காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து தொடர் ரயில் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று துவங்குகிறது. திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்கள் ரயில்மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் நலக்கூட்டணி, திமுக, காங்கிரஸ், தமாகா உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக, அதிமுக தவிர இந்தப் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள் விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திங்களன்று சென்னையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்கிறார். இதேபோன்று கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் நாகப் பட்டினம், மயிலாடுதுறையிலும், பெ. சண்முகம் தஞ்சாவூர், நீடாமங்கலத்திலும், ஏ.லாசர் லால்குடி, திருமங்கலத்திலும், கே.தங்கவேல் ஈரோட்டிலும், எம்என்எஸ் வெங்கட்டராமன் விருதுநகரிலும், மதுக்கூர் இராமலிங்கம் மதுரையிலும் ரயில்மறியல் போராட்டங்களில் பங்கேற் கின்றனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆர். நல்லக்கண்ணு, இரா.முத்தரசன், தா.பாண்டியன் ஆகிய தலைவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இரண்டு நாள் ரயில் மறியல் போராட்டத்தின் போது விவசாயிகள், தண்டவாளத்தில் குடியேறுவார்கள். போக்குவரத்தை முற்றாகமுடக்குவார்கள் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

தீக்கதிர் செய்தி