களாக உள்ளன.

தமிழகத்தில் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கவே இதுபோன்ற ஆயுதங்களின் படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும் தமிழகத்தில் நிலவும் சமூக அமைதியை சீர்குலைக்கவும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. ராணுவத்திற்குப் பயன்படும் இதுபோன்ற பயங்கர ஆயுதங்கள் அர்ஜுன் சம்பத்திற்கு எங்கிருந்து கிடைத்தது என காவல்துறை விசாரிக்க வேண்டும்.

பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபட்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க அதனை முகநூலில் வெளியிட்ட அர்ஜுன் சம்பத்தைக் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வைத்திருக்கும் அனைத்து ஆயுதங் களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அவர்களுக்கும், தமிழகக் காவல்துறை இயக்குநர் (டி.ஐ.ஜி.) அவர்களுக்கும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.