ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

தமிழகத்தின் தற்போதைய சூழலை சாதகமாக்கிக்கொண்டு பிஜேபி அரசாங்கம் பின்வாசல் வழியாக தமிழகத்தில் நுழைய முயல்கிறது என்று சிலர் அச்சத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். வைகோ சென்று கவர்னரைப் பார்த்தது, வெங்கைய நாயுடு சென்று கவர்னரைப் பார்த்தது, மேலும் கேரள கவர்னர் வேறு தமிழக கவர்னரை சந்தித்தது என்று இந்த வதந்தியின் பெறுமதியை கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல் தளத்திலிருது கூட இத்தகைய அச்சம் சில தலைவர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இதன் உச்சமாக, இந்த இக்கட்டான நேரத்தில் நாம் ஒன்றிணைந்து அதிமுகவைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் கூட கண்ணில் படுகிறது. இது ஒரு முக்கியமான கோரிக்கை. புறத்தோற்றத்துக்கு இதன் மேல் உணர்ச்சிகரமான ஒரு பூச்சு இருக்கிறது. இது எப்போதும் அரசியலில் நிகழ்வதுதான். ஆனால் இதன் உள்ளே சென்று பார்த்தால் மக்களின் உணர்வை சுரண்ட முயலும் தந்திரம் இருப்பதாகப்படுகிறது.

முதலாவதாக, நடக்கும் இந்த எபிசோடில், ஜெயலலலிதா எப்படி இருக்கிறார் என்ற உறுதியான தகவலே இதுவரை வெளிவரவில்லை. அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்களின் குரலே இந்த விஷயத்தில் இல்லை. இதன் பொருள் அந்த கட்சியில் வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லை என்பது அல்ல. உண்டு. ஆனால், தாங்கள் இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருந்துகொண்டே எல்லா சுகத்தையும் அனுபவித்தவர்கள் அவர்கள். கொஞ்சம் சுயமரியாதையை கைவிட்டு காலில் விழுந்து எழுந்துவிட்டால், கட்டற்ற சுதந்திரமும் தலைமுறைகள் தாண்டி சம்பாதிக்கிற வாய்ப்பையும் உருவாக்கித் தருகிற வன்தலைமையைக் கொண்டிருக்கிற கட்சி அது. திட்டமிட்ட அளவில், சரியான பங்கை நேர்மையுடன் கொடுத்துவிடுகிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் ‘சிறப்பு இரண்டாம் நிலைத்தலைவர்களாக’ நீடிக்கும் உரிமையையும் பெறுவார்கள். இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தான். பேசிப் பேசியே மக்களிடம் சகஜமாகிப் போன ஒரு சங்கதி தான் இதெல்லாம்.

ஜெயலலிதா உடல் நலமில்லாமல் இருக்கிற இந்த சூழலில், பொறுப்பு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக கோரிக்கை விடுக்கும் நேரத்தில், வைகோ போன்றவர்கள்தான் அது தேவையில்லாத கோரிக்கை என்று பேசுகிறார்களே தவிர, சொந்த கட்சியின் இந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் இதற்கு ஏதாவது பேசியிருக்கிறார்களா? அல்லது தான் சார்ந்த கட்சியின் அபிமானிகளுக்கு, தொண்டர்களுக்காவது, தங்களது கட்சித்தலைவியின் நிலை என்ன என்று சொல்ல வேண்டிய கடமையில் அவர்கள் இருக்கிறார்களா… போன்ற கேள்விகளெல்லாம் மிக முக்கியமானவை.

