அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கு அண்ணா நூலகத்தை ஆளும் அதிமுக அரசு புறக்கணிப்பதாக திமுக தலைவர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை இங்கே:

கேள்வி :- சென்னை மாநகரில் தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் பலியானது பற்றி?

கருணாநிதி:- மிகப் பெரிய கொடுமை அது.   தங்கள் குழந்தைகளை இழந்து வாடும் மாணவிகளின் பெற்றோருக்கும் எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டுவோர் மனிதாபி மானத்தோடும், மிகுந்த எச்சரிக்கையோடும்  செயல்பட வேண்டும்.  அதுபோலவே சில மாணவர்களும் விபத்தில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.  சென்னையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் நான்கு குழந்தைகள் பலியாகியிருக்கின்றன.  இவர்களை இழந்து வாடும், பெற்றோர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் சார்பில் அந்தக் குடும்பத்தாருக்கு நிவாரண உதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

கேள்வி :- தமிழகத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி?

கருணாநிதி:- பா.ஜ.கட்சிக்காக உண்மையில் நீண்ட காலமாக உழைத்து வந்த அருமை நண்பர் இல. கணேசன் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  என்னிடம் தனிப்பட்ட முறையில் என்றும் மாறாத அன்பு கொண்டவர் அவர். அவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பொறுப்பு மகிழ்ந்து பாராட்டப்படக் கூடியது.  அவரை மனதார வாழ்த்துகிறேன்.

கேள்வி :-  காவிரியிலிருந்து  தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க மறுத்து வந்த கர்நாடக அரசின் முதலமைச்சர் சித்தராமய்யா,  தற்போது மேகதாது அணை பற்றியும் கட்டியே தீருவோம் என்று மீண்டும்  கூற ஆரம்பித்து விட்டாரே?

கருணாநிதி:- அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் இப்போதிருந்தே மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளன.  அதிலே ஒரு கட்டம்தான் தற்போதைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள்.  இது பற்றி “ஆனந்த விகடன்” இதழிலே கூட தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.  முதலில் பெங்களூரு நகரின் குடி நீர் தேவைக்காகத்தான் மேகதாது அணை என்றார்கள்.  தற்போது, மேகதாது அணையில் 400 மெகாவாட்  மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் உள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார்.  காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழகத்தைக் கை கழுவிய மத்திய அரசு, மேகதாது அணைப் பிரச்சினையில் மட்டும் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கேள்வி :- உச்ச நீதிமன்றம் ஒரு முடிவினை அறிவித்தால், அதை ஏற்க இயலாதென்று  மத்திய அரசு அறிவிக்க அதிகாரம் உள்ளதா?

கருணாநிதி:- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  அந்தத் தடையை நீக்கச் சொல்லி மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்க வேண்டுமென்று கேட்டபோது,  “உச்ச நீதிமன்றம் சொன்னதை மீற முடியாது” என்று மத்திய அரசின் சார்பில் அப்போது சொன்னார்கள். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அவ்வாறு சொன்ன மத்திய அரசு, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அவ்வாறு செய்ய இயலாதென்று மறுப்புக் கூறுகிறது.  மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் ரீதியாகக் கிடைத்திடும் ஆதாயத்தை  அடிப்படையாகக் கொண்டே, உச்ச நீதிமன்ற உத்தரவைக் கூடத் தலை வணங்கி ஏற்கும் அல்லது தலை நிமிர்ந்து எதிர்க்கும் என்பதற்கு ஜல்லிக்கட்டுப் பிரச்சினையும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையும் எடுத்துக்காட்டுகள்.

கேள்வி :- “கலைமாமணி” விருதுகள் அ.தி.மு.க. அரசினால் இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்பட வில்லையே?

கருணாநிதி:- “கலைமாமணி” விருதுகள் இந்த ஆண்டு மாத்திரமல்ல; கடந்த ஆறு ஆண்டுகளாகவே  அறிவிக்கப்படவில்லை என்றும், முதல்வர்தான் கலைமாமணி விருதுகளை அறிவிக்க வேண்டும்; ஆறு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருக்கிறதென்றால்,  அதற்கு என்ன காரணம் என்று நாங்கள் சொல்ல முடியாது என்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவரான இசை அமைப்பாளர் தேவா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.   தி.மு.கழக ஆட்சியில் கடைசியாக  2010ஆம் ஆண்டு மே மாதம் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதற்கு பிறகு யாருக்கும் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை.  அ.தி.மு.க. ஆட்சியில் யாரும் கலைமாமணி இல்லை என்பதும்  ஒரு சாதனை என்று கூறிக் கொள்ளலாம்.

