சர்ச்சை

தேர்ச்சி பெறாத ஒரு துறையில் நிபுணத்துவம் பறைசாற்றி பணம் பிடுங்குவது குற்றம்: அபிலாஷா-ஷாலினி சர்ச்சையில் மனநல மருத்துவர் ருத்ரன்

மனநல மருத்துவர் ஷாலினி, மனநல ஆலோசகர் குறித்து ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதுகுறித்து மனநல மருத்துவர் ருத்ரன் இதுகுறித்து தனது முகநூலில் இட்டுள்ள பதிவு.

என்னைப் பார்ப்பவர் பலரது உடனடி கேள்வி-
இப்ப எல்லாம் ஏன் டிவில வரதில்லே? தொலைக்காட்சி மட்டுமல்ல அச்சு ஊடகங்களில் கூட நான் முன்போல் அடிக்கடி தென்படுவதில்லை என்பதால் சிலருக்கு என் இருப்பே கூட யாருக்கும் நஷ்டமின்றி மறதியில் காணாதொழிந்திருக்கிறது.

அச்சு ஊடகங்களைப்பொருத்த மட்டில் இதற்கான காரணத்தில் ஒரு நியாயம் இருப்பதை நான் ஏற்க விரும்புகிறேன். அச்சில் நான் வெளிப்பட ஆரம்பித்தது 1986. அந்த காலகட்டத்தில் ஆசிரியர்களும் நிருபர்களும் கிட்டத்தட்ட என் வயதையொத்து இருந்ததால் பரஸ்பரம் பரிமாற்றம் சுலபமாக இருந்தது. நாடகம், ஓவியம் என என் பிறபணிகளினாலும் பலருடன் பழக்கமும் சுலபமாய் அமைந்தது. பின்னர், என் மனநலமருத்துவ வேலை கூடியதால் நாடகம் குறைந்தது. நாள் முழுதும் என் பணியில் ஈடுபட்டதால், சாதாரணமாய் சாயங்காலங்களில் சந்தித்து வந்த பலரும் அந்த வட்டத்திலிருந்து விலகவும் நேர்ந்தது. அதே நேரம் நிருபராய் என்னை முதலில் சந்தித்து நெருக்கமாகவும் ஆன பலர் பத்திரிகை கட்டமைப்பில் மேல் பதவிகளுக்கும் செல்ல, அடுத்து வந்த இளம் பத்திரிகையாளருக்கு நான் முந்தைய தலைமுறை எனும் தோற்றமும் உருவானது.

அதே நேரம் தொலைகாட்சிகளில் நான் அதிகம் தென்பட நேர்ந்தது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்த போதும் நான் அதில் அவ்வப்போது தோன்றி வந்தாலும், தனியார் தொலைகாட்சிகள் வந்த புதிதில், பத்திரிகைகளிலிருந்து பலர் அங்கே பணியாற்ற சென்றதால் மனநலம் சார்ந்த விஷயங்களுக்கு முதலில் என்னையே அணுகும் நிலை இருந்தது. 1995 -1997 வாரந்தோறும் ஒரு மனநல விழிப்புணர்வு தொடர் உரை நான் நிகழ்த்த நேர்ந்தது. மருத்துவ பணியும் இத்தொடரும் என் எல்லா விழித்திருக்கும் நேரங்களையும் எடுத்துக் கொள்ள, முன் நெருக்கமான பழக்கத்திலிருந்தவரும் பரிச்சயமானவருமான பலருக்கு என்னிடம் வர முடியவில்லை. தொலைபேசியை நான் பயன்படுத்தாததும் ஒரு காரணம்.

அப்புறம், ராஜ் டிவியில் ஒரு தொடராய் நான் வாரந்தோறும் பேசியது ஒருவகையில் விசித்திரமாய் அமைந்த ஒன்று. ம்யுசியம் தியேட்டரில் காஃப்காவின் குறுநாவலை நாடகமாக்கும்போது பார்வையாளனாய் வந்த சரவணன், மனநலம் பற்றி சில வாரங்கள் பேச முடியுமா என்றதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன் – சில நிபந்தனைகளோடு. 1. நான் தான் எடிட் செய்வேன்.

2.உரையின் இடையில் விளம்பரம் வரக்கூடாது. (இதற்கு காரணம், பெண் மேன்மை குறித்த உரை நடுவே பெண்களை மலினப்படுத்தும் விளம்பரங்கள் வரலாம் என்பது ஓர் உதாரணம்.)
எனக்குப் பணம் வேண்டாம் ஆனால் எனக்கு சௌகரியப்படும் நேரத்தில் தான் ஷூட்டிங் எடிட்டிங் வைக்கவேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. என் நிபந்தனைகள் மீறப்பட்ட 107ம் வாரம் நிகழ்ச்சியை நிறுத்திக்கொண்டேன்.

இது இப்போது சாத்தியமா? விளம்பர மோகத்துடன், வியாபார உள்நோக்குடன் பலர் ஊடகவியலாளருடன் நெருங்குவதால், எல்லாரையும் அப்படி கணிக்கும் அவலமும் இப்போது உருவாகிவிட்டது. போலிகள் மட்டுமல்ல கற்றுத்தேர்ந்தவர்களும் தம் முகம் காட்ட சிலவிதங்களில் சிலவற்றை அனுசரிப்பதாலும், ஊடகங்களுக்கு சுலபமாய் வரக்கூடிய முகங்களும் குரல்களும் வேலையை எளிதாக்குகிறது.

தொலைபேசியிலும் பிடிக்க முடியாது, மாலை ஷூட்டிங் என்று பகல் சொன்னாலும் வர மட்டான், அப்படியே ஒப்புக்கொண்டாலும் அவனுக்கு வசதியான நேரத்தை மட்டுமே தருவான் – என என்னைப்பற்றிய சரியான கணிப்பில் பலர் வருவதில்லை. தவறான நெறியில்லா சிலருக்கு என்னால் எந்த லாபமும் வருவதில்லை. ஆகவே நான் அடிக்கடி தொலைகாட்சியில் தென்படுவதில்லை.

ஷாலினி, அபிலாஷா பற்றி எழுதியதால் தான் இதை எழுத நேர்ந்தது. அபிலாஷாவிடம் அதிகம் செலவழித்த சிலரை எனக்கும் தெரியும். அந்தப் பெண் எவ்வளவு காசு கேட்கிறாள் என்பதல்ல விஷயம் (பல மருத்துவர்களும் இதே போல் மக்களிடம் அதிகமாய் காசு கறப்பது எனக்குத் தெரியும்) – தான் தேர்ச்சி பெறாத ஒரு துறையில் நிபுணத்துவம் பறைசாற்றி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கும் கயமையே இதில் குற்றம். மனநல மருத்துவம் அதிக செலவாகும் எனும் தோற்றத்தை சில மனநல மருத்துவர்கள் உருவாக்கிவிட்டதும் போலிகள் வளர ஒரு காரணம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s