ஆக அதிமுக என்கிற கட்சியும், அதில் உள்ள இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களும் ‘ஜெயலலிதா’ என்கிற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு எதற்கும் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள். அதைத் தாண்டி அவர்களுக்கு எந்த தார்மீகமும் கிடையாது. அப்படி ஒரு வார்ப்பில் அவர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு இரண்டாம் நிலைத் தலைவர்களை, உருவாக்கி நிலை நிறுத்திய ஜெயலலிதாவின் அரசியல் போக்கு குறித்து குறைந்த பட்ச விமர்சனமாவது வேண்டுமா இல்லையா? தன்னியல்பாக மக்களிடம் அவ்வாறு உருவாகி வரக்கூடிய விமர்சனத்தைத்தான், இந்த ‘காவி பூச்சாண்டி’ காலி செய்கிறது. ஜெயலலிதாவை புனித பிம்பமாக்கி நம்முன் நிறுத்துகிறது. அவரது தற்போதைய உடல்நலனை நம்முன் கொண்டுவந்து நிறுத்துவதன் மூலம் எழ வேண்டிய அரசியல் குரலை, உரையாடலை நீர்த்துப்போக செய்கிறது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக பேச வேண்டிய, செயல்பட வேண்டிய திமுக தனது இயல்பை மீறி கண்ணியம் காப்பதுபோல நடிக்கிறது. அவர்கள் யாரிடம் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை. திமுகவின் இந்த அரசியல் நகர்வு, உப விளைவாக ஒரு அரசியல் மொன்னைத்தனத்தை இங்கு உருவாக்குகிறது. அதிமுகவினரைப் போலவே எல்லாரும் சிந்திக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். நான் மீண்டும் சொல்கிறேன் ‘இது தான் கருத்து வன்முறை’. ஜெயலலிதாவின் மீதான கரிசனத்தையோ அன்பையோ, நமது அரசியல் உரிமைகளின் மீது போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. அதில் நாம் மிகத் தெளிவாக இருப்பதற்கு தயங்க வேண்டியதில்லை.

இப்போது தேவை ஒரு செயல்படும் முதல்வர். மிக வெளிப்படையாக அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த உரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் யூகமாக, வதந்தியாக மென்று மென்று பேசும் நிலையிலிருந்து மக்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆக வேண்டும். ஜெயலலிதா என்ற ஒற்றைப் பாத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முட்டுச்சந்தில் முடங்க வேண்டியதில்லை. இதை வெளிப்படையாக பேச பத்திரிகைகள், ஊடகங்கள் ஏன் தயங்குகின்றன என்று புரியவில்லை.

திமுக எதன் பொருட்டு இவ்வளவு பாசாங்காக காய் நகர்த்துகிறது? வெகு மக்கள் உளவியல் ஒரு ‘சிறைபட்ட’ மனநிலையில் இருப்பதாகவும் இந்த நேரத்தில் எழுப்பப்படும் அரசியல் கோரிக்கைகள் மக்களிடம் தங்கள் மீதான எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் எனவும் நினைத்து அது அஞ்சுகிறதா? ஆமெனில் அதை உடைத்தெறிய வேண்டியது பிரதான எதிர்க்கட்சியாக அதன் பொறுப்பில்லையா? கண்ணியம் என்ற வார்த்தைக்குப் பின்னால், தனிப்பட்ட கணக்குகளோடு ஒளிந்து கொள்ளும் அதன் இந்த போக்குதான் வைகோ போன்ற செல்லரித்துப் போன குரல்கள் வெளிச்சத்தில் புழங்குவதை ஊக்கப்படுத்துகிறது.

ஜெயலலிதாவின் இப்போதையை நிலையை முன்னிட்டு, அவரால் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்ட மக்கள் விரோத கருத்தமைப்பின் முன் நாம் மண்டியிட வேண்டியதில்லை. இங்கு நடந்து கொண்டிருப்பது மக்களை அவமதிக்கும் செயல். கூட்டுச் சீரழிவின் பின்னல். இதற்கு எந்த அகராதியிலும் அரசியல் விழிப்புணர்வு என்று பொருளில்லை. கிசுகிசுக்கப்படும் இந்த காவி பூச்சாண்டியை முவைத்து நாம் வேறொரு சீரழிவை சகித்துக்கொள்ள வேண்டியதில்லை. அரசியல் உரிமை என்பது யாரோ ஒருவரின் மீதான கனிவில் இருந்து முளைப்பதல்ல. மானுட அன்பின் தேவையிலிருந்து கிளைப்பது அது!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர்.  வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்), சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.