கேள்வி :- காவிரி உயர்மட்டத் தொழில் நுட்பக் குழு என்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று பொதுப் பணித் துறை பொறியாளர் சங்கத்தின் சார்பில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்களே?

கருணாநிதி:-அவர்கள் அவ்வாறு சொன்னதோடு, கடந்த 1971ஆம் ஆண்டில் கர்நாடகாவின் பாசன பகுதி 6.68 இலட்சம் ஏக்கராக இருந்தது, தற்போது 21.71 இலட்சம் ஏக்கர் நிலமாக அதிகரித்துள்ளது என்றும், 1971-74 காலக் கட்டத்தில் 350 டி.எம்.சி. காவிரி நீரைப் பெற்ற தமிழ்நாடு  தற்போது 192 டி.எம்.சி. தண்ணீரைக் கூட பெற முடியவில்லை என்றும், தமிழகத்தில் 28.8 இலட்சம் ஏக்கராக  இருந்த பாசன நிலம்  24 இலட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்களைக் கூறியிருக்கிறார்கள்.  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றிக்கூட, நர்மதா நதி கட்டுப்பாடு ஆணையம், கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியம் போன்றவற்றை மத்திய அரசுதான் அமைத்தது என்றும், அதைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைத்திருக்கலாம் என்றும் விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.  மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த விவரங்களெல்லாம் தெரியாமல்  இல்லை; தெரிந்தும்  அநீதிக்குத் துணை போகிறார்கள்  என்றால், அரசியல்தானே காரணம்!

கேள்வி :- தமிழகத்தில் தி.மு. கழக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும்  கொண்டுவர பல முயற்சிகள் நடைபெறுகிறதே?

கருணாநிதி:- இதுபற்றி  இரண்டு நாட்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர், இளவல் வீரமணி விரிவாக ஒரு அறிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடைபெற்றது.  நுழைவுத் தேர்வு 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது, அதனை எதிர்த்து தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளும், சிறுபான்மை அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், விக்கிர மஜீத் சென் ஆகியோர் நுழைவுத் தேர்வு கொண்டுவருவது, கல்வி நிறுவனங்களின் உரிமை களில் தலையிடுவதாகும். எனவே இந்திய மருத்துவக் கவுன்சில்  இத்தகைய தேர்வினை நடத்தும் உரிமை உடையதல்ல என்றும், நீதிபதி அனில் ஆர். தவே நுழைவுத் தேர்வினை ஆதரித்தும் தீர்ப்பு வழங்கினர்.  பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் மறு சீராய்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர்.  அனில் ஆர். தவே தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு இந்த முறை நுழைவுத் தேர்வுக்கு அனுமதி வழங்கிவிட்டது.

தமிழக அரசு நுழைவுத் தேர்வுக்கு எதிராக இருந்த தால், இந்த ஆண்டுக்கு மட்டும் நுழைவுத் தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டது. 2017இல் நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டையும் கட்டுப்படுத்தக்கூடியது.  இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பொதுப் போட்டியிலேயே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சிறப்பாகத்  தேர்வு பெற்றுள்ளனர்.  பொதுப் போட்டிக்கான மொத்த இடங்கள் 884இல், பிற்படுத்தப்பட்டோர் 599 பேர்;  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159 பேர்; தாழ்த்தப் பட்டோர் 23 பேர்;  இஸ்லாமியர் 32 பேர்; அருந்ததியர்  2 பேர்;  மலைவாழ் மக்கள் 1,  முற்பட்டோர்  68 பேர்.   பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டதால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள் இந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளார்கள்.  இந்த அளவுக்கு இடம் பெற்றதை மாற்றிட, சமூக நீதிக்குக் குழி தோண்டிப் புதைத்திட மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நுழைவுத் தேர்வினை இப்போது முதற்கொண்டே முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டிய கடப்பாடு நமக்கும், தமிழர்கள் அனைவருக்கும், ஏன் முக்கியமாக அ.தி.மு.க. அரசுக்கும் உண்டு.    வழக்கம் போல  அ.தி.மு.க. அரசு முக்கியமான இந்தப் பிரச்சினையிலும் தூங்கிவிடுமானால், 2017ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் மருத்துவக் கல்வி பகல் கனவாகி விடும்!

கேள்வி :- பொது வழங்கல் திட்டத்தின்படி  வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான அரிசி விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறதே?

