இந்த வருட தொடக்கத்தில் (ஜனவரி 2016) ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு 12 நாட்களுக்கும் மேலாக அதே வளாகத்தில் கூடாரம் அமைத்து போராடி வந்த, ஆராய்ச்சி மாணவர் ரோகித், ஒரு ஞாயிறு மாலை தற்கொலை செய்து கொண்டார்.

”சிலருக்கு அவர்களுடைய பிறப்பே சாபம்தான்”: தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் கடைசி கடிதம்

இந்நிலையில், வெமுலா தலித் என்பதற்கான சான்றுகள் இல்லை என்றும் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியே காரணம் என்றும்  அவரின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. அந்த கமிஷன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அளித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

விசாரணை அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரோஹித் வெமுலாவின் நண்பர்கள் அவருடைய கடைசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். வெமுலா மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் “என் பெயர் ரோஹித் வெமுலா” என்று தொடங்கி  பல்வேறு விஷயங்கள் குறித்து வெமுலா பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் ரோஹித், “சமீபத்தில் பல்கலைக்கழக விடுதியிலிருந்து ஐந்து தலித் மாணவர்கள் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. அவர்கள் கொடுத்த அறிவிக்கையில் நாங்கள் பல்கலைக்கழகத்தின் பொது இடத்திலோ, விடுதி, பல்கலைக்கழக அலுவலக பகுதிகளிலோ நாங்கள் உலவுவது கிரிமினல் செயல் என சொல்லப்பட்டிருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.