சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ரெமோ’ படம் குறித்து பத்திரிகையாளர் கே. என். சிவராமன் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு இது. ரெமோவை மலம் என கே. என். சிவராமன் சொல்வதற்கான காரணத்தை பட்டியலிட்டிருக்கிறார்.

 1. காதலிக்க மறுத்த இன்ஜினியரிங் மாணவியை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் இதுபோல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்யும் பொறுக்கிகள் அதிகரித்து விட்டனர். ஒருதலைக் காதல் விவகாரத்தில் சுவாதி உட்பட 5 பெண்கள் கடந்த சில மாதங்களில் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 2. இந்த சூழலில் குழந்தைகளை ரசிகர்களாக கொண்ட ஒரு நடிகர், அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை Entertainment என்று கருத / ஏற்க இயலாது.

 3. ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’ (DDLJ) தெளிவான திரைக்கதை கொண்டது. மட்டுமல்ல இந்திய அளவில் வேறொருவருக்கு நிச்சயமான ஒரு பெண் இன்னொருவரை காதலிக்கும் டிரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட காவியமும் கூட. இந்தப் படத்தில் கஜோலுக்கு என்று ஒரு கனவு இருக்கும். தனக்கு வரவிருக்கும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவுடன் இருப்பார். அதற்கு ஏற்ப ஷாருக் கானை கண்டதும் காதல் வசப்படுவார்.

 4. ‘ரெமோ’வில் இந்த மாதிரி எதுவும் இருக்காது. சாலையில் கீர்த்தி சுரேஷ் செல்வதை சிவகார்த்திகேயன் பார்ப்பார். கண்டதும் காதல் கொள்வார். அவருக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் நிச்சயமானதும் விலகுவார். பஸ்ஸில் தனக்கு நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கீர்த்தி சுரேஷ் சொன்னதும் மீண்டும் காதலிப்பார். அடையத் துடிப்பார். திட்டமிடுவார். அமீபா அளவுக்கு கூட ‘ரெமோ’வில் கதாநாயகியின் கனவு / கணவர் குறித்த எதிர்பார்ப்பு பதிவாகவில்லை.ஆணுக்கு பிடித்திருக்கிறது. காதலிக்கிறான். தன்னை காதலிக்கும்படி அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்கிறான். இதுவா Entertainment? இதையா கொண்டாட வேண்டும்?

 5. நர்ஸாக கீர்த்தி சுரேஷிடம் பேசும்போது மழுமழு கன்னத்துடன் காட்சித் தரும் சிவகார்த்திகேயன் – அடுத்த காட்சியிலேயே இரண்டு, மூன்று நாட்கள் தாடி மீசையுடன் எஸ்.கே., ஆக அதே கீர்த்தியை சந்தித்து பேசுகிறார். இந்த தவறை எல்லாம் சுட்டிக் காட்டக் கூடாதாம். காரணம் ‘ரெமோ’ Entertainmentடாம்.

 6. ‘Tootsie’ படத்தின் காட்சிகளை அப்படியே சுட்டிருக்கிறார்கள். வேறு யாராவது இப்படி செய்தால் கற்பனை வறட்சி அது இது கம்பை சுற்றும் சுரேஷ் கண்ணன் போன்றவர்கள், இதை ‘ஜாலி’யாக எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை.

 7. அட, ‘Tootsie’ஐ விடுங்கள். ‘அவ்வை சண்முகி’ காட்சிகளை / கேரக்டர் ஸ்கெட்சை அப்படியே உல்டா செய்திருக்கிறார்கள். உதாரணம்: மணிவண்ணன் Vs யோகி பாபு. இவை எல்லாம் கற்பனை வறட்சியில் வராதா? சரி சுட்டதையாவது சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. 99% இழுவையான காட்சி அமைப்புகள். என்னவோ போடா மாதவா…

 8. ‘றெக்க’ படத்தை எல்லாம் ஏற்பவர்கள் / பாராட்டுபவர்கள்… என்ற வாக்கியத்தையும் முன் வைத்திருக்கிறார்கள். ‘ரெமோ’ போன்ற சமூகத்துக்கு எதிரான / பெண்களை அவமதிக்கும் / இன்னொரு படத்தை ஈயடிச்சான் காப்பி அடிக்கும் கதைப்போக்கு ‘றெக்க’ படத்தில் இல்லை. தவிர ‘றெக்க’ தொடர்பாக எழுதப்பட்ட நிலைத்தகவலிலேயே அது Well Planned B & C material என்று குறிப்பிட்டிருக்கிறோம்.கடந்த ஞாயிறு / திங்களில் ‘றெக்க’ இயக்குநரை சந்தித்து விஜய் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் என்பது இந்த உரையாடலுக்கு தொடர்பில்லாதது 🙂

 9. ‘கிடாரி’யை பாராட்டியதையும் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். 1991 முதல் தென் மாவட்டங்களில் / குறிப்பாக விருது நகரில் நடந்த சாதி கலவரங்கள் குறித்து அறிந்திருந்தால் இந்த வினா எழுந்திருக்காது.

 10. ‘தொடரி’யும் வினாவாவில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. ‘கயல்’ என்ற தோல்விக்கு பிறகும் பிரபு சாலமன் தன் பாணியை கைவிடவில்லை. சாதாரண மனிதர்களையே கதை மாந்தர்களாக உலவ விட்டிருக்கிறார். இது முதல் விஷயம். ‘தொடரி’ திரைக்கதை அலைபாய்கிறது. கதை டேக் ஆஃப் ஆகவே 50 நிமிடங்கள் ஆகிறது. ஏராளமான லாஜிக் பிழைகள். இந்த குறைகளை எல்லாம் நிலைத்தகவலில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். என்றாலும் அது நல்ல முயற்சி. முழு திரைப்படமும் இதற்கு முன் சிஜியில் எடுக்கப்படவில்லை. இப்படம் அந்த டிரெண்டை ஆரம்பித்து வைத்திருக்கிறது. தவிர, மற்ற நடிகர்கள் ஸ்கோர் செய்யவும் படத்தின் ஹீரோவான தனுஷ் அனுமதித்திருக்கிறார். காட்சிக்குக் காட்சி, தானே தோன்ற வேண்டும் என்று ‘அடம்’ பிடிக்கவில்லை. குறிப்பாக சமூகத்துக்கு தீமையான / பெண்களை அவமதிக்கும் போக்கை கதையாடலாக கொண்டிருக்கவில்லை.

 11. இறுதியாக -புதியவர்கள் என்றால் குறைகளுக்கு பதில் நிறைகளை சுட்டிக் காட்டுவதும் –
  வளர்ந்தவர்கள் என்றால் நிறைகளுக்கு பதில் குறைகளை சுட்டிக் காட்டுவதும் –
  முக்கியம் என்று நினைக்கிறேன்.

 12. குறிப்பாக குழந்தைகளை ரசிகர்களாக பெற்றிருப்பவர்கள் சமூகத்துக்கு எதிரான கருத்தியல்களை விதைக்கும்போது இறங்கி அடிக்க வேண்டும் என்பதும் பாலிசி. சந்தேகமே இல்லாமல் ‘ரெமோ’ Entertainer அல்ல. மலம்தான்.