மற்ற மதத்தினரிடமிருந்து இந்துக்களை காப்பாற்ற இலங்கையில் ‘சிவ சேனை’ உருவாக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் வவுனியாவில் ‘சிவ சேனை’ துவக்க விழா அண்மையில் நிகழ்ந்ததாக தி இந்து (ஆ) நாளிதழ் தெரிவிக்கிறது. இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் மறவன் புலவு சச்சிதானந்தன், தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் இருக்கும் ‘சிவ சேனா’ அமைப்புடன் இந்த அமைப்புக்கு தொடர்பில்லை எனினும் அவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோம். சிவா சேனா, ஆர். எஸ். எஸ்., விஎச்பி, கோவையைச் சேர்ந்த இந்து ஜன ஜக்ருதி*  போன்ற அமைப்புகளுடன் விவாதித்துதான் இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம்.

இங்குள்ள இந்துக்கள் பெரும்பாலும் சைவர்கள் என்பதால் ‘சிவ சேனை’ பொறுத்தமாக இருக்கும் என பெயர் வைத்தோம். இந்தத் தீவில் வாழும் இந்துக்கள் பல்வேறு மதங்களால் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். சிங்கள-பௌத்த மத காலனியாக்கமும் மதமாற்றமும் எங்களை அச்சுறுத்துகிறது. இரான், இராக்கிலிருந்து நிதி உதவியுடன் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்வதும் மேற்கத்திய மிஷனரிகள் மூலம் கிறித்துவ மதமாற்றமும் நடந்துவரும் நிலையில் இந்துக்களுக்கு யாதொரு வழியும் இல்லை.

ஆர். எஸ். எஸ்.. விஎச்.பி, பாஜக போன்ற அமைப்புகள் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.மதமாற்ற தடை சட்டம் குறித்து இலங்கையில் இந்த அமைப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும்” என்கிறார்.

இந்த அமைப்பில் மறவன் புலவு சச்சிதானந்தனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன், திரிகோணமலை தென் கயிலாய ஆதினம் ஆகியோர் இணைந்த இந்துக்கள் வாழும் 25 மாவட்டங்களில் இந்த அமைப்பை வலுப்படுத்த உள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புகள்:

* நரேந்திர தபோல்கர்,கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் கொலையில் தொடர்புடைய அமைப்பு இது.

முகப்புப் படத்தில்: புலவர் மறவன்புலவு சச்சிதானந்தனுடன் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார்.