கருணாநிதி:- மத்திய அரசு தமிழக அரசுக்கு  வழங்கும் அரிசியை வெவ்வேறு விலைகளில் வழங்குகிறது.  பரம ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை ஒரு கிலோ மூன்று ரூபாய் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை  ஒரு கிலோ ரூ. 5.65 என்றும், வறுமைக் கோட்டுக்கு மேலே வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை ஒரு கிலோ  ரூ. 8.30 என்றும் கணக்கிடுகிறது.  இதில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்காக வழங்கப்படும் அரிசியின் விலையைத்தான் ஒரு கிலோ ரூ. 8.30 என்பதிலிருந்து ரூ. 22.54 என்ற அளவுக்கு உயர்த்தி யிருக்கிறது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு 1.26 இலட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. இதற்கான விலையைத்தான் மத்திய அரசு ஒரு கிலோ ரூ. 22.54 என்று விலை உயர்த்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு சத்தமில்லாமல் செய்திருக்கும் கொடுமை இது.  இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

கேள்வி :- கனடா நாடாளுமன்றத்தில்,  “ஜனவரி மாதத்தை”  தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்திருக்கிறார்களே?

கருணாநிதி:-நாமெல்லாம் உளமார வரவேற்கும் செய்தி அது.  தமிழ் மொழியின் பழமை, இலக்கிய செழுமை ஆகியவற்றையும்,  கனடா சமுதாயத்திற்கு  தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, கனடா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழர், கேரி ஆனந்த சங்கரி, ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு தீர்மானமாக கனடா நாடாளுமன்றத்தில் வைத்து, அதன் மீது விவாதமும் நடைபெற்று, அக்டோபர் 5ஆம் தேதியன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில்தான் தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படுவதால்,  தமிழ்ப் பாரம்பரிய மாதமாக  கனடா நாடாளுமன்றம் தேர்வு செய்திருப்பது எவ்வளவு பொருத்தமானது?

கேள்வி :- நீதிமன்றங்கள் எவ்வளவோ கண்டனம் தெரிவித்தும்கூட, அண்ணா நூலகத்தை அ.தி.மு.க. அரசு பராமரிக்க முன் வந்ததாகத் தெரியவில்லையே?

கருணாநிதி:- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – அதனை தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நான் உருவாக்கினேன் என்ற ஒரே காரணத்திற்காக  –  அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருந்தது பற்றி நடைபெற்ற வழக்கில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களும்,  நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும் “நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன்?  உங்களுக்கு இஷ்டம் இருந்தால் 48 மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வீர்கள்.  ஜூன் 30ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கிறோம்.  அதற்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.  அதற்கான புகைப்பட ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  இறுதிக் கெடுவுக்குள் வசதிகளைச் செய்து கொடுக்கா விட்டால், நீதிமன்றமே அண்ணா நூலகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, பராமரிக்கத் தொடங்கும்.  இதைக் கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.  ஜூலை 22ஆம் தேதியன்று மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன், “நூலகத்தைப் பராமரிக்க உத்தரவிட்ட போதிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக  32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆறு இலட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டன.  ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் வெறும் 1234 புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.  அதிலும் ஒன்றுகூட தமிழ்ப் புத்தகம் இல்லை.  அந்த நூலகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும், அந்த நூலகத்தில் ஒரே ஒருவர்தான் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார். அந்த ஒரு உறுப்பினர் முன்னாள் முதல்வர் எம். கருணாநிதி அவர்கள்தான்.  அவரைத் தொடர்ந்து வந்த அரசாங்கம் உறுப்பினர்கள் பதிவு  செய்வதையே நிறுத்தி விட்டதுதான் அதற்குக் காரணம்” என்றெல்லாம் வாதாடியிருக்கிறார்.  இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நூலகத்தை முறையாகப் பராமரித்து  அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தவறினால் நீதிமன்றமே குழு அமைத்து அந்தப் பணியை மேற்கொள்ளும் என்றும் வாய் மொழியாக எச்சரித்திருக்கிறார்கள்.   ஆனாலும் அண்ணா நூலகம் இன்னமும் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றுதான் செய்திகள் வருகின்றன.  போட்டித் தேர்வுப் பிரிவில் உள்ள புத்தகங்கள் மாயமாகும் அளவுக்கு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாம்.  புதிய புத்தகங்கள் வாங்காத நிலையில் பல முக்கிய புத்தகங்கள் எல்லாம் மாயமாகிக் கொண்டு வருகிறதாம்.  புத்தகங்களின் இருப்பு விபரம், பழைய புத்தக இருப்பு விபரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க அதிகாரிகள் இதுவரை முயற்சிக்கவும் இல்லையாம்.  “ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்” என்ற போக்கில்தான் அண்ணா நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறதாம்.   அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அண்ணாவின் திருஉருவத்தைக் கொடியிலும்  வைத்துக் கொண்டு, அண்ணா பெயரிலமைந்திருக்கும் நூலகத்தைப் புறக்கணித்து வருவதுதான் மிகப் பெரிய முரண்!